’பொருளாதாரம் வளரும் போது இறைச்சி சாப்பிடுவதும் உயரும்’- Tendercuts நிறுவனர்!
இந்தியாவில் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள், ஆனாலும் இறைச்சி விற்பனையை தொழிலாக மாற்ற முடியும் என எத்தனை பேர் நினைத்திருப்போம்? இதில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுகிறார் நிஷாந்த் சந்திரன்.
நம்மைச் சுற்றி ஏராளாமான தொழில் வாய்ப்புகள் உள்ளன என்பதை பல தொழில் முனைவோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் சிலர் கண்களுக்கு மட்டுமே அவை வாய்ப்புகளாக தெரிகின்றனவோ என்னமோ? அப்படி ஒரு வாய்ப்புதான் ’டென்டர்கட்ஸ்’ ‘Tendercuts'. அனைவருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் இறைச்சி விற்பனை நிறுவனம்தான் இது.
இந்தியாவில் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள்தான், ஆனாலும் இறைச்சியை தொழிலாக மாற்ற முடியும் என எத்தனை பேர் நினைத்திருப்போம்? இதில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தவர் நிஷாந்த் சந்திரன்.
சில நாட்களுக்கு முன்பு அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. டென்டர்கட்ஸ் நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு என்ன செய்தார் என விரிவாக உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து...
அப்பா தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை செய்தார். அதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிக்கல்வியை படித்தேன். 10வது படிக்கும் சமயத்தில் கம்யூட்டர் வாங்குவதற்கு அரசு கடன் வழங்கியது. அந்தக் கடனை பெற்று அப்பா எனக்கு கம்யூட்டர் வாங்கிக் கொடுத்தார்.
இப்போது நிறுவனம் தொடங்க வேண்டும் என்றாலே இணையதளம் முக்கியமானதாகி விடுகிறது. ஆனால் 99-ம் ஆண்டில் இணையதளம் தேவை என்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் விளக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பேசுவதை விட, வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பேசி அவர்களுக்கு இணையதளம் உருவாக்கும் பணியை செய்தோம்.
இதற்கென பிரத்யேக பணியாளர்களை நியமனம் செய்து போன் மூலம் தொடர்பு கொண்டோம். 1,000 நபர்களுக்கு போன் செய்தால் இருவர் மட்டுமே ஒப்புக்கொள்வர். அதனால் குறிப்பிட்ட சில நூறு நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுடைய வாடிக்கையாளர் போல போன் செய்து இணையதளம் இருக்கிறதா என்னும் கேள்வியை கேட்போம். இணையதளத்துக்கான தேவையை உருவாக்கி அதனை பின் போன் செய்யும் போது ஆர்டர் கிடைத்தது. ஆனால் நீண்ட நாளைக்கு இதேபோல இணையதளம் உருவாக்கும் நிறுவனமாக இருக்க முடியாததால் பேமெண்ட் கேட் வே நிறுவனத்தை {E-Billing Solutions P Ltd (EBS)} தொடங்கினோம்.
இந்த நிறுவனத்தை 2013ம் ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த Ingenico என்னும் நிறுவனத்துக்கு விற்றோம். பிரான்ஸ் நிறுவனம் என்பதால் அடிக்கடி ஐரோப்பாவுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. மாதத்தில் பாதி நாட்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்பதால் சர்வீஸ் அபார்ட்மெண்டில் தங்கினேன். அப்போது அங்குள்ள இறைச்சிக் கடைக்குச் செல்வேன். அந்த கடைகள் தூய்மையாகவும், இறைச்சி பதப்படுத்தப்பட்டும் இருக்கும். இந்த நினைவு எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.
நிறுவனத்தை விற்ற பிறகு, இரு ஆண்டுகள் பிரான்சில் இருக்க வேண்டிய சூழல் இருந்தது. நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிறகு என்ன செய்யலாம் என்னும் யோசனை இருந்துகொண்டே இருந்தது.
அப்போது சென்னையில் இறைச்சி வாங்கச் சென்றால், அந்த இடம் அசுத்தமாகவும், சுகாதாரம் இல்லாமலும் இருந்தது. Fssai அதிகாரிகளை சந்தித்த்து பேசியதில் இருந்துதான் இந்த தொழிலுக்கு இங்கே பெரிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன்,” என்றார் நிஷாந்த்.
இறைச்சியை 0 டிகிரி முதல் 4 டிகிரி வரை வெப்பநிலையில்தான் வைக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இந்த விதிமுறையை அமல்படுத்தினால் நகரத்தில் எங்குமே இறைச்சி கடை இருக்காது. எந்த கடையும் நடத்த முடியாது. இவை செய்ய குறைந்தபட்சம் 40 லட்சம் செலவாகும் எனக் கூறினார்.
ஐந்து கிலோ மட்டுமே!
