உத்தர்கண்ட் வெள்ள பாதிப்பு மீட்புப் பணிக்கு ட்ரோன்கள் அனுப்பியுள்ள சென்னை நிறுவனம்!
சென்னையைச் சேர்ந்த ட்ரோன் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் மூன்று வகையான ட்ரோன்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுகிறது.
உத்தர்கண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உருகி கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா மின் உற்பத்தி திட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த வெள்ளத்தால் கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை துணை கமாண்டண்ட், கருடா ஏரோஸ்பேஸ் (Garuda Aerospace) நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு மீட்டுப் பணிகள் தொடர்பாக உதவி கோரியுள்ளார்.
கருடா ஏரோஸ்பேஸ் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப். இந்நிறுவனம் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை வடிவமைத்து உருவாக்கி வருகிறது. இந்த ட்ரோன்கள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உத்தர்கண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பான மீட்புப்பணிகளுக்கு ஆதரவளிக்க கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்நிறுவனம் இதற்காக மூன்று வகையான ட்ரோன்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
1. வீடியோ கண்காணிப்பு ட்ரோன் (Video Surveillance Drone): நிகழ்நேர அடிப்படையில் தகவல்களை வழங்கி பாதிப்புகளை மதிப்பிட இந்த வகை ட்ரோன் உதவும்.
2. இணைப்பு ட்ரோன் (Stringing Drone): மனிதர்களையும் பொருட்களையும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அனுப்புவது தொடர்பான பணிகளில் இந்த ட்ரோன் வகை உதவும்.
3. டெலிவரி ட்ரோன் (Delivery Drone): கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் மற்ற வெள்ள பாதிப்பு நேரங்களிலும் உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்க்க உதவிய இந்த வகை ட்ரோன் தற்போது பயன்படுத்தப்படும். இதற்கான செலவு மிகவும் குறைவு.
“3 ட்ரோன்கள் மற்றும் 4 விமானிகள் அடங்கிய எங்கள் குழு ஏற்கெனவே தெஹ்ராதூனில் தயார்நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விமானம் மூலம் குழுவை ஜோஷிமாத் அழைத்துச் செல்ல உள்ளனர். பிறகு எங்கள் பணி தொடங்கும். தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து செயல்பட உள்ள முதல் ட்ரோன் ஸ்டார்ட் அப் நாங்கள்தான்,” என்றார் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் அக்னீஷ்வர் ஜெயபிரகாஷ்.
மேலும் கருடா நிறுவனம் எப்போதும் நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று, வெட்டுக்கிளி தாக்குதல் போன்ற தேசிய அளவிலான நெருக்கடி சூழல் ஏற்படும்போது கருடா நிறுவனத்தின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.