‘Covaxin பூஸ்டர் தடுப்பூசி ஓமிக்ரான், டெல்டா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது’ – ஆய்வில் தகவல்!
கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளும்போது ஓமைக்ரான் மற்றும் டெல்டா மாறுபாடுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக எமோரி பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பிரபல நிறுவனமான பாரத் பயோடெக், எமோரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி,
கோவாக்சின் தடுப்பூசியை இரண்டு தவணைகளாக செலுத்திக்கொண்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளும்போது ஓமிக்ரான் மற்றும் டெல்டா மாறுபாடுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் மருந்தின் செயல்திறன் mRNA தடுப்பூசிகளுடன் ஒப்பிடும் வகையில் சிறப்பானதாக இருப்பதாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.
இந்த ஆய்வு தொடர்பான தகவல்கள் விரைவில் medRXiv தளத்தில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட 90% பேர் நடுநிலைப்படுத்தக்கூடிய ஆண்டிபாடிகளைப் பெற்றிருப்பதும் இதில் தெரிய வந்துள்ளது.
“கோவிட்-19 மாறுபாடான ஓமிக்ரான் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கோவாக்சின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட நபர்கள் ஓமிக்ரான் மற்றும் டெல்டா மாறுபாடுகளை எதிர்த்து செயல்படுவதற்கான நோய் எதிர்ப்பாற்றலைப் பெற்றிருப்பது ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. நோய் தீவிரமடைவதையும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலையையும் தடுக்கும் ஆற்றலை பூஸ்டர் டோஸ் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன,” என்கிறார் ஆய்வக பரிசோதனைகளுக்குத் தலைமை வகித்துள்ள எமோரி தடுப்பூசி மையத்தின் உதவி பேராசிரியர் மெஹூல் சுதர்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறும்போது,
“கோவாக்சின் தடுப்பூசியை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஹூமரல், செல் மீடியேடட் என இருவகையான நோய் எதிர்ப்பாற்றலையும் உருவாக்கக்கூடிய மல்டி-எபிடோப் தடுப்பூசி தொடர்பான எங்களது கணிப்பு சரியானது என்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு எதிராக உலகளவிலான பயன்பாட்டிற்கு தடுப்பூசியை உருவாக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரின் பயன்பாட்டிற்கும் ஏற்றதாக கோவாக்சின் அமைந்திருப்பது எங்கள் இலக்கு எட்டப்பட்டதை உணர்த்துகிறது,” என்று தெரிவித்திருக்கிறார்.
கோவிட்-19 பெருந்தொற்று வெவ்வேறு மாறுபாடுகளுடன் தொடரும் என்பதை ஓமிக்ரான் உணர்த்தியுள்ளது. இருப்பினும், விரிவான பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியானது புதிய மாறுபாடுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன, என்கிறார் Ocugen Inc சிஇஓ மற்றும் இணை நிறுவனர் டாக்டர் சங்கர் முசுனுரி தெரிவித்துள்ளார்.