அப்போதுதான் நாம் ஏன் இந்தத் துறையில் இறங்கக் கூடாது என்பது குறித்த யோசித்தேன். மேலும் இந்தத் துறை குறித்த தகவல்களும் நம்பிக்கையை உருவாக்கியது.
உதாரணத்துக்கு அமெரிக்காவில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு 90 கிலோ இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்கிறார். ஐரோப்பாவில் 65 கிலோ உண்கிறார்கள். சீனாவில் 50 கிலோ, எத்தியோபியாவில் கூட 5 கிலோ அளவுக்கு இறைச்சியை உணவாக எடுத்துகொள்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் சராசரியாக 4 கிலோ மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்.
சீனாவில் தற்போது 50 கிலோ என்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு இது மிகவும் குறைவாகவே இருந்தது. அதாவது பொருளாதாரம் வளர வளர மக்களின் உணவில் மாற்றம் ஏற்படும். அடுத்த சில ஆண்டுகளில் இந்த மாற்றம் இந்தியாவிலும் வருவதற்கான சாத்தியம் இருக்கிறது. தவிர நமக்கு அதிக புரோட்டீன் இருக்கும் உணவுதான் தேவை. ஆனால் கார்ப்போஹைட்ரேட் உணவினை எடுத்துக்கொள்கிறோம். செலவு குறைவு என்பதாலே அதிக கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்கிறோம்,” என்று விளக்கினார்.
பொருளாதாரம் வளர வளர அசைவம் சாப்பிடுவதும் அதிகமாகும். தவிர தென் இந்தியாவில் 90 சதவீதத்தினர் அசைவத்தை சாப்பிடுபவராகவே இருக்கிறார். வட இந்தியாவில் 70 சதவீதத்தினர் அசைவம் சாப்பிடுகின்றனர். அதனால் சரியான முறையில் இத்துறையில் ஈடுபடும் போது பெரிய வளர்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது என திட்டமிட்டு இந்தத் தொழிலில் இறங்கினோம்.
நேரடியாக விவசாயிகளிடமே கோழி மற்றும் முட்டையை வாங்கிறோம். அதேபோல மீன்களையும் எந்த இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக வாங்குகிறோம். மிகச்சில மீன்களை மட்டுமே இறக்குமதி செய்கிறோம்.
இப்போது சென்னையில் ‘Tendercuts'ன் 13 கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் விற்பனை நடக்கிறது. செயலி மற்றும் இணையம் மூலம் டெலிவரியும் செய்கிறோம். இப்போதைக்கு ஒரு மாதத்துக்கு 1.25 லட்சம் ஆர்டர்கள் வருகின்றன. ஒரு ஆர்டரின் சராசரி மதிப்பு ரூ.450 என்பதாக இருக்கிறது.
அடுத்து என்ன?
இப்போது ஹைதராபாத்தில் கிளைகளைத் தொடங்கி இருக்கிறோம். ஹைதராபாத்தில் முழுமையாக விரிவாக்கம் செய்த பிறகு, பெங்களூருவில் தொடங்குவது குறித்து திட்டமிட்டு வருகிறோம். முக்கிய நகரங்களில் விரிவாக்கம் செய்த பிறகு தமிழகத்தில் உள்ள அடுத்தகட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வது குறித்து திட்டமிட வேண்டும், என்றார் நிஷாந்த்.
தொழிலில் backward integration செய்வது குறித்தும் திட்டமிட்டு வருகிறோம். கோழிப் பண்ணைகள் ஏற்கெனவே உள்ளன. மீன்களை செயற்கையாக வளர்க்க முடியாது. ஆனால் ஆடு வளர்ப்பு என்பது இன்னும் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. இன்னும் சில காலத்துக்கு பிறகு இதில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறோம்.
அதே போல ready to cook உணவுவகை பிரிவும் வளர்ந்து வருகிறது. இப்போது சதவீத அடிப்படையில் குறைவாக இருந்தாலும் வரும் காலத்தில் இந்த பிரிவு வளரும் என்பதிலும் நம்பிக்கையாக இருக்கிறோம் என்றார்.
மாட்டிறைச்சி என்பது அரசியல் கேள்வியாக இருந்தாலும் உங்களிடம் கேட்டாக வேண்டுமே என்பதற்கு, நாங்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை விற்பனை செய்வதில்லை. இதற்கு அரசியல் காரணம் ஏதும் இல்லை. மொத்த இறைச்சி விற்பனையில் இந்த இரண்டு பிரிவின் பங்கு 3 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது, என்கிறார். மூன்று சதவீதத்துக்கு திட்டமிட்டால் மற்ற பிரிவு விற்பனை குறைந்துவிடும். அதனால் இந்த பிரிவில் நாங்கள் கவனம் செலுத்தப்போவதில்லை என நிஷாந்த் சந்திரன் கூறினார்.