வெட்டப்பட்ட மரங்களுக்காக கதறி அழுத 9 வயது சிறுமி: பசுமைத் தூதுவராக நியமித்த மணிப்பூர் அரசு!
ஆசை ஆசையாக தான் வளர்த்த மரங்களை அதிகாரிகள் வெட்டியதால் 9 வயது சிறுமி கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுமியை சமாதானப்படுத்த 20 மரக்கன்றுகளை நட்டுள்ள அரசு, அவரை அம்மாநில பசுமைத் தூதராகவும் நியமித்து கௌரவப் படுத்தியுள்ளது.
மரங்களை வெட்டாதீர்கள் என்ற கோஷம் நீண்டகாலமாகவே மக்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. முன்பை விட தற்போது மக்களிடமும் இது பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சில சமூகவிரோதிகளைத் தவிர மக்கள் பெரும்பாலும் காடுகளைக் காப்பாற்ற வேண்டும், புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக விதைப்பந்து போன்ற பல விசயங்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு மரங்களுக்காக கதறி அழுது பலரது மனதிலும் இடம் பிடித்து விட்டார் மணிப்பூரைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர்.
மணிப்பூர் மாநிலம் கக்சிங் மாவட்டம் ஹியாங்லாம் மக்கா லேக்காய் பகுதியை சேர்ந்தவர் வாலென்டினா எலங்பாம். தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வரும் அச்சிறுமி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றின் கரையோர பகுதியில் இரண்டு குல்மோகர் மரங்களை நட்டார்.
அம்மரம் நன்கு வளர்ந்து தனக்கு நிழல் தரும் என ஆசை ஆசையாக அதனை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். ஒவ்வொரு நாளும் மரத்தின் வளர்ச்சியை பார்த்து அவர் ஆனந்தத்தில் திளைத்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அந்த ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் அப்பகுதி அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது கரையோரங்களில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
இதில், வாலென்டினா வளர்த்த இரண்டு மரங்களும் வெட்டப்பட்டது. தான் ஆசை ஆசையாய் வளர்த்த மரங்கள் வெட்டப்பட்டதைப் பார்த்து வேதனையடைந்த சிறுமி தேம்பித் தேம்பி அழுதார்.
இதனை அவரது உறவினர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார். மரங்கள் மீது அச்சிறுமிக்கு இருந்த காதலைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறுமிக்காக பரிதாபமும் பட்டனர். இதனால் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பின்னர் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த சிறுமி வாலென்டினா அழுதது பற்றி கேட்டதற்கு,
”நான் இந்த மரங்களை நட்டு மிகவும் அன்புடன் வளர்த்து வந்தேன், அதை இப்படி வெட்டியதைப் பார்த்து என் மனம் வலிக்கிறது,” என்றார்.
இந்த வீடியோ அம்மாநில முதல்வர் பிரன் சிங் மற்றும் வனத்துறை அமைச்சர் ஷியாம்குமார் சிங் பார்வைக்கும் சென்றது. இப்படிப்பட்ட குழந்தைகள் தான் வருங்கால உலகின் இயற்கை காவலர்கள் என்பதை உணர்ந்தனர்.
சிறுமியின் தாய் ஷாயா இதுபற்றி பேசியபோது,
“என் மகளுக்கு இந்த மரங்கள் மீது இத்தனை அன்பு இருந்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இனி நாங்கள் அவளுடைய இந்த ஆசைக்கு ஆதரவாக இருப்போம்,” என்றார்.
இரண்டு மரங்களை வெட்டியதற்காக சிறுமியிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர். அதோடு, சிறுமியின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அதே இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 20 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் அப்பகுதியில் 500 மரக்கன்றுகளை நட, அப்பகுதி மக்களும் திட்டமிட்டுள்ளனர்.
மரங்களை வெட்டக் கூடாது, புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற தாக்கத்தை தனது கண்ணீர் மூலம் உலகளவில் ஏற்படுத்தியுள்ளார் சிறுமி வாலென்டினா. சிறிய வயதில் இயற்கை மீது பேரார்வம் கொண்டுள்ள சிறுமிக்கு அப்பகுதி எம்.எல்.ஏ பரிசு வழங்கி பாராட்டினார்.
வாலென்டினாவைக் கௌரவிக்கும் வகையில், அம்மாநில பசுமைத் தூதுவராக அவரை நியமித்துள்ளது மணிப்பூர் அரசு.