மே 17 முதல் எல்.ஐ.சி பங்குகள் பரிவர்த்தனை: கள்ளச் சந்தையில் 7% பிரிமியம் விலையில் விற்பனை!
பங்குகளை வெளியிடும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்கு விலையான ரூ.902 முதல் ரூ.965 க்கு மேல் பிரிமியமாக ரூ.65 முதல் ரூ.67 வரை கள்ளச்சந்தை பங்கேற்பாளர்கள் மற்றும் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொது பங்கு வெளியீடாக கருதப்படும் ஆயுள் காப்பீடு நிறுவனம் எல்.ஐ.சி., பங்குகள் கள்ளச்சந்தையில் கவனத்தை ஈர்த்து, அதன் விலையான ரூ.902 முதல் ரூ.965 க்கு மேல் பிரிமியமாக ரூ.65 முதல் ரூ.67 வரை எதிர்பார்க்கப்படுகிறது. இது 7 சதவீதம் அதிகமாகும்.
எல்.ஐ.சி., நிறுவனம் தனது பங்கு வெளியீடு விலையை ரூ.902 முதல் ரூ.965 வரை நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், ரூ.21,000 கோடி திரட்ட உள்ளது. பங்கு வெளியீடு காலம் முடிந்த ஒரு வாரத்திற்கு பிறகு மே 17 ம் தேதி பங்குகள் பரிவர்த்தனை துவங்கும்.
மொத்தம் 22.13 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளன. இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 3.5 சதவீதமாகும். அரசு துவக்கத்தில் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக திட்டமிட்ட நிலையில், இறுதியில் 3.5 சதவீதமாக குறைத்துள்ளது.
ஐபிஓ-விற்கு முந்தைய விஷயங்களில் ஆர்வம் கொண்ட, கள்ளச்சந்தை நோக்கர்கள், இணையதளங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள், நிறுவனம் பெறக்கூடிய அதிக பிரிமியத்தை விட ரூ.65 முதல் ரூ.67 பிரிமியம் குறைவு தான் எனக் கருதுகின்றனர். ஆனால், பங்கு வெளியீட்டின் அளவு பெரியது என்பதால் இந்த போக்கு மாறலாம் என்றும் கருதுகின்றனர்.
ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி பங்கு வெளியீட்டில் பல்வேறு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு ரூ.45 சலுகையும் பாலிசிதாரர்களுக்கு ரூ.60 சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நெருக்கடி உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சனைகள் காரணமாக, இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. பங்கு வெளியீட்டிற்கு திட்டமிட்டிருந்த மொபிகுவிக் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளன.
சந்தையின் போக்கை அடுத்து அரசும் எல்.ஐ.சி வெளியீட்டின் அளவை குறைத்துள்ளது.
நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பான ரூ.5.39 லட்சம் கோடியை விட, அதன் சந்தை மதிப்பீடு 1.1 மடங்கு அதிகம் என சந்தை நோக்கர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், அதிக ரியல் எஸ்டேட், அதிக ஏஜெண்ட்கள், குறைவான டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்டவை பாதகமான அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
ஆங்கிலத்தில்: அபராஜிதா சக்சேனா | தமிழில்: சைபர் சிம்மன்