ஸ்பீட் போஸ்டில் தாலி, ஜூம் காலில் வாழ்த்து: கேரள ஜோடியின் ஊரடங்கு திருமணம்!
நூறுக்கும் அதிகமான உறவினர்கள், நண்பர்கள் Zoom காலில் சூழ நடைப்பெற்ற திருமணம்.
விக்னேஷ் மற்றும் அஞ்சலி ரஞ்சித்; இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இம்மாதம் நடைப்பெறவிருந்த அவர்களின் திருமண ஏற்பாட்டை கடந்த ஒரு வருடமாக அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர். ஆனால் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டது கொரோனா மற்றும் இந்த லாக்டவுன்.
திட்டமிட்டப்படி தங்கள் திருமணத்தை முடிக்க முடிவெடுத்த இந்த கேரள ஜோடி, அதை அற்புதமாக நடத்தியும் முடித்துள்ளனர். உலகமெங்கிலும் உள்ள அவர்களின் நண்பர்கள், உறவிகள் Zoom-இல் சூழ, அஞ்சலி கழுத்தில் தாலியைக் கட்டினார் விக்னேஷ். இதில் ஒரே ஒரு குறை என்னவென்றால் மணமக்களின் பெற்றோர்களால் இத்திருமணத்துக்கு வரமுடியவில்லை. அதனால் அவர்கள் ஜூம் வழியே தங்கள் மகளையும், மருமகனையும் வாழ்த்த முடிந்தது.
Zoom ஆப், வந்த நாள் முதல் அலுவலக மீட்டிங், குழு விவாதம், லைவ் வெபினார் என உலகில் உள்ள அனைவரையும் இணைத்துக் கொண்டிருக்க, ஒரு திருமணத்தையே ஜூம் உதவில் நடத்தியிருப்பது ஆச்சர்யமே.
புனேவில் உள்ள மணமகனின் ப்ளாட் அவரின் நண்பர்களால் அலங்கரிக்கப்பட்டு, அவர்களே மணமக்களின் சொந்தங்களாக இருந்து திருமணத்தையும் முடித்துக் கொடுத்துள்ளனர்.
“அதிர்ஷ்டவசமாக எல்லாம் நன்றாக முடிந்தது. இண்டெர்நெட் வசதி வலுவாக இருந்ததாலும், டெக்னாலஜியின் உதவியோடும், எங்கள் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்த எங்கள் திருமணம் நடந்துமுடிந்தது. இது ஒரு புது அனுபவமாகவும், மறக்கமுடியாததாகவும் அமைந்தது,” என்றார் விக்னேஷ்.
மாப்பிள்ளை வெள்ளைச் சட்டை, மற்றும் கேரள முண்டு அணிந்திட, மணப்பெண் கேரள புடவையில் பாரம்பரிய முறைப்படி வர, இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். புரோகிதர் இல்லாத காரணத்தால், தமிழ் சினிமா அலைபாயுதே-வில் வரும் மாங்கல்யாம் தந்துனானே... பாடல் பின்னால் ஒலிக்க பெண்ணிற்கு தாலி கட்டினார் மாப்பிள்ளை.
தங்கள் கல்யாணம் Zoom-ல் நடக்கப்போவது உறுதி ஆனதும், எல்லாருக்கும் ஐடி மற்றும் பாஸ்வர்ட் அனுப்ப அழகிய அழைப்பிதழ் அட்டையை டிசைன் செய்தனர். லாக் இன் நேரம், மற்றும் விவரங்களுடன் அந்த அழைப்பிதழை தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பினர் மணமக்கள்.
புனேவில் பணிபுரியும் இருவரும் தங்கள் திருமணத்துக்கு கேரளா வர இருந்தனர். ஆனால் லாக்டவுன் காரணமாக போகமுடியாமல் போனதால், அங்கேயே திருமணத்தை குறித்த தேதியில் நடத்திட முடிவு செய்தனர்.
“லாக்டவுன் தொடங்கிய நாட்களில் எப்படியாவது மே மாதத்தில் கேரளா சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் புனேவில் நிலைமை மோசமாக இருந்ததால் போக முடியாது என்று தெரிந்தது. அதே சமயம் திருமணத்தை ஒத்திவைக்கவும் மனம் இல்லை,” என்றார் அஞ்சலி.
கேரளாவில் இருக்கும் மணமக்களின் பெற்றோர்கள் தாங்கள் வாங்கிவைத்திருந்த ‘மாங்கல்யத்தை’ (தாலி) ஸ்பீட் போஸ்டில் மணமக்களுக்கு அனுப்பினர். உரிய நேரத்தில் தாலி கிடைத்ததால், குறித்த தேதியில், குறிப்பிட்ட அதே நேரத்தில் தாலியை விக்னேஷ், அஞ்சலி கழுத்தில் கட்டினார்.
லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் இப்படி சிறிய அளவில் நடைப்பெற்றுள்ளது. சில கல்யாணங்கள் தள்ளிவைக்கப்பட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.