மகனுடன் சேர்ந்து 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற கேரள தம்பதி!
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையே இல்லை. இதற்கு சரியான உதாரணம் கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதி.
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையே இல்லை. இதற்கு சரியான உதாரணம் கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி. இவர்கள் தங்கள் மகனுடன் சேர்ந்து இந்த ஆண்டு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொகமத் முஸ்தபாவும் அவரது மனைவி நுசைபாவும் பன்னிரண்டாம் வகுப்பிற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களது மகன் ஷம்மாஸ் நல்ல மதிப்பெண்களுடன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
முஸ்தபா ஒரு தொழிலதிபர். பத்தாம் வகுப்பு முடித்ததும் வேலை தேடி வளைகுடா நாடுகளுக்குச் சென்றார். அபு தாபியில் கால்நடை மருத்துவமனை ஒன்றில் கிட்டத்தட்ட நான்காண்டுகள் பணியாற்றினார். சொந்த ஊரில் திருமணம் நடைபெற்றது. தம்பதிகள் வளைகுடா நாடுகளுக்கு மாற்றலாயினர்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இவர்கள் கேரளா திரும்பினர். கேரளா வந்த பின்னர் வெவ்வேறு தேர்வு மையங்களுக்குச் சென்று 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவது குறித்து விசாரித்தனர். அப்போது கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் குறித்து தெரிந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வகுப்புகளில் சேர்ந்துகொண்டனர்.
“நாங்கள் இருவரும் ஒன்றாகவே வணிகத்தை நடத்துகிறோம். படிப்பதற்காக இருவரும் நேரம் ஒதுக்கினோம். நாங்கள் வகுப்பில் சேர்ந்தது குறித்து எங்கள் மகன் மிகவும் சந்தோஷப்பட்டார். பாடங்களில் எங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவர் உதவுவார். பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகளும் கேட்பார். அவர் எப்போதும் நன்றாக படிப்பார். 10, 11-ம் வகுப்புகளில் A+ வாங்கினார்,” என்று முஸ்தபா `தி நியூஸ் மினிட்’ –இடம் தெரிவித்துள்ளார்.
நுசைபா தேர்வில் 80 சதவீதம் எடுத்துள்ளார். முஸ்தபா தொழில் ரீதியாக பயணிக்க வேண்டியிருந்ததால் வகுப்புகளைத் தவறவிடும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
“நானும் என் மனைவியும் தேர்வு எழுதுவது குறித்து வெளியில் சொல்லவேண்டாம் என்றே ஆரம்பத்தில் நினைத்தோம். இந்த வயதில் படித்து தேர்வெழுதுவது எங்களுக்கு சற்று தர்மசங்கடமாக இருந்தது,” என்று முஸ்தபா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது
“ஆனால் இதில் தர்மசங்கடமாக உணர ஏதுமில்லை என்பதைப் புரிந்துகொண்டோம். பலர் எங்களை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் படிக்க முன்வர நாங்கள் உந்துதலாக இருந்துள்ளோம். படிப்பிற்கு வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்தியுள்ளோம்,” என்றார்.
மூவருமே வணிகப் பாடத்தில் மேற்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளனர். ஷம்மாஸ் பட்டயக் கணக்காளர் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். அவரது பெற்றோர் வணிகப் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதேபோல் இந்த ஆண்டு ஜூலை மாதம் மேகாலயாவில் வசிக்கும் 50 வயது பெண்மணி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவருக்கு நான்கு குழந்தைகளும் இரண்டு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
கல்விக்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை இவர்களைப் போன்ற பலர் உணர்த்துகின்றனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA