தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதையே லட்சியமாகக் கொண்டு வாழும் ’அன்னை’
தீண்டாமையை விட கொடுமையாக நடத்தப்பட்ட தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே 16 வயதில் மருத்துவராகும் சபதம் எடுத்து 35 ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்காக சேவையாற்றி வருகிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன்.
40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் பெண் படிக்க வேண்டும் அதிலும் குறிப்பாக மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் அவர்களின் பெற்றோர் மருத்துவராக இருக்க வேண்டும் அல்லது பணபலம் படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தமிழகத்தின் கோவில் நகரமான கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ரேணுகாவிற்கு மருத்துவராகும் லட்சியம் எப்படி வந்தது? அதை அவர் எப்படி சாத்தியமாக்கி தனது மருத்துவச் சேவையை 35 ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பதைக் கூறினால் இன்றைய காலகட்டத்தில் மருத்துவம் படிப்பவர்களுக்கும் எதிர்காலத்தில் மருத்துவத்தை விரும்பிப் படிக்கப் போகிறவர்களுக்கும் நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
மருத்துவத் துறையை பணம் சம்பாதிக்கும் அமுதசுரபியாக பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வரும் ரேணுகா ராமகிருஷ்ணனிடம் யுவர் ஸ்டோரி தமிழ் பிரத்யேக நேர்காணல் கண்டது. தான் மருத்துவராக உறுதியேற்ற தருணத்தை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“சிறு வயது முதலே நான் படு சுட்டியான பெண் அப்பா ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. விளையாடும் போது கூட எல்லோருக்கும் ஊசி போட்டு விடுவது போன்றே விளையாடுவேன். ஒரு நாள் பள்ளியில் நடைபெற இருந்த மாறுவேட போட்டியில் தொழுநோயாளி வேடமிட முடிவு செய்து எப்படி நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டேன். அப்போது அப்பா தொழுநோயாளியாக வேடமிட்டு நடித்துக் காட்டினார் அதை பார்த்து நானும் அப்படியே அடுத்த நாள் பள்ளியில் நடித்து பரிசை வென்று வந்தேன். தொழுநோயாளியாக சிறிது நேரம் நடிப்பதே கஷ்டமாக இருக்கிறதே அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற எண்ணம் நான் 8 வயதாக இருக்கும் போதே வந்துவிட்டது,” என்றார்.
எனக்கு 16 வயது இருந்த போது (மகாமக சமயம் அது) மகாமக குளத்தில் புனித நீராடுவதற்காக பலரும் வந்து சென்று கொண்டிருந்தனர். குளக்கரையின் ஒரு பகுதியில் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். என்னவென்று பார்த்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது, குளத்தில் ஒரு பிணம் மிதந்து கொண்டிருந்தது.
அந்த ஆண் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் உடம்பில் ஆடைகளின்றி இறந்து மிதந்த அந்த உடலை எடுத்து தகனம் செய்யக் கூட யாரும் தயாராக இல்லை. மாறாக குளத்தை எப்படி சுத்தம் செய்வது என்று பேசிக் கொண்டும், குளத்தை கடந்து செல்பவர்கள் மூக்கை பொத்திக் கொண்டுமே நடந்தனர்.
சாதிகளால் நடக்கும் தீண்டாமைக் கொடுமையை விட மோசமான தொழு நோயாளியின் நிலை எனக்கு மன அழுத்தத்தை தந்தது. நானே குளத்தில் இறங்கி என்னுடைய துப்பட்டாவால் அந்த ஆணின் சடலத்தை மூடினேன். உடலை தூக்குவதற்காக அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்த போதும் அவர்கள் முன்வரவில்லை. ஒருவழியாக ரிக்ஷாக்காரர் ஒருவரை தேடிப்பிடித்து அவருடைய உதவியுடன் உடலை ஏற்றிக் கொண்டு சுடுகாட்டிற்கு சென்றேன்.
முதன் முதலாக இறந்த உடல் ஒன்றை என் மடியில் கிடத்தி இருந்தேன், தொழுநோயாளி என்பதால் உடலை தகனம் செய்யக் கூட 2 மயானங்கள் இடம் தரவில்லை. கடைசியாக கும்பகோணத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் வயதான முதியவர் ஒருவர் இருந்த இடுகாட்டில் இறந்த தொழுநோயாளியின் உடலை தகனம் செய்ய ஒப்புகொண்டார்.
என்னிடம் இருந்த பாக்கெட் மணி 10ரூபாயை அந்த முதியவரிடம் தந்து உடலை எரிக்கச் சொன்னேன். அந்த முதியவர் என் காலில் விழுந்து வணங்கி தொழுநோயாளியின் உடலை எரிக்க தேவையானவற்றை செய்தார். அந்த உடல் எரிந்த சமயத்தில் ஆன்மாவின் வாசனையை உணர்ந்தேன். அந்த தொழுநோயாளியின் சாம்பல் மீது ஒரு சபதம் ஏற்றேன்.
அன்று மாலை வீட்டிற்கு சென்றதும் என்னுடைய அப்பா நான் வாட்டமாக இருப்பதை பார்த்து என்ன விஷயம் என்று கேட்டார். அவரிடம் நடந்தவற்றைக் கூறினேன். என்னை உச்சிமுகர்ந்து முத்தமிட்டார். என் விருப்பப்படியே தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவராக அனைத்து உதவிகளையும் செய்வதாகச் சொன்னார். சமூகத்தால் வெறுக்கப்படும் மனித இனத்திற்கு பாடுபட வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து மெரிட்டில் புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் மருத்துவ இடம் பெற்றதாகக் கூறுகிறார் ரேணுகா.
