பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து நீடித்த தண்ணீர் தீர்வை அளிக்கும் தாய்- மகன் நடத்தும் 'Boon'
2015 ல் விபா திரிபாதி, அத்வைத் குமாரால் துவக்கப்பட்ட தண்ணீர் நுட்ப ஸ்டார்ட் அப் பூன், 300 வாடிக்கையாளர்கள் மற்றும் ஐந்து லட்சம் மக்களுக்கு மேல் தினசரி சேவை அளிக்கிறது.
இந்தியாவின் ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் 3.3 மில்லியன் மெட்ரிக் டன் அளவு இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவிக்கிறது.
ஐநா சபை தகவல்படி, உலக பிளாஸ்டிக் கழிவுகளில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மற்றவை நீர் நிலைகளை சென்றடைகின்றன. இதன் விளைவாக 2050ம் வாக்கில், பெருங்கடல்கள் பாதி பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்திருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆர்ப் மீடியாவின் ஒரு பகுதியாக நியூயார்க் மாநில பல்கலை மேற்கொண்ட ஆய்வு, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட தண்ணீரில் 93 சதவீதம் நுண் பிளாஸ்டிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது.
ஐஓடி திறன் கொண்ட சர்வதேச தண்ணீர் நுட்ப ஸ்டார்ட் அப் ’பூன்’ (
), முன்னதாக ஸ்வாஜால் என இருந்தது, இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயற்சிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதோடு, தூய தண்ணீருக்கான அணுகலையும் வழங்குகிறது.தாயும், மகனுமான விபா திரிபாதி, அத்வைத் குமார் 2015ல் இந்நிறுவனத்தை துவக்கினர். குருகிராம் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் சமூக குழுக்கள், கிராமப் பகுதிகள், விருந்தோம்பல் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு குடிநீர் தீர்வுகளை வழங்குகிறது.
வெவ்வேறு இடங்களில் இருக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை பராமரிக்க, நிறுவனம், Clairvoyant எனும் ஐஓடி மேடையை உருவாக்கியுள்ளது.
“இந்த நுட்பம் பின்னர் ஹோட்டல்கள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பூஜ்ஜியம் தொலைவு கருத்தாக்கத்திற்கு வித்திட்டு, பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக நீடித்த தன்மை கொண்ட கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த வைத்தது,” என்கிறார் அத்வைத் குமார்.
பூன், பி2பி மற்றும் பி2ஜி மாதிரியில் செயல்படுகிறது. இதன் 60 சதவீத வர்த்தகம் விருந்தோம்பல் துறையில் இருந்தும், 30 சதவீதம் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தும், 10 சதவீதம் தண்ணீர் ஏடிஎம்களில் இருந்தும் வருகிறது.
குருகிராமில் ஆய்வு மையம் கொண்டுள்ள இந்த ஸ்டார்ட் அப், 17 மாநிலங்களில் இயங்குகிறது. இதன் குழு; மும்பை, பூனா, டேராடூன், ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் பரவியுள்ளது. தினமும் 300 வாடிக்கையாளர்கள், 5 லட்சம் மக்களுக்கு மேல் சேவை அளிக்கிறது.
இதன் கட்டணம், ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருப்பது துவங்கி பல லட்சம் வரை அமையலாம். நிறுவனம் ஆண்டு அடிப்படையில் நான்கு மடங்கு வளர்ச்சி கண்டு வருகிறது. இல்ல சுத்திகரிப்பு தீர்வையும் வழங்க உள்ளது.
துவக்கம்
பூன் தண்ணீர் ஏடிஎம் உருவாக்கத்தின் மூலம் ஸ்வஜாலாக துவங்கியது. தண்ணீர் பற்றாக்குறை அல்லது மோசமான குடிநீர் கொண்ட கிராமங்களில் நிறுவனம் இந்த தண்ணீர் ஏடிஎம்களை அமைத்தது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான தண்ணீர் ஏடிஎம்களை அமைத்தது. நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் சுத்தமான குடிநீர் வழங்க ஐஆர்சிடிசியுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப கழகம், தொழில் வளர்ச்சி வாரியம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உள்ளிட்ட துறைகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் ஆப்பிரிக்கா மற்றும் சஹாரா பகுதிகளில் விளிம்பு நிலை மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளது.
ஐஓடி சார்ந்த தீர்வுகள்
நிறுவனத்தின் ஏஐ திறன் கொண்ட ஐஓடி சார்ந்த தண்ணீர் சுத்திகரிப்பு மேடை Clairvoyant பங்குதாரர்கள் குடிநீர் தேவையை தொடர்ச்சியாக கண்காணித்து செயல்பட வழி செய்கிறது. இந்த சேவை தண்ணீர் தரம் மற்றும் அளவை நிகழ் நேரத்தில் கண்காணித்து தூய குடிநீர் வழங்குகிறது.
