Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

அச்சுறுத்தும் ‘குரங்கு அம்மை’ – ஏன், எப்படி பரவுகிறது? சிகிச்சை என்ன? – மருத்துவரின் பதில்கள்!

குரங்கு அம்மை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? தடுப்பு நடவடிக்கைகள் என்ன? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் Dr Mehta’s Hospitals மருத்துவர் டாக்டர். அதிதி.கே.

அச்சுறுத்தும் ‘குரங்கு அம்மை’ – ஏன், எப்படி பரவுகிறது? சிகிச்சை என்ன? – மருத்துவரின் பதில்கள்!

Wednesday July 27, 2022 , 3 min Read

'வைரஸ்’ என்பது பல காலமாகவே மக்களிடையே இருந்து வந்தாலும், சமீபத்தில் இந்த வார்த்தை மக்களை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி எடுத்த நிலையில் மக்களிடையே புது பீதியைக் கிளப்பியிருக்கும் மற்றொரு நோய் ‘குரங்கு அம்மை’ (MonkeyPox).

நோயின் தன்மையையும் தீவிரத்தையும் பற்றித் தெரிந்துகொண்டால்தானே அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளமுடியும்?

குரங்கு அம்மை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? தடுப்பு நடவடிக்கைகள் என்ன? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் Dr Mehta’s Hospitals இண்டெர்னல் மெடிசின் மருத்துவர் டாக்டர். கே.அதிதி.

1

குரங்கு அம்மை என்றால் என்ன?

குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் பாதிப்பு. இதனால் சருமத்தில் கொப்பளங்களும் காய்ச்சலும் ஏற்படும். பெரியம்மை வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த அதே வைரஸ்தான் இந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், பெரியம்மையைக் காட்டிலும் நோய் பாதிப்பின் தீவிரம் சற்று குறைவு எனலாம். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது.

ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடம் இந்த நோய் முதல் முறையாக 1958-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு முதல் முறையாக ஆப்பிரிக்காவில் மனிதர்களைத் தாக்கியது.

குரங்கு அம்மையின் தாக்கம் எப்படி இருக்கும்?

முதலில் காய்ச்சலும் அதைத் தொடர்ந்து உடலில் தடிப்பும் ஏற்படும். குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகள்:

  • காய்ச்சல்
  • தலைவலி
  • உடல்வலி
  • சோர்வு
  • நிணநீர் கணுக்கள் வீக்கம்

குரங்கு அம்மையால் உடலில் ஏற்படும் தடிப்புகள் பார்ப்பதற்கு பருக்கள் அல்லது கொப்புளங்கள் போல் இருக்கும். இதைக் கண்டு சின்னம்மை என்று மக்கள் குழப்பமடைவதுண்டு. முகத்திலும் கை, கால்களிலும் காணப்படும் தடிப்புகள் 24 மணி நேரத்தில் உடல் முழுவதும் பரவிவிடும்.

குரங்கு அம்மை எப்படி பரவுகிறது?

  • நோய் பாதித்தவர்களின் உடம்பில் இருக்கும் தடிப்பு அல்லது உடலிலிருந்து வெளியேறும் திரவங்களை நேரடியாக தொடுவதன் மூலம் இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும்.
  • நோயாளியின் உடலிலிருந்து வெளியேறும் திரவங்கள் பட்ட துணிகளையோ பொருட்களையோ தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவும்.
  • பாதிக்கப்பட்டவர்களுடன் நீண்ட நாட்கள் நேரடித் தொடர்பில் இருக்கும்போது சுவாசத் துளிகள் மூலமாகவோ முத்தம் கொடுப்பது போன்ற நெருக்கமான தொடர்பு மூலமாகவோ நோய் பரவும்.
  • பாலியல் தொடர்பு மூலமாகவும் பரவும்.
  • குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட தாயின் மூலம் வயிற்றில் இருக்கும் கருவிற்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.
  • வைரஸ் பாதிப்பிருக்கும் விலங்கின் உடம்பில் இருக்கும் சிராய்ப்பு மூலமோ அல்லது அது கடிப்பதன் மூலமாகவோ அதன் மாமிசத்தை உட்கொள்வதன் மூலமாகவோ நோய் பரவும்.
1

நோய் பாதிப்பிலிருந்து எப்போது மீளலாம்?

நோய் பாதித்த 2-4 வாரங்களில் முழுமையாக மீண்டுவிடலாம். நோயாளியின் உடலில் தோன்றும் தடிப்பும் சிரங்கும் தொற்று ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இவை முழுமையாக குணமான பிறகே நோயாளி குணமாகிவிட்டதாக சொல்லமுடியும்.

குரங்கு அம்மை நோய் பரவல் எப்படியிருக்கிறது?

2022-ம் ஆண்டு மே மாதம் முதல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் கவலையளிக்கக்கூடிய பொது சுகாதார அவசர நிலையாக குரங்கு அம்மை நோயை உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

குரங்கு அம்மையால் எளிதில் பாதிக்கக்கூடியவர் யார்?

பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.

1980-களுக்கு பிறகு பெரியம்மை தடுப்பூசி பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்டதால் அதற்குப் பிறகு பிறந்தவர்கள், அதாவது 40-50 வயதிற்கும் குறைந்தவர்களுக்கு ரிஸ்க் அதிகம்.

குரங்கு அம்மை பாதிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

  • சருமத்தில் தடிப்பு ஏற்பட்டவர்கள் அல்லது குரங்கு அம்மை இருக்கலாம் என சந்தேகம் இருப்பவ்ர்களுடன் நேரடித் தொடர்பைத் தவிர்த்துவிடவும். அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களைப் பயன்படுத்தவேண்டாம்.
  • நோயாளிகள் பயன்படுத்திய துணி அல்லது பாத்திரங்களைத் தொடும்போதோ சுத்தப்படுத்தும்போதோ கையுறை அணிந்துகொள்வது அவசியம்.
  • நோயாளி 2-4 வாரங்கள் வரை தனிமைப்படுத்தப்படவேண்டும்.

குரங்கு அம்மைக்கு தடுப்பூசிகள் பயனளிக்குமா?

பெரியம்மைக்கு எதிராக போடப்பட்ட தடுப்பூசி குரங்கு அம்மை நோயிலிருந்தும் பாதுகாப்பு அளிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆய்வகங்களில் வேலை செய்வோர், நோயாளிகளின் மாதிரிகளை கையாள்வோர் போன்றோருக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இவர்களுக்கு தடுப்பூசி பலனளிக்கும்.

Jynneos, ACAM2000 ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் போடலாம் என சொல்லப்படுகிறது.

குரங்கு அம்மை நோய்கான சிகிச்சை என்ன?

பெரும்பாலான நோயாளிகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு 2-4 வாரங்களில் குணமாகிவிடும். எனவே, மற்றவர்களுக்கு பரவாத வகையில் நோயாளியைத் தனிமைப்படுத்தி அறிகுறிகளுக்கு சிகிச்சையளித்தால் போதும். தீவிர பாதிப்பு இருக்கும் நோயாளிகளுக்கு Tecovirimat என்கிற ஆண்டிவைரல் மருந்து பலன் கொடுக்கும்.

தொகுப்பு: ஸ்ரீவித்யா