இளநிலை மருத்துவம் முடித்த பின்னர் ரேணுகா நினைத்தது போலவே தோல் சிகிச்சை நிபுணத்துவத்திற்கான மருத்துவ மேற்படிப்பை படித்தார். படிப்பு முடிந்த கையோடு புனித ஜான் மருத்துவமனை மற்றும் தொழுநோய் சிகிச்சை மையத்தில் பணியில் சேர்ந்துவிட்டார்.
“நான் நினைத்தது போலவே தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவராக எனது சேவையைத் தொடங்கினேன். தோல் சிகிச்சை துறையில் பணியாற்றினாலும் மற்ற சிகிச்சைகளையும் நோயாளிகளுக்கு அளித்து வந்தேன். நான் பணியாற்றிய மையத்தில் இரவு நேரத்தில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். எனவே இரவு நேரத்திலும் வேலை செய்தேன்.
அது ஒரு சிறு கிராமம் என்பதால் இரவு நேரங்களில் பாம்பு, பூச்சிக்கடித்து பலர் சிகிச்சைக்காக வருவார்கள் அவர்களுக்கு சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்துள்ளேன். கூடுதல் நேரம் பணியாற்றியதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை தொழுநோயாளிகளின் நலவாழ்விற்காக செலவு செய்தேன். இரவு பகல் பாராமல் பணியாற்றுகிறேன் என்ற சோர்வே எனக்கு ஏற்பட்டதில்லை,” என்கிறார் ரேணுகா.
திருமணத்திற்கு முன்பு வரை எந்த பெண்ணும் தான் நினைத்தவற்றை தடையின்றி செய்ய முடியும். ஆனால் திருமணத்திற்கு பின்பும் அது முடியுமா என்பது தான் கேள்விக்குறி. ஆனால் ரேனுகா விஷயத்தில் அதுவும் அவருக்கு சாதகமாகவே இருந்தது. ரேனுகாவின் கணவர் ராமகிருஷ்ணன் அவரை பெண் பார்த்ததே மருத்துவமனையில் வைத்து தான்.
“நான் என் கணவரிடம் உறுதியோடு சொன்ன ஒரே விஷயம் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை என்னால் நிறுத்த முடியாது என்பதே, அவரும் என்னுடைய விருப்பத்திற்கு எந்த தடையும் சொல்லவில்லை. திருமணம் முடிந்து சென்னைக்கு குடிபெயர்ந்த நிலையில் ஷெனாய் நகரில் இருந்த தொழுநோயாளிகளுக்கான சிகிச்சை மையத்தில் பணியாற்றத் தொடங்கினேன்,” என்று கூறுகிறார் ரேணுகா.
தொழுநோயாளிகளைத் தொட்டாலே நமக்கு நோய் ஒட்டிக் கொள்ளும் என்று பலர் பயப்படுவதுண்டு, ஆனால் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டே தான் என் பிள்ளைகளுக்கு நான் பாலூட்டினேன். என் மாமியார் பிள்ளையை எடுத்து வந்து தாய்ப்பால் கொடுப்பதற்காக கொடுப்பார் அவரும் நோயாளிகளைப் பார்த்து முகம் சுளித்ததே இல்லை. எனக்கு ஒரு ஆண் பிள்ளை, பெண் பிள்ளை இருவருமே எந்த பாதிப்பும் இன்றி வளர்ந்து படித்து முடித்து தற்போது நல்ல நிலையில் இருக்கின்றனர் என்கிறார்.
30 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட தொழுநோய் பாதிப்பு தற்போது குறைந்து விட்டது. எனினும் இன்னும் சிலர் இந்த நோய் பாதிப்பிற்கு ஆளாகிக் கொண்டு தான் இருக்கின்றனர். முதலில் இந்த சமூகத்தினர் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தொழுநோய் தொற்றுநோய் கிடையாது, சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு கால்களை வெட்டிஎடுக்கும் நிலை ஏற்படுகிறது அதற்காக அவர்களை ஒதுக்கி வைத்து விடுகிறோமா. உடலில் தீக்காயங்கள் பட்டு தோல் சுருங்கிவிடுபவர்களை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுகிறோமா. அப்படித் தான் தொழுநோயும், பாவம் செய்தவர்களுக்குத் தான் தொழுநோய் வரும் என்று கூறுவதெல்லாம் அறிவிழி நிலையின் உச்சகட்டம் என்கிறார் ரேணுகா.
35 ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்கு சேவையாற்றி வரும் ரேனுகா ரோட்டரி சங்கம், மங்கலம் அறக்கட்டளை என தனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் உதவிகளை செய்து வருகிறார்.
“என்னால் எதையும் செய்ய முடியும் என் கையே எனக்கு உதவி. தன்னம்பிக்கை தான் வாழ்க்கை இதுவே சோர்ந்து போகும் நேரங்களில் எனக்கு நானே சொல்லிக்கொல்லும் ஊக்கமளிக்கும் வாசங்கள்," என்று திடமாகச் சொல்கிறார் ரேணுகா.
இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. பணம், பெயர், புகழுக்கு பின்னால் சென்று கொண்டிருக்காமல் என்னைப் போன்று பலரும் நாட்டிற்காக சேவை செய்ய முன்வர வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி நான் என்னுடைய சேவையை செய்து வருகிறேன். சக மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு அன்பை பகிருங்கள் என்று கூறும் ரேணுகா மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
பலரது வாழ்வில் மாற்றங்களை செய்துள்ள இந்த தேவதை இன்னும் தனது சிறகுகளை விரித்துக் கொண்டு ரக்கைக் கட்டி பறக்கிறது அன்பிற்காக ஏங்கும் நோயாளிகளின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்த. இவரது ஆசையெல்லாம் தன்னைப் போலவே பலர் மருத்துவச் சேவை செய்ய வெளிவர வேண்டும் என்பதாகவே இருக்கிறது.