Life in a Chennai Metro: சென்னை மெட்ரோ தரும் வாழ்வியல் அனுபவம் எப்படி?
சென்னை 385 வயதைக் கொண்டாடும் இந்த வேளையில், சென்னை மெட்ரோவின் வருகை என்பது சென்னைவாசிகளின் வாழ்வியலிலும் முக்கியப் பங்கு வகித்து வருவதை கவனிக்கலாம்.
கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதில் எப்போதும் சிறந்து விளங்கும் சிங்காரச் சென்னையின் புதிய அடையாளமாகவே உருவெடுத்திருக்கிறது ‘சென்னை மெட்ரோ’.
சென்னை 385 வயதைக் கொண்டாடும் இந்த வேளையில், சென்னை மெட்ரோவின் வருகை என்பது சென்னைவாசிகளின் வாழ்வியலிலும் முக்கியப் பங்கு வகித்து வருவதை கவனிக்கலாம்.
கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் முடிந்து முதல் மெட்ரோ ரயில் சேவை 2015-ல் தொடங்கப்பட்டது. ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை முதல் சேவை இயக்கப்பட்டது. அப்போது, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள்தான் மெட்ரோவைப் பயன்படுத்தினர். அதற்கு மிக முக்கியக் காரணம், ‘அதிக கட்டணம்’ என்று மக்கள் கருதியதே. ஆனால், இப்போது நிலைமையே வேறு.
தற்போது, சென்னை விமான நிலையம் முதல் விம்கோநகர் வரை முதல் வழித்தடத்திலும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை இரண்டாவது வழித்தடத்திலும் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்விரு வழித்தடங்களிலும் மொத்தம் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் இயங்குகின்றன.
ஆட்டோ, கால் டாக்ஸி, ஏசி பேருந்து போன்றவற்றுடன் ஒப்பிடும்போதும், தினசரி வாகனத்தில் சென்று வர பெட்ரோலுக்கு ஆகும் செலவுடன் ஒப்பிடும்போது சென்னை மெட்ரோ பயணக் கட்டணம் குறைவு என்பதால் மக்களிடம் இருந்து நாளுக்கு நாள் வரவேற்பு கூடத் தொடங்கியது. மிகுந்த பாதுகாப்பாகவும், விரைந்தும், சொகுசாகவும் பயணிக்க வழிவகுப்பதால் சென்னை மெட்ரோ மீது சென்னைவாசிகளுக்கு ஈர்ப்பு வெகுவாக கூடிவிட்டது.
ஆம், இப்போது சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 2.60 லட்சம் முதல் 3 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் 84.34 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோவில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 95.35 லட்சம். இது, முந்தைய ஜூன் உடன் ஒப்பிடும்போது 11.01 லட்சம் அதிகம்.
இப்படி மாதம்தோறும் லட்சங்களின் கூடும் பயணிகளின் எண்ணிக்கையைக் கொண்ட சென்னை மெட்ரோ தரும் வாழ்வியல் அனுபவமும் கவனிக்கத்தக்க ஒன்று.
வரவேற்பு கூடுவது ஏன்?
உலகின் எந்த ஒரு நகருடைய நவீன முகத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது மெட்ரோ ரயில்கள். சென்னையின் நவீன முகமும் இப்போது மெட்ரோதான். இதர வகை ரயில்களுடன் ஒப்பிடும்போது, மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு குறைவான எரிபொருளும், குறைந்த மின்சாரமும் போதுமானது என்பது நிபுணர்கள் வாதம்.
குறிப்பாக, நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் திட்டமாகவும் மெட்ரோ ரயில் பயணங்கள் கருதப்படுகிறது. தூய்மையும் துரிதமும்தான் மெட்ரோவின் இரு கண்கள். குறிப்பாக, நகரங்களுக்கே உரிய வாகன நெரிசல்களில் இருந்து மக்களை விடுவிப்பதில் மெட்ரோவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்கு, குறிப்பாக பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது மெட்ரோ ரயில் பயணம்.
இந்த அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை மெட்ரோவில், அவ்வப்போது கட்டணச் சலுகைகளும் தரப்படுவதால் பொருளாதார ரீதியில் நடுத்தர, கீழ் - மேல் நடுத்தர வர்க்க மக்களுக்கு உகந்ததாக இருக்கிறது சென்னை மெட்ரோ.
கடந்த ஜூலை மாதத்தை எடுத்துக்கொண்டால், க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 39.72 லட்சம் பேர், பயண அட்டை மூலம் 35.31 லட்சம் பேர், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 19.96 லட்சம் பேர், டோக்கன் பயன்படுத்தி 30,675 பேர், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4,468 பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்திலுமே பார்க்கிங் வசதி இருப்பதால் பயணிகள் தங்கள் இரு சக்கர வாகனங்களையும், கார்களையும் உரிய கட்டணத்தில் பத்திரமாக நிறுத்திவிட்டு கவலையின்றி அலுவலகம் சென்று வரவும் வழிவகுக்கிறது சென்னை மெட்ரோ.
