கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்டும், இன்று இந்திய அணிக்கே கேப்டனாகிய ‘சச்சின் சிவா’
உடல் குறைப்பாட்டை காரணம் காட்டி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து புறக்கணிக்கப்பட்ட மதுரை இளைஞர் சிவக்குமார் என்கிற ‘சச்சின்’ சிவா இன்று இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாகி சாதித்துக் காட்டி இருக்கிறார்.
உடல் குறைபாட்டால் சிறு வயதில் சக நண்பர்களால் கிரிக்கெட் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த சிவக்குமார், இன்று இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வாகி ஜெயித்துக் காட்டி இருக்கிறார்.
“வாழ்வில் புறக்கணிப்பும் ஒரு சிறந்த ஆசான் தான்...” என்பதற்கான நிதர்சனமாக இருக்கிறார் சிவக்குமார் என்கிற ‘சச்சின்’ சிவா.
சச்சின் சிவா சாதித்தது எப்படி?
கிரிக்கெட் போட்டி என்றாலே குதூகலித்து கொண்டாடித் தீர்த்து விடுவர் ரசிகர்கள். ஆனால், இந்த வரவேற்பெல்லாம் பிசிசிஐ நடத்தும் கிரிக்கெட் அணிக்கானதாக மட்டுமே இருக்கிறது.
மகளிர் கிரிக்கெட், மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் இவற்றிற்கெல்லாம் மீடியாக்களின் வெளிச்சமோ ரசிகர்களின் வரவேற்போ அவ்வளவாக கிடைப்பதில்லை. 'இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்' என்ற ஒன்று இருக்கிறது. அதில், மாற்றுத்திறன் உடைய கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை பலருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் ‘சச்சின்’ சிவா.
தமிழக மழையோடு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் சச்சின் சிவா, யுவர் ஸ்டோரி தமிழிடம் தான் கடந்து வந்த கடினமான பாதையை பகிர்ந்து கொண்டார்.
“மதுரையிலுள்ள பாப்பான்குளம் என்னுடைய சொந்த ஊர். அப்பா, அம்மா விவசாயப் பணி செய்து என்னை வளர்த்தனர். எனக்கு 8 வயது இருக்கும் போது நண்பர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய பொழுது என்னை மட்டும் புறக்கணித்தனர். ஏன் என்னை புறக்கணிக்கிறார்கள் என்கிற காரணம் எனக்குப் புரியவில்லை.
எனக்கு என்ன குறை?
நானும் மற்றவர்களைப் போலத் தானே இருக்கிறேன் என்னை ஏன் சேர்த்துக் கொள்ளத் தயங்குகிறார்கள் என்ற கேள்வி எனக்கு எழுந்தது. சின்ன வயது என்பதால் என்னுடைய உடலில் குறைபாடு இருக்கிறது என்பதே எனக்குப் புரியவில்லை. மற்றவர்களோடு ஓடும் போது நானும் அவர்களைப் போலத் தானே ஓடுகிறேன் கை, கால்கள் எல்லாமே நன்றாகத் தானே இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.
”5ம் வகுப்புப் பிறகு தான் என்னுடைய இடது காலில் குறைபாடு இருக்கிறது, நான் நடந்தால், ஓடினால் மற்றவர்களைப் போல இருப்பதில்லை என்பது எனக்குப் புரிந்தது. போலியா பாதிப்பால் இடது கால் செயல்பாடு 40 சதவிகிதம் பாதிக்கப்பட்டதால் நானும் மாற்றுத்திறனாளி என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் சிவக்குமார்.
புறக்கணிப்பால் வந்த பற்றுதல்
நான் சிறுவனாக இருந்த போது பார்த்துப் பிடித்துப்போன விளையாட்டு கிரிக்கெட். அதில் இருந்து என்னை புறக்கணித்ததால் நிச்சயமாக அதில் சாதிக்க வேண்டும் என்பிதை உறுதியாக பற்றிக் கொண்டேன். பயிற்சியாளர் வைத்து விளையாட்டை கற்றுக் கொள்ளும் அளவிற்கு பொருளாதார வசதி படைத்த குடும்பம் இல்லை என்பதனால் அன்றும் இன்றும் என்றும் கிரிக்கெட் நாயகனாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்தே நானும் என்னுடைய திறனை வளர்த்துக் கொண்டேன்.
மற்ற இளைஞர்களைப் போல நானும் கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாடலாம் என்று தான் நான் நினைத்தேன். ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கென்று தனியான அணி இருக்கிறது, அதில் சேர்ந்து விளையாட முடியும் என்று அப்போது தெரியாது.