ஏஐ சாதனங்கள், கருவிகளின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்து, பராமரிப்பு குறிப்புகளை வழங்குகின்றன. WaterOZO நுட்பம் மூலம் தண்ணீர் பாத்திரங்கள் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன. நிறுவனம், வாட்டர் சென்ஸ், வாட்டர் கியூப் மற்றும் 'ஜீரோமைல்' வாட்டர் ஆகிய சேவைகளை அளிக்கிறது.
வாட்டர் சென்ஸ், தண்ணீர் பயன்பாடு மற்றும் கணிப்பிற்கு அலசல் மற்றும் ஏஐ நுட்பத்தை பயன்படுத்துகிறது. வாட்டர் கியூப், பூனின் ஏஐ சார்ந்த சுத்திகரிப்பு திறன் மூலம் பிளாஸ்டிக் கழிவு, கரி வெளிப்பாடு இல்லாமல் சுத்திகரிக்கிறது. ஜீரோ மைல் வாட்டர் இந்தியாவில் தயாரான கருவிகள் கொண்டு தண்ணீர் சேவை அளிக்கிறது.
“இந்த அமைப்பு போக்குவரத்து செலவை குறைத்து, பார்ட்னர்கள், வாடிக்கையாளர்கள் தண்ணீரை சுத்திகரித்து, நல்ல கண்ணாடி பாட்டில்களில் நிரப்புக்கொள்ள வழி செய்து அதிக தரம் வாய்ந்த தண்ணீர் அனுபவத்தை வழங்குகிறது,” என்கிறார் குமார்.
இயந்திரங்களின் இருப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த ஐஓடி நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
தண்ணீர் சாதனங்களுடன் ஐஓடி இணைக்கப்பட்டுள்ளதால் பராமரிப்பு சேவை அளிப்பவர்களுக்கு உடனடி தகவல் கிடைக்கிறது. பராமரிப்பில் இது உதவுகிறது.
“காத்திருப்பு நேரம் தேவைப்படாமல் கருவிகள் பராமரிக்கப்படவும் இது உதவுகிறது. பல இயந்திரங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும். ஒரு சேவையாளர் அதிக கருவிகளை பராமரிக்க முடியும்,” என்கிறார் குமார்.
நிறுவனம் தனது ஜீரோ தொலைவு தண்ணீர் திட்டம் மூலம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 22 பிளாஸ்டிக் பாட்டில்களை பதிலீடு செய்கிறது.
நிறுவனம், தனது சுத்திகரிப்பு கருவிகள் வழக்கமான கருவிகளை விட 4 மடங்கு செயல்திறன் வாய்ந்தது எனக் கூறுகிறது. மூன்று மடங்கு தாதுக்களை தக்க வைக்கும் திறன் கொண்டது என்கிறது. நிறுவனம் தனது ஜீரோ மைல் தொலைவு மூலம் 5,00,000 கி கார்பன் வெளிப்பாட்டை குறைத்திருப்பதாக கூறுகிறது. இது ஆண்டுக்கு 26,000 மரங்கள் உறிஞ்சக்கூடிய கார்பன் அளவாகும்.
சந்தை, வளர்ச்சி
இந்தியாவின் தண்ணீர் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப சந்தை 2023ல் 0.92 பில்லியன் டாலரில் இருந்து 2028ல் 1.54 பில்லியன் டாலாராக வளரும் என மோர்டார் இண்டெலிஜன்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த காலத்தில் ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சி 10.78 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூன் நிறுவனம் ராஜ்ஸ்தான் அசெட் மேனஜ்மெண்ட் கம்பெனியிடம் (RAMC) இருந்து 1.6 மில்லியன் டாலர் திரட்டியது. RVCF III – இந்தியா வளர்ச்சி நிதி வாயிலாக மற்றும் பிரமோத் அகர்வால் தலைமையிலான முதலீட்டாளர்கள் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டது.
இந்நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் இருப்பை கொண்டுள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தனது இருப்பை வலுவாக்கவும் விரும்புகிறது.
ஆசியான் பகுதியில் 10 மில்லியன் டாலர் நிதியை எதிர்பார்ப்பதோடு அடுத்த சில ஆண்டுகளில் 50 மில்லியன் டாலர் வருவாயை அடைய விரும்புகிறது.
ஆங்கிலத்தில்: பூஜா மாலிக் |தமிழில்: சைபர் சிம்மன்
‘காலநிலை மாற்றம்’ - நெதர்லாந்து பணியை விட்டு சமூக தொழில்முனைவர் ஆன ஹரி பிரசாத்!
Edited by Induja Raghunathan