பயண அனுபவம் எப்படி?
பெருமழையைப் பற்றியோ, கடும் வெயிலைப் பற்றியோ கவலையின்றி பாதுகாப்பானதும் சொகுசானதுமான மெட்ரோ பயணத்துக்கு பழக்கப்படும் மக்களுக்கு சென்னை மெட்ரோ தரும் தனி அனுபவங்களும் ஏராளம்.
காலை - மாலை அலுவலக நேரத்தில் சற்றே கூட்ட நெரிசலாக இருப்பதால் பலருக்கும் நின்றுகொண்டே பயணிக்க வெண்டிய நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், மெட்ரோவின் ஏசி வசதியும், விரைவான பயணமும் நமக்கு களைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
அலுவலகம் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில், அதாவது, ஷிஃப்ட் அடிப்படையில் வெவ்வேறு நேரங்களில் பயணிப்பவர்களுக்கு சென்னை மெட்ரோ பயணம் ஒரு சொர்க்கமாக திகழ்வதை உணரலாம். நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை மெட்ரோ அவ்வளவு சொகுசு அனுபவத்தைத் தரக்கூடும்.
கிரீன் லைனில் இருந்து பயணித்துவிட்டு, அங்கிருந்து மாறி ப்ளூ லைனினுக்கு நடந்து சென்று மாறி பயணிப்பது என்பது ரொம்பவே அலைச்சல் என்று ஆரம்பத்தில் பலரும் கருதுவர். ஆனால், அது முற்றிலும் தவறு என்பதுதான் உண்மை அனுபவம்.
உதாரணமாக, ஒருவர் வடபழனியில் இருந்து நந்தனம் செல்ல வேண்டும் எனில், வடபழனியில் இருந்து ஆலந்தூர் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து நந்தனம் செல்லலாம். ஆலந்தூரில் இறங்கி எக்ஸ்லேட்டர் உதவியுடன் நடைமேடை மாறுவதற்கு வெறும் 3 நிமிடம்தான் எடுத்துக்கொள்ளும்.
உளவியல் ரீதியில் பார்த்தால்...
சென்னையின் புறநகர் ரயில் பயணங்களுடன் ஒப்பிடும்போது, சென்னை மெட்ரோ பயணம் என்பது ‘எலைட்’ ஆனது மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் உளவியல் ரீதியில் கிடைக்கும் அனுபவங்களும் குறைவுதான். புறநகர் ரயில்களின் பயணிக்கும் மக்களிடம் இன்றளவும் ‘ரயில் சிநேகம்’ மிகுந்து காணப்படுவது கண்கூடு. ரயில் பயணத்தில் கிடைக்கும் நட்பு அனுபவங்களும், மனிதர்களிடையே நடக்கும் உரையாடல்களும் நம் மனதுக்கு இதமூட்டக் கூடியவை.
ஆனால், சென்னை மெட்ரோ பயணம் என்பது அவ்வாறு அறிமுகம் இல்லாத நபர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக நட்பை வளர்க்கும் சூழலை தருவதில்லை. ‘மார்டன் லவ் - சென்னை’ ஆந்தாலஜி சீரிஸில் பாரதிராஜா இயக்கிய கதையின் களம் சென்னை மெட்ரோதான். இங்கேதான் அந்த சற்றே மூத்த ஜோடிகளுக்கு காதல் துளிர்விட்டு வளரும். சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அந்தக் கதையே விதிவிலக்குதான் போலவே தோணலாம்.
ஆம், சென்னை மெட்ரோ பயணத்தைப் பொறுத்தவரையில், அங்கே மனிதர்கள் பேச்சு சத்தம் ஒலிப்பது அரிதினும் அரிதே. ஒன்றாக பயணிக்கும் நண்பர்கள், உறவினர்கள் இடையேதான் லேசான பேச்சு சத்தம் கேட்கும். அதேவேளையில், ஏர் பாட்ஸ் இல்லாத காதுகளையும், ஸ்மார்ட்போன் திரையை நோக்காத கண்களையும் சென்னை மெட்ரோவில் காண்பது அரிது. அந்த அளவுக்கு போனில் மக்கள் மூழ்கி இருப்பதைக் காணலாம்.
சோஷியல் மீடியா போஸ்டுகளில் வலம் வருவது, ரீல்ஸ் நகர்த்திப் பார்ப்பது, ஓடிடியில் படம் பார்ப்பது, வெப்சைட்களில் கன்டென்ட் வாசிப்பது என எப்பேர்பட்ட எக்ஸ்ட்ராவோர்ட்களையும் தற்காலிக இன்ட்ரோவோர்ட்களாக மாற்றும் வல்லமையும் சென்னை மெட்ரோவுக்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது. காலம் மாறும்போது இவையெல்லாம் போரடிக்க ஆரம்பித்து மனிதர்களிடையே உரையாடல் பழக்கம் அதிகரிக்கும் என நம்புவோமாக.
