பழங்குடியின பள்ளி மாணவர்ளுக்கு ‘அன்னபூர்ணியாக’ மாறிய கேரள ஆசிரியை!
கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் பழங்குடியின மாணவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் பழங்குடியின மாணவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
‘காலை உணவை எக்காரணம் தவிர்க்கக்கூடாது’ என்பதே, ஊட்டச்சத்து நிபுணர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பலரும் கொடுக்கும் பொதுவான அறிவுறுத்தலாக உள்ளது. இருப்பினும், இப்போதும் மதிய உணவிற்காக பள்ளிக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்கள், காலை உணவைப் பற்றி சிந்திக்க முடியும்.
குறிப்பாக மலைகிராமங்கள், பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு என்பது பகல் கனவாகவே உள்ளது. ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வியோடு, காலை உணவையும் கொடுத்து பாதுகாத்து வருகிறார்.
முறிக்காட்டுக்குடியில் உள்ள அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் தோட்ட வேலை மற்றும் கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகள் படித்து வருகின்றனர். இவர்களது பெற்றோர் வேலைக்காக அதிகாலையிலேயே வீட்டை விட்டு சென்றுவிடுவதால், குழந்தைகளுக்கு காலை உணவு கிடைப்பது அரிதானதாக உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் பள்ளிக்கு வந்து சேரும் இவர்கள், பள்ளியில் மதியம் உணவு வழங்கப்படும் வரை பட்டினியால் வாடி வந்துள்ளனர்.
ஆனால், முறிக்காட்டுக்குடி பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் லின்சி ஜார்ஜ், தற்போது கண்ணம்பாடி மற்றும் கோடாலிப்பாரா பழங்குடியினக் குடியிருப்புகளைச் சேர்ந்த பட்டினியால் வாடும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு சுடச்சுட காலை உணவு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
"சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாமல் தவிக்கின்றன, பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவே அவர்களுக்கு ஒரே உணவாக உள்ளது..."
அரசு ஒதுக்கிய நிதியில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 300 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒருநாள் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆசிரியை லின்சியிடம் தான் காலை முதல் மாலை வரை பசியில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு மனம் வாடிய லின்சி, ஆரம்பத்தில் தனது சொந்த சம்பளத்தில் இருந்து 50 மாணவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதனையடுத்து, பள்ளியைச் சேர்ந்த சக ஆசிரியர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவு கிடைக்க உதவி வருகின்றனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இடுக்கி எம்பி டீன் குரியகோஸ் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த காலை உணவு திட்டத்தை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் விரிவுபடுத்தும் முயற்சியில் லின்சி ஈடுபட்டுள்ளார்.
1 லட்சம் ஏழை மாணவர்கள் 5 கோடி ரூபாய் கல்வியுதவி பெற உதவிய 80 வயது ஆசிரியர்!