படிப்பை விட்டு பேட்டை கையில் எடுத்த சிவா
கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பற்றி தெரிய வந்தது. மாற்றுத்திறனாளிகள் தடகளப் பயிற்சியாளராக ஜெ.ரஞ்சித்குமார் தேர்வு செய்யப்பட்டது பற்றிய செய்தியை படித்து அவரிடம் எனக்கு இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை தெரிவித்தேன். அவருடன் சில காலம் பயணித்ததில் தடகளப் பயிற்சியும் மேற்கொண்டேன்.
2009ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாற்றுத்திறன் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வில் பங்கேற்றேன். அதில் தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், இரண்டாம் ஆண்டோடு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முழு ஈடுபாட்டுடன் விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டேன் என்று கூறுகிறார்.
சச்சின் டெண்டுல்கரின் வீடியோக்களே பயிற்சியாளர்
2009ல் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் தமிழ்நாடு அணி சார்பில் என்னுடைய முதல் போட்டியில் நான் பங்கேற்றேன். தொடக்கக் காலத்தில் நம்முடைய அணி சுமாரான அணியாகத் தான் இருந்தது. 2019ம் ஆண்டு தான் எங்களுடைய அணிக்கென தனி பயிற்சியாளரே நியமிக்கப்பட்டார். அதுவரையில் நான் என்ன விளையாடுகிறேனோ அதைப் பார்த்தே மற்ற வீரர்களும் விளையாடினர்.
“நானே வீரர்களுக்கு பயிற்சி, பந்தை பிடிப்பதற்கான பயிற்சி என அனைத்தையும் சொல்லிக் கொடுத்தேன். தொடக்க காலங்களில் எல்லாம் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வீரர்களே கிடைக்கவில்லை, நானும் அணி மேலாளர் ஹரிச்சந்திரனும் இணைந்து கடினமாக உழைத்து 90 சிறந்த மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி இருக்கிறோம்.”
‘சச்சின்’ சிவாவான சிவக்குமார்
சச்சின் வீடியோக்களையே எப்போதும் பார்த்துக் கொண்டிருந்ததால் நண்பர்கள் சச்சின் சிவா என்று அழைக்கத் தொடங்கினர். யதார்த்தமாக என்னுடைய பைக்கில் ‘சச்சின் சிவா’ என்று எழுதி வைத்தேன்.
அதுவே இப்போது எனக்கு ஒரு பிராண்டு போன்ற ஒரு அடையாளத்தை உருவாக்கிவிட்டது. பாஸ்போட்டிலும், பேட்டிகளிலும் மட்டுமே என்னுடைய இயற்பெயர் சிவக்குமார் என்று இருக்கிறது. மற்றபடி நாடு முழுவதும் எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கச் செய்திருப்பது சச்சின் சிவா என்கிற பெயரே என்று மகிழ்கிறார் சிவக்குமார்.
எதிர்ப்பும் உறுதியும்
15 ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக இப்போது பாராட்டுகளாலும், புகழ்ச்சிகளாலும் மகிழ்ச்சியில் திளைத்தாலும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறேன் என்கிறார் சிவா. கிரிக்கெட் விளையாட்டில் எளிதில் சாதிக்கவோ பொருளதார வளர்ச்சி பெறவோ முடியாது என்பதால் என்னுடைய அப்பாவும், அம்மாவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சொல்லப்போனால் என்னுடைய அம்மா 16 கிரிக்கெட் பேட்களை உடைத்தும் அடுப்பில் வைத்து எரித்தும் இருக்கிறார். ஆனால் அதற்காகவெல்லாம் நான் விட்டுக் கொடுத்துவிடவில்லை.
காயங்களும் தழும்புகளும்
இதுமட்டும் காரணமல்ல ஏற்கனவே உடல் குறைபாடு இருக்கும் நிலையில் தினமும் விளையாடிவிட்டு வரும் போது உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் காயம் பட்டு தான் வீடு திரும்புவேன். என்னால் வேகமாக ஓடி பந்தை எடுக்க முடியாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து 10 அடி தூரத்திற்கு தாவி பந்தை பிடிக்க முடியும். பந்தை பிடிக்க வேண்டும் என்றால் கட்டாந்தரையாக இருந்தாலும் தைரியமாகப் பறந்து பிடித்துவிடுவேன், இதனால் உடம்பில் காயங்களும் தழும்புகளும் ஏராளம். இதன் காரணமாகவே கிரிக்கெட் வேண்டாம் என்று குடும்பத்தினர் தடை போட்டனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தொடங்கிய பின்னர் செய்தித்தாள்களில் இடம்பெறுவதை எல்லாம் பார்த்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
பணம் வேலைவாய்ப்பு இல்லை
எனினும் ஒரு காலகட்டத்தில் கிரிக்கெட்டில் வாழ்க்கையை செலவிடுவது பொருளாதார ரீதியில் உதவவில்லை, வேலைவாய்ப்பு இல்லை என்பதால் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணமான பின்னர் மனைவியும் கிரிக்கெட் விளையாட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
ஆனால், இந்த விளையாட்டில் கிடைத்த புறக்கணிப்பின் வலி, அவமானங்களால் சாதாரணமாக கிரிக்கெட்டை தூக்கி எறிய முடியவில்லை. இந்த ஆதங்கமே அடுத்தது என்ன என்று என்னைத் தொடர்ந்து முன்னேறிச் செல்ல உத்வேகமாக அமைந்தது.