பயணிக்காதோருக்கும் கைகொடுக்கும் மெட்ரோ!
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்களுக்கும் பல வழிகளில் சென்னை மெட்ரோ துணையாக இருக்கிறது. இரவில் விடு திரும்பும்போது வண்டி ரிப்பேர் ஆகிவிட்டால், சற்றே கூடுதல் கட்டணத்துடன் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு செல்பவர்களும் உண்டு.
தனிப்பட்ட அல்லது அலுவல் ரீதியிலான சந்திப்புகளை மிகக் குறைந்த செலவில் நடத்தவும் மெட்ரோ வழிவகுக்கிறது. பீக் ஹவர் இல்லாத நேரங்களில் ஏசியில் அமைதியான சூழலில் ரயிலேயே மீட்டிங் நடத்தலாம். இதுபோன்ற சந்திப்புகளின்போது சில நேரங்களில் ஒரு ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் நிலையம் சென்றுவிட்டு, பேச்சு சுவாரஸ்யத்தில் ‘எக்ஸிட்’ கொடுக்காமல் திரும்ப வந்து கூடுதல் கட்டணம் செலுத்துவோரும் உண்டு.
பரபரப்பான நகர்புற சாலைகளில் இன்றளவும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமான கழிப்பிடம். குறிப்பாக, பெண்களுக்கு இது மிக முக்கிய பிரச்சினை. அதுபோன்ற அவசர காலங்களிலும் ஆங்காங்கே இருக்கும் சென்னை மெட்ரோ நிலையங்கள் உதுவுகின்றன. எல்லா மெட்ரோ நிலையங்களிலுமே டிக்கெட் கவுன்ட்டருக்கு வெளியேதான் கழிப்பறை இருப்பதால் மெட்ரோவில் பயணிக்காத அவசர தேவை உள்ளவர்களுக்கும் உதவியாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, விடுமுறை காலங்களில் எளிய மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கான சுற்றுலா பயணமாகவே சென்னை மெட்ரோவை பயன்படுத்துவதையும் காண முடிகிறது.
அதேபோல், சில மெட்ரோ நிலையங்களில் எலைட் டீக்கடைகள், உணவகங்கள் முதலானவை மாலைப் பொழுதுகளிலும், விடுமுறை காலத்திலும் நண்பர்கள் கூடி கதைக்கும் இடமாகவும் மாறிவிட்டன. இந்தப் போக்கு என்பது அடுத்து வரக் கூடிய 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அதிகரிக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.
2-ம் கட்ட மெட்ரோ ஸ்பெஷல்...
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் என்பது 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, அதற்கான பணிகள் தீவிரமான நடைபெற்று வருகின்றன.
இதில், 43 கி.மீ. சுரங்கப் பாதையில் 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பல்வேறு இடங்களில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அமைய உள்ள சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு வாயில் பகுதிகளை வணிக மால் அல்லது கடைகளுடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, டிக்கெட் அல்லாத வருவாயை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
“2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வெறும் நுழைவு வாயில் மட்டும் அமைக்காமல், வணிக மால் அல்லது வணிக கடைகளும் இணைந்து கட்டப்படும். அதுபோல தான் வடிவமைப்பு செய்யப்படுகிறது. அதாவது, ஒருங்கிணைந்த வர்த்தக மேம்பாட்டின் கீழ், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்களில் வர்த்தக கடைகள் இடம்பெறும்.
"மெட்ரோ ரயில் நிலைய நுழைவுவாயிலுக்கு வரும் பயணிகள் நேரடியாக மெட்ரோ ரயில் நிலைய நடைமேடை செல்ல முடியாது. வணிக வளாகம் அல்லது கடைகளை கடந்துதான் நடைமேடைக்குச் செல்ல முடியும். மெட்ரோ ரயில் நிலைய சிறிய நுழைவுவாயில் உள்ள பகுதிகளில் சிறிய கடைகள் உருவாக்கப்படும். ஆலந்தூர், ஆயிரம் விளக்கு, மந்தைவெளி, திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில் பகுதிகளில் வணிகக் கடைகள் அமைப்பது தொடர்பாக திட்டமிடப்பட்டு வருகிறது,” என்று அதிகாரிகள் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இப்படி பற்பல திட்டங்களை கொண்டு மேம்படுத்தி வரும் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு விஷயத்தை கவனித்தில் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சென்னையை உருவாக்குவதிலும் செதுக்குவதிலும் எப்பொதுமே எளிய மக்களின் பங்கு மிக மிக அதிகம். அவர்களும் பயணிக்கத்தக்க வகையில் சென்னை மெட்ரோவில் சலுகைத் திட்டம் இருப்பின் ஆகச் சிறந்த அணுகுமுறையாக இருக்கக் கூடும்!
Edited by Induja Raghunathan