குடும்ப வறுமையால் துபாயில் பணிக்குச் சென்ற சேட்டனுக்கு அடித்தது ஜாக்பாட்...
18 மாதங்களாக தொடர்ச்சியாக அபுதாபி லாட்டரி டிக்கெட் வாங்கி வந்த கேரள இளைஞருக்கு, இறுதியாக அடித்தது பம்பர் லாட்டரி... கத்தையா கிடைத்த பணப்பரிசு எம்புட்டு தெரியுமா?
ஐக்கிய அரபு எமிரேட்சில் அபுதாபி ’பிக் டிக்கட் லாட்டரி’கள் படு ஃபேமஸ். கோடிகளை வாரி வழங்கும் லாட்டரி டிக்கெட்டை வாங்கிக் கனவுகளோடு இருப்பவர்கள் ஏராளம். கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கிற லாட்டரிச் சீட்டில் இந்தியர்கள் பலர் பலமுறை பெரிய அளவிலான பரிசுத்தொகையை தன்வசப்படுத்தியுள்ளனர்.
அப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3ம் தேதி) நடந்த லாட்டரி குலுக்கலில், கேரள மாநிலம் செங்கண்ணூரை சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது.
இதன் இந்திய மதிப்பு ரூ28 கோடி. 28 வயதான ஸ்ரீனு ஸ்ரீதரன், துபாயில் மினா ஜெபல் அலி என்ற பகுதியில் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
ஒவ்வொரு மாதமும், ‘அபுதாபி பிக் டிக்கெட்’ குலுக்கலின் போது புதிய கோடீஸ்வரர்கள் உருவாகி வருகின்றனர். வெற்றியாளர்களில் பெரும்பாலானோர் டிக்கெட்டை தனியாகவோ அல்லது ஒரு சில நண்பர்களுடன் இணைந்து வாங்குகிறார்கள். இந்த முறையும், முதல் பரிசை வென்று 22 குடும்பங்கள் அதிர்ஷ்டசாலிகளாகி உள்ளனர்.
ஆம், கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் அவருடைய நண்பர்கள் 21 பேருடன் இணைந்து பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். ஒவ்வொருவரும் 22.72 திர்ஹாம் பங்கீட்டில் 500 திர்ஹாம் மதிப்புள்ள லாட்டரி சீட்டை ஸ்ரீனுவின் பெயரில் வாங்கியுள்ளனர்.
பரிசுத் தொகை நண்பர்களிடையே சமமாகப் பிரிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் சுமார் 1.32 கோடி ரூபாய் கிடைக்கும். அவர்களில் 20 பேர் மலையாளிகள். குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், கர்நாடக நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.
“இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் தான் வென்றோம் என்பதை என்னாலும் என் நண்பர்களாலும் இன்னமும் நம்ப முடியவில்லை. அதை உணருவதற்கு சிறிது நேரம் எடுத்தது. நாங்கள் கடந்த 18 மாதங்களாக லாட்டரிச் சீட்டு வாங்கிவருகிறோம்,” எனும் ஸ்ரீனு வாழ்த்து கூறுபவர்களின் தொலைபேசி அழைப்புகளால் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார்.
ஆனால், ஸ்ரீனு முதல் பரிசை வென்றுள்ளார் என்பதை தெரியப்படுத்த, தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து வலைவீசி தேடியது லாட்டரி சீட்டு நிறுவனம்.
ஒவ்வொரு மாதமும் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் முன்னிலையிலே, லாட்டரிச் சீட்டு குலுக்கப்பட்டு வெற்றியாளர்களது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறிவிப்பு வெளியிடப் படும். ஸ்ரீனுவின் லாட்டரிச் சீட்டில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது, “ஸ்ரீனு இல்லை. நான் சனீஷ் குமார். எனக்கு ஸ்ரீனு என்று யாரையும் தெரியாது. ராங் நம்பர்,” என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இரண்டாவது முறை அழைத்த போது, ‘உங்களுக்கு என்ன பிரச்சினை? அரை மணி நேரம் கழித்து போன் பண்ணுங்க,” என்று கூறியுள்ளார். பிறகு, பிக் டிக்கெட் நிறுவனத்தார் உண்மையான வெற்றியாளரை வலைவீசித் தேடி, திங்களன்று ஸ்ரீனுவை கண்டறிந்துள்ளனர்.
“லாட்டரி வின்னர் அறிவிப்பு பற்றி எனக்குத் தெரியாது. கேரளாவில் உள்ள ஒரு நபரின் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி தான் டிக்கெட் வாங்கப்பட்டது. அவர் குழம்பி போயி பேசியுள்ளார்,” என்றார் ஸ்ரீனு.
இருப்பினும், ஸ்ரீனு மற்றும் அவரது நண்பர்களுக்கு வாழ்க்கை வழக்கம் போலவே தொடர உள்ளது. முதல் பரிசை வென்றாலும், அவர்கள் யாரும் சொந்த நாடு திரும்பும் திட்டத்தில் இல்லை. 22 நண்பர்களும் இரண்டு வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிவதால் அவர்களால் வெற்றியை ஒன்றாக கொண்டாட முடியவில்லை. எனவே, அதை வெள்ளிக்கிழமை கொண்டாட அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் ஸ்ரீனு.
“நாங்கள் அனைவரும் 1500 திர்ஹாம் மாதச்சம்பளத்திற்கு பணியாற்றிகிறோம். நான் ஆறு ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வருகிறேன். சொந்த ஊரில் வீடு கட்டிக் கொண்டிருந்தோம். போதிய காசு இல்லாததால் கட்டுமான பணி பாதியிலே நிற்கிறது. இந்த பணத்தை கொண்டு நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளை முடிப்பேன் என்று நம்புகிறேன்.
எனக்கு சில கடன்கள் உள்ளன. அதையும் செலுத்திவிட்டு, மீதி பணத்தை சேமிப்பாக வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன். இந்த ஜாக்பாட் எங்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் கிடைத்துள்ளது. இப்போது நாங்க எல்லோருமே அடுத்த மாதம் காசோலை கைக்கு கிடைக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம், என்று மகிழ்வுடன் கூறினார் அவர்.
தகவல் உதவி: mathrubhumi & www.khaleejtimes.com