வலுவான அணி
தேசிய அளவில் இப்போது ’தமிழ்நாடு மாற்றுதிறன் கிரிக்கெட் அணி’ பலமான வீரர்களைக் கொண்ட அணியாக இருக்கிறது. எந்தப் போட்டியில் பங்கேற்றாலும் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடுவோம். துபாயில் நடைபெற்ற ப்ரீமியர் லீகில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்று விளையாடி சாம்பியன் பட்டம் வென்றோம்.
தேசிய அளவில், தென்மண்டல அளவில் என சுமார் 50 போட்டிகள் வரை விளையாடி இருக்கிறோம். இவற்றில் சுமார் 30 போட்டிகளில் நான் man of the match, man of the series வென்றிருக்கிறேன். எல்லாப் போட்டிகளிலுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு கோப்பையுடன் தான் வீடு திரும்பி இருக்கிறேன். இதற்கு வைக்க இடமில்லாமல் என்னுடைய வீடு முழுவதும் நிறைந்திருக்கும் கோப்பைகளே சாட்சி, என்று மகிழ்கிறார் சிவா.
கேப்டன் ஆனது எப்படி?
என்னுடைய விளையாட்டுத் திறன், வீரர்களுடன் பழகும் முறை உள்ளிட்டவற்றைப் பார்த்தே இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்திய திவ்யாங் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (DCCBI) தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். தொடக்கக் காலத்தில் ஆங்கிலத்தில் பேசுவதில் இருந்த தயக்கத்தினாலேயே இந்த வாய்ப்பு தள்ளிப் போய்விட்டதாக நான் நினைக்கிறேன்.
இப்போது இந்தி முழுவதும் தெரியாவிட்டாலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வீரர்களுடன் கலந்துரையாடும் அளவிற்கு திறனை வளர்த்துக் கொண்டேன். கிரிக்கெட் விளையாடுவதால் பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இந்திய அணி சார்பில் அந்த blue jersey போட்டுக் கொண்டு விளையாடும் பெருமை எத்தனை பேருக்கு கிடைக்கும். அந்த வகையில் எனக்கு நிச்சயம் திருப்தியே என்று சொல்கிறார். இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாகும் முதல் தமிழர் இவராவார்.
நேரில் வந்து பாருங்கள்
இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பின் இந்திய மக்கள் மத்தியில் எனக்கான அடையாளம் கிடைத்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியான கிரிக்கெட் அணி இருக்கிறது என்பது மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளையும் மக்கள் மத்தியில் மேலும் பெயரையும் புகழையும் கூடவே ஸ்பான்சர்களையும் பெற்றுத் தரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சிவக்குமார்.
10 ஆண்டுகளாக சிறப்பாக நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன் ஆனால் அது யாருடைய கவனத்திற்கும் வரவில்லை, தமிழகத்தைச் சேர்ந்த நான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் எங்கள் மீது கவனம் திரும்பி இருக்கிறது. சர்வதேச அளவில் ஊடகங்கள் எங்களுடைய விளையாட்டையும் ஒளிபரப்ப முன் வரவேண்டும், மக்களும் எங்களின் கிரிக்கெட் போட்டிகளை நேரில் வந்து கண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சிவக்குமார்.
2023 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை அடுத்தடுத்து நடக்க இருக்கும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கு நான் கேப்டனாக செயல்பட அட்டவணை வழங்கப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமல்ல என்னைப் போன்றவர்கள் விளையாட்டில் ஆர்வம் இருந்தால் அதனை குடும்பத்திற்காக சமரசம் செய்து கொள்ளாமல் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு அணியில் சேரும் வாய்ப்பு அடுத்த ஆண்டில் அறிவிக்கப்படும்.
40 சதவிகிதத்திற்கு கீழ் எலும்பியல் குறைபாடு இருப்பவர்கள் அணியில் சேரத் தகுதி படைத்தவர்களாவர். நாங்கள் அறிவிப்பை வெளியிடும் சமயத்தில் தொடர்பு கொள்பவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிறார் ‘சச்சின்’ சிவா.
‘15வயதில் கழுத்துக்கு கீழ் முடங்கிப் போன வாழ்க்கை’ - மாற்றுத் திறனாளிகளின் மாற்றமாய் மாறிய விராலி!