அன்று வீட்டிலேயே உள்ளாடை தயாரிப்பு; இன்று ரூ.500 கோடி நிறுவனம் - சாதித்த இல்லத்தரசி!
வீட்டிலேயே உள்ளாடைத் தயாரிப்பு தொழிலைத் தொடங்கி இன்று ரூ.500 கோடி வர்த்தக நிறுவனமாக வளர்த்தெடுத்த கேரள இல்லத்தரசி ஷீலாவின் உத்வேகப் பயணம் இது.
பொதுவாக வேலைக்குச் செல்லாத இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலைக்கே நேரம் போதாது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கணவனை அலுவலகத்துக்கு தயார்ப்படுத்துவது என்று ஏகப்பட்ட இடையறா வேலையில்தான் இருப்பார்கள். அப்படியும் பலரும் கூடை பின்னுவது, ஸ்வெட்டர் தயாரிப்பது, தையல் என்று தனக்கென்று முடிந்ததை செய்து வருவாய் ஈட்டுவதிலும் முனைப்பாக இருக்கின்றனர்.
மேலும், இந்தியா முழுவதும் உள்ள இல்லத்தரசிகளுக்குச் சொந்தமாக வெளியில் சென்று சொந்த தொழிலைத் தொடங்க வாய்ப்புகளும் வளங்களும் கிடைப்பதில்லை. ஆனால், கேரளாவைச் சேர்ந்த அத்தகைய இல்லத்தரசி ஒருவர் தனது வீட்டிற்குள்ளேயே உள்ளாடைகள் தயாரிப்பில் இறங்கி இன்று அது ரூ.500 கோடி வர்த்தகத் தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது.
சவாலே சமாளி!
வி-ஸ்டார் கிரியேஷன்ஸ் (
Creations) நிறுவனம் இன்று இந்தியாவில் உள்ளாடைகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிராண்டுகளில் ஒன்றாகும். இது வீட்டில் இருந்தபடியே வளர்த்தெடுக்கப்பட்ட தொழில் என்பது ஆச்சரியமானதே.இத்தகைய அதிசயத்தை நிகழ்த்திக் காட்டிய பெருமைக்குரியவர்தான் ஷீலா கொச்சவ்செப். இவருடைய கணவர் தொழிலதிபராக இருந்ததால் மனைவியின் ஆசைக்கு தடை சொல்லவில்லை. ஆனால், குடும்பப் பணத்தை இதில் முதலீடு செய்யக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். மாத வாடகைக்கான இடமும் கூடாது என்பதும் ஒரு சவால்.
பல ஆண்டுகளாக இல்லத்தரசியாக இருந்த ஷீலா, தனது கணவரின் சவாலை ஏற்று, வங்கியில் ஒரு சிறிய கடனைப் பெற்று, ’வி-ஸ்டார் கிரியேஷன்ஸ்’ என்ற தனது சொந்த உள்ளாடைத் தயாரிப்பு பிராண்டைத் தொடங்க முடிவு செய்தார். இது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எளிமையான மற்றும் நாகரிகமான வடிவமைப்புகளை வழங்குமாறு உத்தேசித்துக் கொண்டது.
ஸ்டார்ட்-அப் உதயமான தருணம்
ஷீலா கடன் வாங்கி 10 பேரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்தார். இது 1995ல் ஆடை வணிகமாகத் தொடங்கியது. பின்னர், கேரளாவில் உள்ள பெரும்பாலான உள்ளாடைகள் மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து இறக்குமதியாவது என்பதை அறிந்து கொண்டார். அதாவது, சொந்த மாநிலத்திலேயே தயாரிக்கப்படும் உள்நாட்டு பிராண்ட் எதுவும் இல்லை என்பதையும் புரிந்துகொண்டார்.
இதனையடுத்து, ஷீலா விரைவில் தனது நிறுவனமான வி-ஸ்டார் கிரியேஷன்ஸ், டிசைன்கள் மற்றும் வண்ணங்களை எளிமையாக வைத்து உள்ளாடைகளை தயாரிக்கத் தொடங்குவது பற்றி முடிவு செய்தார். ஆரம்பத்தில், ப்ரா மற்றும் உள் காற்சட்டைகள் 10 ஊழியர்களால் கையால் தைக்கப்பட்டன. ஒவ்வொரு ஆடையிலும் தனிப்பட்ட முத்திரையைப் பதித்தனர்.
பெரிய கவர்ச்சிகரமான டிசைன்களெல்லாம் தேவையில்லை என்று சாதாரணமான டிசைன்களில் பெண்களுக்கான உள் காற்சிராய்களை தயாரித்தார். அவரது எளிய தயாரிப்பு மற்றும் மலிவு விலை காரணமாக, வி-ஸ்டார் கிரியேஷன்ஸ் வளரத் தொடங்கி இப்போது பல மில்லியன் டாலர் நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தின் தொடக்கக் காலம் தொட்டு ஷீலா கொண்டிருந்த தாரக மந்திரம் ஒன்றுதான். அதை இன்றளவும் பின்பற்றி வருவதால் தொழிலில் சாதிக்க முடிந்திருக்கிறது. அந்த மந்திரச் சொல் இதுதான்:
“மெதுவாகவே வளரலாம், ஆனால் உறுதித் தன்மையுடன்...”
2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, 1995-ஆம் ஆண்டில் ஷீலா நிறுவிய வி-ஸ்டார் கிரியேஷன்ஸின் வருவாய் சுமார் ரூ.500 கோடியை எட்டியுள்ளது. ஜீ பிசினஸின் கூற்றுப்படி, 2020-ஆம் ஆண்டில் ஷீலாவின் சொத்து மதிப்பு ரூ.540 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ரூ.75,000 கோடி மதிப்பு தொழில் கோட்டையைக் கட்டமைத்த இந்திய சிங்கப்பெண்!
Edited by Induja Raghunathan