1 கோடி ரூபாய் டர்ன்ஓவர் எட்ட திட்டமிட்டுள்ள அம்மா-மகள் தொடங்கிய மசாலா பிராண்ட்!
ஊர்மிளாவும் அவரது மகள் ஆர்த்தியும் தொடங்கியுள்ள மும்பையைச் சேர்ந்த ‘மசாலா டோக்ரி’ பிராண்ட் கோவன் மீன் கறி மசாலா, மல்வானி மீட் மசாலா, பிந்தி சோலே மசாலா என கிட்டத்தட்ட 11 மசாலா தயாரிப்புகளை வழங்குகிறது.
நம் இந்திய உணவு புளிப்பு, உப்பு, காரம் என அறுசுவையும் நிறைந்ததாக இருக்கும். இதில் மசாலாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு நல்ல உணவு வகையை ருசி நிறைந்ததாகவும் ருசியற்றதாகவும் மாற்றும் சர்வ வல்லமை படைத்தது மசாலாக்கள்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மசாலாக்கள் உள்நாட்டில் அதிகளவில் வாங்கப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. 2020 நிதியாண்டில் 3.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மசாலாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக இந்தியா பிராண்ட் அண்ட் ஈக்விட்டி ஃபவுண்டேஷன் (IBEF) தெரிவிக்கிறது.
MDH, Suhana Spices, Everest போன்ற பெருநிறுவனங்கள் மசாலாப் பிரிவில் செயல்பட்டாலும்கூட எத்தனையோ சிறு நிறுவனங்களும் இந்தப் பிரிவில் செயல்பட்டு வருகின்றன.
அத்தகைய நிறுவனங்களில் ஒன்று மசாலா டோக்ரி (Masala Tokri). ஊர்மிளா, அவரது மகள் ஆர்த்தி சமந்த் இருவரும் இணைந்து இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஊர்மிளா சமையலில் அதிக ஆர்வம் கொண்டவர். பொழுதுபோக்காக ஆர்த்தியும் சமையலில் ஈடுபடுவார். ஒரு கட்டத்தில் இந்த பொழுதுபோக்கையே தொழிலாக மாற்றத் தீர்மானித்தார்.
ஊர்மிளா ஆரம்பத்தில் மசாலாக்கள் தயாரித்து நண்பர்களிடமும் உறவினர்களுடமும் பகிர்ந்துகொண்டார். அவர்களிடம் மசாலாக்கள் பற்றிய கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
இந்த முயற்சி மெல்ல வாட்ஸ் அப் குழுவாக உருவானது. அதிகளவில் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர் வரத் தொடங்கின.
2018-ம் ஆண்டு இந்த வணிகம் விரிவடைந்தது. யூகே, சிங்கப்பூர், துபாய், அரபு நாடுகள் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினார் ஊர்மிளா. வணிகத்தை அம்மாவால் தனியாக சமாளிக்கமுடியாது என்பதை உணர்ந்த ஆர்த்தி வணிக செயல்பாடுகளில் இணைந்துகொண்டார்.
இருவரும் இணைந்து 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ’மசாலா டோக்ரி’ என்கிற பிரீமியம் மசாலா பிராண்ட் நிறுவினார்கள்.
மசாலாக்கள் தயாரிப்பில் ஊர்மிளா முழு கவனம் செலுத்தும் நிலையில் ஆர்த்தி விற்பனை, மார்க்கெட்டிங், புரொமோஷன் போன்ற பிரிவுகளை நிர்வகித்து வருகிறார்.
ஷாஹி கரம் மசாலா, ஆவாதி பிரியாணி மசாலா, மும்பை பாவ் பாஜி மசாலா, கேரளா சாம்பார் மசாலா, மல்வானி மீட் கறி மசாலா ஆகிய ஐந்து மசாலாக்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிராண்ட் தற்சமயம் 11 தயாரிப்புகளை வழங்குகிறது.
சவால்கள்
மசாலா சந்தையில், குறிப்பாக விநியோகம் மற்றும் வெண்டிங் பிரிவில், ஆண்களின் ஆதிக்கம் அதிகம் என்கிறார் ஆர்த்தி. இதை எதிர்கொள்வதில் அம்மா-மகள் இருவரும் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர்.
பல விநியோகஸ்தர்கள் இவர்களை ஏமாற்றியுள்ளனர். ஆனாலும் இவர்கள் நம்பிக்கையுடன் சூழலை எதிர்கொண்டு அதற்கேற்ற உத்திகளை வகுத்து சவால்களை திறமையாகக் கையாண்டனர்.
அடுத்து இவர்கள் சந்தித்த மிகப்பெரிய சவால் நிதி. ஊர்மிளா, ஆர்த்தி ஒவ்வொருவரும் 50,000 ரூபாய் வணிகத்தில் முதலீடு செய்தனர். ஆரம்பத்திலேயே அத்தனை எளிதாக இவர்கள் வெற்றிப் பாதையில் பயணித்துவிடவில்லை.
