அன்று கட்டிடத் தொழிலாளி, இன்று மாதம் ரூ.30,000 ஈட்டும் யூடியூப்பர்!
இரு கிட்னி செயலிழந்து தனது சொந்த அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவித்தவர் இன்று யூடியூப்பினால் மாதம் ரூ.30,000 சம்பாதித்து வருகிறார். மீன்பிடித்தல் சார்ந்த வீடியோக்களால் கவந்த அந்த எளியவரின் வெற்றிக்கதை.
இரு ஆண்டுகளுக்கு முன்... கேரளாவின் பாதி அழகியலை தன்னகத்தே வைத்துக் கொண்ட ‘கும்பலங்கி தீவு’-ஐச் சேர்ந்த உன்னி ஜார்ஜ்ஜின் சிறுநீரகங்கள் செயல்பாட்டில் மோசமடைய தொடங்கியதில் அவர் உள்ளூர் செய்திகளில் அதிகம் அடிப்பட்டார். ஏனெனில், உன்னியின் குடும்பத்திற்கு, சிகிச்சை செலவு பெரும் சுமையாகி போது, அவரது நட்பு வட்டத்தினர் மாநிலத்தின் கவனத்தையே திருப்பும் வகையில் நிதிதிரட்டியது. அவருடைய வெற்றிகர மாற்று அறுவை சிகிச்சை முடிந்து 2 ஆண்டுகளாகிய நிலையில், மீண்டும் ஊடகங்களில் இடம்பிடித்துள்ளார்... ஆனால், இம்முறை யூடியூப்பராக!
மீன்பிடித்தலும், அதனை சமைத்தலும் பற்றிய உன்னியின் யூடியூப் சேனல் உலகெங்கிலும் உள்ள கேரள மக்களது பிரியப்பட்ட சேனாலகும். கேரளத்தின் மணத்தில் அவருக்கே உரித்தான பாணியில் உன்னி சமைத்ததில், ஒரு வருடத்திற்குள்ளே, அவரது சேனலான ‘ஓ.எம்.கே.வி ஃபிஷ்ஷீங் அண்ட் குக்கிங்’ சேனல் (OMKV Fishing and Cooking) 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைப் பெற்றது.
32 வயதான உன்னி அவரது வீடியோக்களில், கொச்சியின் உப்பங்கழிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உப்புக் காற்றின் ஊடே அவரது படகில் பயணித்துச் சென்று அவரே மீன் பிடிக்கிறார், பின்னர் அதை அவரே கேரளத்து ஸ்டைலில் எவ்வித அலங்கார ஜோடிப்புமின்றி இயல்பாய் சமைக்கிறார். இன்று இதுவே அவரது பணி! மனமகிழ்வுடன் வருமானம் ஈட்டி தரும் தொழில்!
உள்ளூர் பிரபலமாய் கெத்து வாழ்க்கையை வழிநடத்தும் உன்னி அவரது வாழ்வில் சந்தித்த போராட்டங்களை நினைவுகூற தொடங்கினார்...
“நான் கட்டிடத் தொழிலாளி. 25 வயதிலே கல்யாணமாகி, எங்களுக்கு அழகான குழந்தையும் பிறந்தது. 2013ம் ஆண்டுக்கு பிறகு, என் உடல் எடை அதிகரித்து பார்வை மங்க ஆரம்பித்தது. என்னனு டாக்டரை பார்க்கும்போது தான், சிறுநீரகம் ஒழுங்காக செயல்படலைனு தெரிந்தது. என் மனைவி 2வது முறையாக கர்ப்பமாக இருந்தாங்க. அப்போ, எனக்கு கிட்னி ஃபெயிலியராகிருச்சு,” என்றார் உன்னி.
உன்னியின் சிறுநீரகங்கள் இரண்டுமே பழுதடைந்தன, அதற்காக ரூ.10 லட்சம் தேவைப்பட்டது. அவரது டயாலிசிஸ், மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு போதுமான நிதி இல்லாததால், பணத்தை தானே திரட்டுவதைத் தவிர உன்னிக்கு வேறு வழியில்லாமல் போனது. அவரை பற்றி செய்தித்தாள்களில் வெளிவந்தது.
அவரது நட்பு வட்டங்கள் தொடங்கி திரைப்பிரபலங்களும் ஆதரவு கரம் நீட்டினர். கேரள மாணவர் ஒன்றியத்தின் ஆர்வலர்களும், உள்ளூர் மக்களும் நிதி திரட்டத் தொடங்கினர். தனியார் பேருந்தின் உரிமையாளரும் பணியாளர்களும் ஒரு நாள் வருவாயை அளிக்க முடிவு செய்தனர். அதற்காக பஸ்ஸின் முதல் பயணத்தில் நடிகர் திலீப் சேர்ந்து, முதலில் பங்களித்தார். பின், பொதுமக்களும் இணைந்தனர்.
உன்னியின் தாயாரே சிறுநீரகத்தை தானம் செய்தார். வாழ்க்கை கனிவானதாக மாறியது. ஆனால், நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவரது மனைவிக்கு 2வது குழந்தை பிறந்தது. இப்போது, மீண்டும் பணத்தட்டுபாடு. உடல்நலக் கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் முந்தைய வேலையையும் மீண்டும் தொடங்க முடியவில்லை.
“2017ம் ஆண்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்த பிறகு, எதிர்காலத்தில் உடல் ரீதியான எந்தவொரு கடினமான செயலையும் செய்ய வேண்டாம் என்று எனக்கு டாக்டர்கள் அறிவுறுத்தினர். சோ, என்னால பழைய வேலையையும் செய்யமுடியாது. பள்ளிக்குப் பிறகு நான் படிப்பையும் தொடரவில்லை என்பதால் வேற வேலையை தேடிக்கொள்ளும் வாய்ப்புகளும் இல்லாமல் போனது. ஆப்ரேஷனுக்கு பிறகு எனக்கு பொருத்தமான வேலையை தேடி கொள்வது பெரும் சவாலாக மாறியது.”
போதுமான ரெஸ்ட் எடுத்த பிறகு சொந்தமாக ஏதேனும் தொழில் செய்யலாம்னு முடிவெடுத்தேன்.
யூடியூப்பில் வீடியோக்கள் நல்ல லாபத்தை ஈட்டக்கூடும் என்று கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை. அதைச் செய்யக்கூடிய எவரையும் எனக்குத் தெரியாது. ஆனா, போனில் ரீசார்ஜ் செய்யக்கூட காசு இருக்காது. வீட்லையும் நெட்வொர்க் இருக்காது. அதுக்காகவே வீட்லயிருந்து 1 கிலோமீட்டர் தூரம் நடந்து போயி யூடியூப் சேனல் தொடங்குவது எப்படினு பார்த்திட்டு வருவேன்.
என்னவகையான யூடியூப் சேனல்? பார்வையாளர்களுக்கு நான் எதை காட்ட விரும்புகிறேன்? என்று எனக்குள் கேள்விகள் எழுந்தது. எனக்கு மீன் பிடிக்க ரொம்பவே பிடிக்கும். அதனால, அதையே கேமிராவில் படம் பிடிக்கலாம் என்று முடிவெடுத்தேன்,” என்றார் உன்னி.
வேம்பநாட்டு ஏரியால் சூழப்பட்ட கும்பலங்கி தீவினை சேர்ந்த உன்னிக்கு, மீன் பிடித்தல் என்பது பரீட்சயமற்ற விஷயமில்லை. இருப்பினும், மீன் பிடித்தலில் அவர் எக்ஸ்பேர்ட்டுமில்லை. “மீன்பிடிப்பதில் எனக்கு பயங்கர ஆர்வம். அதனால, நான் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்க முடிவு செய்த பிறகு எனக்கு முதலில் வந்த யோசனைகளில் இதுவும் ஒன்றாகும். ஏற்கனவே இருந்த மீன்பிடி தொடர்பான யூடியூப் சேனல்களிலிருந்து, உன்னி தனித்துவப்படுத்தக்கூடிய ஒன்றைத் தேடினார்.
மற்ற யூடியூப் சேனலில் சமைப்பது வேறொருவராகவும், மீன் பிடிப்பது மற்றொருவராகவும் இருந்தது. இரண்டையும் ஒரே நபர் செய்யும் யூடியூப் சேனல் மிகக் குறைவாக இருந்தது. என் நண்பரிடம் டிஎஸ்எல்ஆர் கேமிரா இருந்தது. அவருக்கு எடிட்டிங்கும் அத்துப்படி என்பதால், வேலையில் இறங்கினோம்,” என்றார் அவர்.
இறுதியாக 2018ம் ஆண்டு “OMKV Fishing and Cooking” சேனலை தொடங்கினார் உன்னி. பக்கத்துவீட்டு பய்யன் போல பார்வையாளர்கள் உணர்ந்ததில் சேனல் தொடங்கப்பட்ட 6 மாதத்திலே பெருவாரியான மக்களை கவர்ந்தது. பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மீன்பிடி+சமையல் வீடியோக்களையும், செவ்வாய்கிழமை சமையல் வீடியோக்களையும் அப்லோடி வருகிறார்.
“வீடியோ தொடங்கிய போது, மெதுவாக பார்வையாளர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். கொஞ்ச மாதத்திலே 1 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் சேர்ந்தனர். 6 மாதத்திலே என் சேனலை மானிடைஸ் செய்தது யூடியூப். இப்போது மாதத்திற்கு ரூ.30,000வரை சம்பாதிக்கிறேன்,” என்று பெருமையுடன் கூறும் உன்னியின் ரசிகர்கள் அன்பளிப்புகளையும் அளித்து வருகின்றனர். அதிலொன்றான வீடியோ கேமராவை தான் உன்னி தற்போது பயன்படுத்தி வருகிறார்.
உன்னியின் ரசிகப் பெருமக்களுக்கு, அவர் கடந்த பாதை தெரியாது. ஆனால், ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்றவுடன் அவரது சொந்த கதையை பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
“நான் ஆரம்பத்திலே என் கதையைப் பகிர்ந்திருந்தால், மக்களின் அனுதாபத்தினால் இன்னும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றிருப்பேன். ஆனால் நான் அதை ஒருபோதும் விரும்பவில்லை. நான் செய்வதை மக்கள் விரும்ப வேண்டும், பின்னர் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆனால், பலர் எனது குடும்பம் மற்றும் பின்னணி பற்றி கேட்டுக்கொண்டே இருந்தனர். எனவே ஒரு லட்சம் சந்தாதாரர்களைப் பெறும் போது கதையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். இன்றும் பலர் எனக்கு உதவ முன்வருகின்றனர். ஆனா, எனக்கு அது வேண்டாம். நான் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டேன். மருத்துவச் செலவுக்காக வாங்கிய லட்சக்கணக்கான கடன்களையும் அடைத்துவிட்டேன்,” என்று உன்னி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தகவல் உதவி : newindianexpress & thenewsminute