'2047ல் இந்திய மக்கள் தொகை 161 கோடியை எட்டும்'; ஆய்வில் தகவல்
இந்தியாவின் மக்கள்தொகை 2048ம் ஆண்டில் 1.61 பில்லியனை எட்டிவிட்டு, 2100ம் ஆண்டில் குறையுமாம். ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் மக்கள்தொகை தற்போது அதிகரித்து வரும் விகிதத்தை வைத்துப் பார்க்கும்போது 2047ம் ஆண்டு 1.61 பில்லியனை (161 கோடி) எட்டும் என மதிப்பிடப்படுகிறது. அதன் பிறகு 2100ம் ஆண்டில் 1.03 பில்லியனாகக் குறையும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
அதாவது 21ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்காது என்று லேன்செட் ஆய்வு கணிக்கிறது.
இருப்பினும் 2046ம் ஆண்டிற்குப் பின்னரே மக்கள் தொகை குறையத் தொடங்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு கருத்தடை முறைகள் குறித்த விழிப்புணர்வும் கல்வியறிவும் கிடைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே மக்கள்தொகை குறைய வாய்ப்பிருப்பதாக மதிப்பிடப்படுகிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் Institute of Health Metrics and Evaluation உடன் இணைந்த அறிவியலாளர்கள் குழு வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
நாட்டின் மக்கள்தொகையை பழையபடி கொண்டு வருவதற்கு ஒரு பெண் எத்தனைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) ஒரு முக்கிய அளவீடாகும்.
மக்கள் எண்ணிக்கை குறைந்தாலும்கூட தொடர்ந்து இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவே இருக்கும். மக்கள்தொகையைப் பொறுத்தவரை நைஜீரியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் ஆகும்.
“நாங்கள் எடுத்துக்கொண்ட மாதிரி மக்கள்தொகையின்படி அனைத்துப் பெண்களும் 16 ஆண்டுகள் கல்வியறிவு பெற்றவர்களாகவும் 95% பெண்கள் கருத்தடை முறைகளை அணுகமுடிகின்ற நிலையில் இருப்பவர்களாகவும் உள்ள நிலையில், உலகளவிலான மொத்த கருவுறுதல் விகிதம் 1.41 (1.35-1.47) என கணிக்கப்படுகிறது,” என அறிவியலாளர்கள் தெரிவித்ததாக ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.
தகவல் உதவி: தி ஹிந்து