வருவாய் ஈட்ட கடினமாக உழைத்தார்கள். ஊர்மிளா தயாரிப்புகளில் முழு கவனம் செலுத்திய நிலையில் ஆர்த்தி ஃப்ரீலான்சராக பணிபுரிந்து வருவாய் ஈட்டினார். அந்த வருவாயையும் வணிகத்தில் முதலீடு செய்தார். சுயநிதியில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு டர்ன்ஓவர் 20 லட்ச ரூபாய் என்கிறார் ஆர்த்தி.
மசாலாக்களின் சரிவிகித கலவை
ஊர்மிளா மசாலாக்களை சரிவிகிதத்துடன் கலந்து தயாரிக்கிறார். நாட்டின் வெவ்வேறு பகுதிகலில் பிரீமியம் மூலப்பொருட்களை வழங்கும் விற்பனையாளர்களுடன் இணைந்துள்ளனர்.
ஆர்த்தியின் தாத்தா உருவாக்கிய ஒரு இயந்திரத்தில்தான் இவர்கள் மசாலாக்களை வறுக்கிறார்கள். மும்பை தோமபிவளி பகுதியில் உள்ள நான்கு தொழிற்சாலைகளில் மசாலாக்கள் கைகளால் இடிக்கப்படுகின்றன.
“மசாலாக்கள் மிகவும் பொடியாகிவிடக்கூடிய என்பதால் நாங்கள் கைகளால் இடிக்கிறோம்,” என்று ஆர்த்தி விவரித்தார்.
மசாலாக்கள் கைகளால் இடிக்கப்படுவதால் மிகவும் பொடியாகவும் இல்லாமல், கொரகொரப்பாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்கின்றன. இதனால் மசாலாக்களில் வாசனை தக்கவைக்கப்படுகிறது.
மசாலா டோக்ரி தயாரிக்கும் மசாலாக்களில் ரசாயனங்களோ, பதப்படுத்தும் பொருட்களோ எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் ஓராண்டு வரை மசாலாக்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். கோவன் மீன் கறி மசாலா, மல்வானி மீட் மசாலா, பிந்தி சோலே மசாலா ஆகியவை இந்நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகள்.
போட்டி
இந்திய மசாலா சந்தையில் நிலைத்திருப்பது எளிதல்ல எனும் ஆர்த்தி, ‘MDH, Suhana, Everest’ போன்ற பிராண்டுகள் சந்தையில் 90 சதவீதம் ஆதிக்கம் செலுத்தி வருவதை என் ஆரம்பகட்ட ஆய்வில் தெரிந்துகொண்டேன். எனவே மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என்பதை உணர்ந்தேன், என்றார்.
இந்தத் தொழில்முனைவோர் நம்பிக்கையுடன் மசாலா டோக்ரி பிராண்டை பிரீமியம் பிராண்டாக உருவாக்க விரும்புகிறார்கள்.
மசாலா டோக்ரி மசாலாக்கள் 65-125 ரூபாய் வரை ஆன்லைனிலும் 55-175 ரூபாய் வரை ஆஃப்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது.
பெருந்தொற்று சூழலிலும் வாய்ப்பு
IndiLux, Qtrove, LBB, Amazon போன்ற ஆன்லைன் சானல் மூலம் மசாலா டோக்ரி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது.
“ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது எனக்கு பயம் வந்துவிட்டது. சந்தையில் விநியோகம் ஏதும் இல்லை. அந்த சமயத்தில்தான் ஆஃப்லைன் ஸ்டோர்களில் எங்கள் தயாரிப்புகளைப் பார்க்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம்,” என்றார் ஆர்த்தி.
இறுதியாக மும்பை மற்றும் புனேவில் உள்ள பல்வேறு ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.
தற்போது குஜராத்தில் விரிவடையத் திட்டமிட்டுள்ளார்கள். பெருந்தொற்று சூழலில் மக்கள் புதிய உணவு வகைகளை முயற்சி செய்வதால் மசாலாக்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக ஆர்த்தி தெரிவிக்கிறார்.
மசாலா டோக்ரி பிராண்ட் மசாலாக்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் சர்க்கரை, மாவு, பிளாக் சால்ட் போன்ற தயாரிப்புகளையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறது.
புனேவில் ஒரு பார்ட்னருடனும் மும்பையில் ஒரு பார்ட்னருடன் இந்த பிராண்ட் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்த இரு பகுதிகளிலும் 60 லட்ச ரூபாயும் 50 லட்ச ரூபாயும் வருவாய் ஈட்டமுடியும் என்றும் ஆர்த்தி பகிர்ந்துகொண்டார். அடுத்த நிதியாண்டில் மசாலா டோக்ரி 1 கோடி ரூபாய் டர்ன்ஓவர் எட்ட திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா