இந்தியர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது சைவமா? அசைவமா? ஓர் ருசியான ஆய்வு முடிவு!
இந்தியாவில் அதிகம் பேர் அசைவ உணவுப் பிரியர்களாக இருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பலருக்கும் அது ஓய்வு நாள் என்பதைப் போல், அசைவப் பிரியர்களுக்கு எல்லாம், நிச்சயம் அசைவம் சாப்பிடும் நாள். ஞாயிற்றுக்கிழமைகளில், ‘உங்க வீட்ல இன்னைக்கு என்ன மீனா, சிக்கனா, மட்டனா?’ என்பது தான் நண்பர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியாக இருக்கும். அந்தளவுக்கு ஞாயிறு என்பது அசைவத்திற்கான நாள் என காலண்டரில் குறிக்காத குறையாக, அசைவப் பிரியர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
இப்படி இருக்க சாப்பாடு பற்றி வெளியான ஒரு ருசியான ஆய்வு முடிகள் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Arka Farms எனும் நிறுவனம் மக்கள் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை சதவீதம் வைசம் மற்றும் அசைவ உணவுகளை அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் எனும் ஆய்வு முடிவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சாம்பிள் ரெஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் பேஸ்லைன் (Sample Registration system baseline survey) நடத்திய இந்த ஆய்வு முடிவுகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆய்வு மூலம், இந்தியாவில் அதிகம் பேர் அசைவ உணவுப் பிரியர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் 98.7 சதவீதம் பேர் அசைவ உணவையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். மீதமுள்ள 1.3 சதவீதம் பேர் தான் சைவம் சாப்பிடுபவர்கள். இதனால் தெலுங்கானா மாநிலம் தான், அசைவப் பிரியர்கள் பட்டியலில் நாட்டின் முதல் மாநிலமாக உள்ளது.
அசைவப் பட்டியலில் தெலுங்கானாவுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கம் தான் உள்ளது. 98.55% வங்காளிகள் அசைவப் பிரியர்களாக உள்ளனர். மீதமுள்ள 1.45% பேர் தான் சைவப்பிரியர்கள்.
98.25 சதவீதம் அசைவப் பிரியர்களுடன் ஆந்திர மாநிலம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில், 1.75 சதவீதம் பேர் தான் வைசம் சாப்பிடுகிறார்கள்.
நான்காவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 97.65 சதவீதம் தமிழர்கள் அசைவப் பிரியர்கள். மீதமுள்ள 2.35 சதவீதம் பேர் தான் சைவமாம்.
ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளள. நாட்டில் உள்ள மாநிலங்களில் பாதிக்கும் மேல், அசைவப் பிரியர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
சைவத்தை பொறுத்தவரை ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 74.9 சதவீதம் பேர் அம்மாநிலத்தில் சைவமாக உள்ளனர். மீதமுள்ள 25.1 சதவீதம் பேர் தான் அசைவம் சாப்பிடுபவர்கள். இரண்டாவது இடத்தில், ஹரியான இருக்கிறது. இங்கு 69.25 சதவீதம் பேர் சைவம் சாப்பிடுபவர்கள். மீதமுள்ள 30.75 சதவீதம் பேர் தான் அசைவர்கள்.
மூன்றாவது இடத்தில் பஞ்சாப் உள்ளது. அம்மாநிலத்தில் 66.75% பேர் சைவம் சாப்பிடுபவர்கள். 33.25% பேர் தான் அசைவர்கள். இதேபோல், உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியான மக்கள் சைவம் சாப்பிடுகிறவர்கள்.
மேற்கூறிய இந்த மாநிலங்களின் வெப்பநிலை உள்ளிட்டக் காரணிகளால், அங்கு வசிக்கும் மக்கள் அசைவத்தை அவ்வளவாக விரும்பாமல் இருக்கலாம் எனத் தெரிகிறது. இதேபோல், தெலங்கானாவில் மாமிச உணவு அதிகம் உட்கொள்வதற்கு அம்மாநில மக்களின் பாரம்பரியமான உணவுப் பழக்கம்தான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தெலங்கானா மக்களில் ஏராளமானோர் ஆடு மற்றும் கோழி இறைச்சியை தங்களது காலை உணவில் கூட அதிகம் எடுத்துக்கொள்கின்றனராம். அதோடு, விலங்குகளின் கிட்னி, மூளை மற்றும் கால் போன்றவற்றையும் தங்களது உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆடு, கோழி மட்டுமின்றி முயல், ஈமுக்கோழி மற்றும் காடை ஆகிய இறைச்சிகளையும் அவர்கள் விரும்பி உணவாக எடுத்துக்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மாறிவரும் வாழ்க்கை முறையும் சம்பந்தப்பட்ட மாநில மக்கள் அதிகம் அசைவ உணவு எடுத்துக்கொள்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. மக்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கு மதமும் ஒரு முக்கியக் காரணியாக பங்காற்றுகிறது என்பது மறுக்கமுடியாது. இதனாலேயே சில குறிப்பிட்ட திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது மக்களின் முக்கிய உணவாக அசைவம் இடம் பெற்று விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் நாடு தழுவிய அளவில் பார்த்தால் அசைவ உணவு உண்பவர்களின் சராசரி விகிதம், 2004 ல் 75 சதவீதமாக இருந்தது 2014 ல் 71 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.