1 லட்சம் ஏழை மாணவர்கள் 5 கோடி ரூபாய் கல்வியுதவி பெற உதவிய 80 வயது ஆசிரியர்!
அரசாங்கமும் அரசு சாரா அமைப்புகளும் ஏழை மாணவர்களின் கல்விக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி உதவி வரும் நிலையில் இந்த விவரங்கள் மாணவர்களைச் சென்றடைய ஒரு பாலமாக இருந்து வருகிறார் பணி ஓய்வு பெற்ற 80 வயது ஆசிரியர் நாராயண நாயக்.
நாராயண நாயக் தக்ஷின கன்னடாவின் பண்ட்வால் தாலுகாவில் இருக்கும் கார்பி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவர் எங்கு இருப்பார் தெரியுமா?
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவர் இருப்பார்.
மாணவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் வீட்டிற்கும் சென்று அவர்களை சந்திக்கிறார்.
சந்தித்து என்ன செய்கிறார்? படிப்பிற்காக செலவு செய்ய முடியாத ஏழை மாணவர்களைக் கண்டறிந்து அவர்களின் மேற்படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க உதவி செய்கிறார். அவர்களுடன் கலந்து பேசி அவர்களுக்கு பொருத்தமான ஸ்காலர்ஷிப்பைத் தெரிந்துகொண்டு பலனடைய வழிகாட்டுகிறார்.
நாராயண நாயக் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 2001-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றுள்ளார். வழக்கமாக ஓய்வு பெற்ற முதியவர்கள் வீட்டில் மகன், மகள், பேரக்குழந்தைகள் என நாட்களைக் கழிக்க, இவரோ சமூக நலனில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இவரது வழிகாட்டுதலில் இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரையில் ஸ்காலர்ஷிப் வாங்கிக்கொடுத்து உதவியுள்ளார் நாராயன நாயக்
”ஆசிரியராக இருந்தபோதே இந்த சேவையை செய்து வந்தேன் என்றாலும் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டதால் அதிக நேரம் ஒதுக்கமுடிகிறது,” என்கிறார்.
தினமும் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்து மாணவர்களைக் கண்டறிந்து வழிகாட்டி வருகிறார் நாராயண நாயக். 40,000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் இவர், இதில் பாதி தொகைக்கும் மேல் பயணத்திற்காக செலவு செய்கிறார்.
கல்வியின் அருமை
நாயக் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் படிப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். படிப்பிற்காக செலவு செய்யும் சூழல் வீட்டில் இல்லை. ஐந்தாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட குடும்பத்தில் முடிவு செய்திருக்கின்றனர். எவ்வளவோ போராடி, மன்றாடி, பட்டினி கிடந்து அப்பாவின் சம்மதத்தைப் பெற்று மேற்கொண்டு படித்திருக்கிறார்.
மிகுந்த சிரமங்களுக்கிடையில் பிஎட் படித்தவர் கன்னடம், இந்தி ஆகிய பிரிவுகளில் எம்.ஏ முடித்தார்.
கஷ்டப்பட்டு படித்ததால் படிப்பின் அருமையை உணர்ந்திருக்கிறார். வாழ்க்கையில் ஒருவர் வெற்றியடையவேண்டுமானால் படிப்பு மட்டுமே கைகொடுக்கும் என்பது இவரது திடமான நம்பிக்கை.
“படிக்கறதுக்காக நான் கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதே மாதிரியான கஷ்டம் மற்ற மாணவர்களுக்கு வரக்கூடாது. ஏழை குடும்பங்களைச் சேர்ந்த, படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்களைக் கண்டறிந்து, தகுதியானவர்களுக்கு கல்வி உதவி கிடைக்க உதவ முடிவு செய்தேன்,” என்கிறார்.
அரசாங்கத்தின் கல்வி உதவி மட்டுமல்லாது எத்தனையோ அரசு சாரா அமைப்புகளும் ஏழை மாணவர்களின் படிப்பிற்கு உதவி செய்கின்றன. ஆனால், இந்த விவரங்கள் மாணவர்களைச் சென்றடைவதில்லை. எனவே, தகுதியான மாணவர்களை ஸ்காலர்ஷிப் வழங்கும் அமைப்புகளுடன் இணைக்க முடிவு செய்தார்.
மாணவர்களிடையே ஸ்காலர்ஷிப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். உதவி தேவைப்படும் ஏழை மாணவர்களைக் கண்டறிவது, அவர்களது பின்னணியைத் தெரிந்துகொள்வது, அந்த விவரங்களை சரிபார்ப்பது, விண்ணப்பங்கள் பூர்த்தி செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விண்ணப்பத்தின் அவ்வப்போதைய நிலையைக் கேட்டறிவது என முழுமையான சேவையை வழங்குகிறார்.
மேலும், ஏழை மாணவர்களின் படிப்பிற்காக தனது ஓய்வூதியத் தொகையிலிருந்தும் கொடுத்து உதவுகிறார்.
“எனக்கு 80 வயதாகியிருக்கலாம். ஆனாலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னால வெளியில் சென்று மாணவர்களை சந்திக்க முடிகிறது. படிப்பில் ஆர்வம் கொண்ட ஏழை மாணவர்களின் சூழலை நன்கு உணர்ந்தவன் நான். அவர்களுக்கு உதவுவதை என் கடமையாக நினைக்கிறேன்,” என்கிறார் நாராயண நாயக்.
படங்கள் உதவி: Better India