Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

இறந்த மகனின் இரட்டைக் குழந்தைகளுக்கு பாட்டி ஆகிய தாய்!

தன் குழந்தைமீது ஒரு தாய் வைத்துள்ள பேரன்பு, அவளை எதையும் செய்ய வைக்கும். எந்தளவிற்கு அவள் செய்வாள் என்பதை உணர்த்துகிறது, இறந்து இரு ஆண்டுகளாகிய மகனை தந்தையாக்கி அழகு பார்த்துள்ள, இத்தாயின் கதை!

இறந்த மகனின் இரட்டைக் குழந்தைகளுக்கு பாட்டி ஆகிய தாய்!

Tuesday October 06, 2020 , 3 min Read

இவ்வுலகில் தாயின் அன்பிற்கு நிகரானது வேறெதுவுமில்லை. தொப்புள்கொடியில் தொடங்குகிறது தாய்-சேய் இடையேயான பந்தம். அப்பந்தம் முடிவற்றது. அதனாலே, குழந்தைகள், அவர்களது பிரச்னைகள் என்று வந்துவிட்டால் இந்த அம்மாக்கள் மட்டும் எந்த எல்லைக்கும் சென்று அதைசரி செய்கிறார்கள். அப்படி, ஒரு தாய் இறந்த மகனுக்கு இரண்டாண்டுகளுக்குபின் உயிர்கொடுத்து மறுபிறவி எடுக்க செய்துள்ளார். ஆம், இறந்த மகனை மீண்டும் உலகில் பிறக்க வைத்த ஒரு தாயின் நெஞ்சை நெகிழ வைக்கும் பாசப்போராட்டம் இது!


குழந்தையை கருவில் சுமக்கும்போதே ஒரு தாய், அவனது அனைத்து பருவம் குறித்து கனவு கண்டுவிடுகிறாள். குழந்தையை வளர்த்து ஆளாக்கி, சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்குவதையே வாழ்நாள் ஆசையாகவே கொண்டுள்ளனர் பெரும்பாலான அம்மாக்கள்.


ஆனால், அனைவருடைய ஆசையும் நிறைவேறுவதில்லை. அப்படித்தான் ராஜஸ்ரீ பாட்டீலின் ஆசையும் நிராசையாகியது. புனேவைச் சேர்ந்த ராஜஸ்ரீயின் மகன் பிரதமேஷ். படிப்பில் கெட்டிக்கார மாணவர். இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்து, முதுகலை பட்டப்படிப்பிற்காக 2010ம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.

Rajashree Patil  family
அன்பான குடும்பம், கெட்டிக்கார மகன், மகனுடைய பிரகாசமான எதிர்காலம் என்று ராஜஸ்ரீயின் வாழ்க்கை ஆனந்தம் நிறைந்தே இருந்துள்ளது. ஆனால், 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையே அந்த ஆனந்தம் நிலைத்து இருந்தது. ஏனெனில், ஆரோக்கியத்துடன் இருந்த பிரதமேஷிற்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. குடும்பமே நிலை குலைந்தது.
ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்ட பிரதமேஷிற்கு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நாட்டின் நெறிமுறையின்படி, புற்றுநோய் சிகிச்சையால் விளையும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையையும் கையாள ஏதுவாக, நோயாளிகளின் விந்தணு சேகரிக்கப் பரிந்துரைப்பது வழக்கம். அதுபோன்றே, திருமணமாகாத பிரதமேஷின் விந்துவும் சேகரித்து விந்தணு வங்கியில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமேஷை, 2013ம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர் அவரது பெற்றோர்கள். மும்பையின் ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமேஷுக்கு மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மகன் குணமடைந்து வருவதை கண்ட குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை.

ராஜஸ்ரீ

தன் மகனின் இரட்டைக் குழந்தைகளுடன் தாய் ராஜஸ்ரீ

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமேஷிற்கு புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள் மீண்டும் தென்படத் தொடங்கின. பார்வை இழப்பு, குரல் இழப்பு மற்றும் பலவீனம் என உடல்நலம் மோசமாகியது. தீவிரவாக நோய்வாய்ப்பட்ட பிரதமேஷ் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் மூளைக்கட்டி மீண்டும் வளருவதை உறுதிப்படுத்தினர்.

குடும்பத்தினரும், மருத்துவர்களும் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். ஆயினும், எதுவும் கைக்கொடுக்கவில்லை. மூன்று ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய அவர், செப்டம்பர் 3, 2016 அன்று இறந்தார். மகனை இழந்த துக்கத்திலிருந்த ராஜஸ்ரீ, மகன் இறந்த ஒரு ஆண்டுக்கு பிறகு, மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தைகளை பெற விரும்பியுள்ளார். பிரதமேஷும் அவருடைய விந்தணுக்களை பெற்றுகொள்ளும் உரிமையை அவரது தாயுக்கும், தங்கைக்கும் அளித்து இருந்துள்ளார். ஆயினும், வெளிநாட்டிலிருந்து விந்தணுவை பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டார் அவர்.

ஆனால், எத்தடையும் அவரை தடுக்கவில்லை. பேரப்பிள்ளைகளின் வழி மகனை மீண்டும் உலகுக்கு கொண்டு வருவதில் தீர்மானமாய் இருந்துள்ளார் ராஜஸ்ரீ. அவரது விடாமுயற்சியால், ஜெர்மனியில் பதப்படுத்தி வைக்கப்பட்ட மகனின் விந்தணுவை பெற்றார்.

இறுதியாய், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதியன்று அவரது மகனின் அழகிய இரட்டைக் குழந்தைகளுக்கு பாட்டியாகினார் ராஜஸ்ரீ. ஆண் குழந்தைக்கு ப்ரத்மேஷ் என்ற அவரது மகனின் பெயரையும், ‘கடவுளின் கொடை' என்ற பொருள் கொண்ட ‘ப்ரீஷா' என்ற பெயரை பெண் குழந்தைக்கும் வைத்திருக்கிறார் அவர்.
‘‘நான் என் மகனின் ஆத்மாவை என்னுள் சுமந்து கொண்டிருந்தேன். அவன் சுவாசிக்க ஒரு உடலைத் தேடி கொண்டிருந்தேன். ஆண் குழந்தைக்கு பிரதமேஷ் என்றும், பெண் குழந்தைக்கு ப்ரிஷா என்றும் பெயரிட்டுள்ளேன்.

என் மகன் புற்றுநோய் அவதிப்பட்டுவந்த போது, கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. கீமோ சிகிச்சை அளிப்பதற்குமுன், முன்னெச்சரிக்கையாக என் மகனின் விந்தணுக்களை மருத்துவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். அன்று செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், இன்று என் மகனை திரும்ப பெறமுடிந்தது.

twins

courtesy: pune mirror

ஆனால், பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள விந்தணுவை பெறுவது அத்தனை எளிதல்ல. நாங்கள் நிறைய தடைகளை எதிர்கொண்டோம். பணமும், நேரமும் எங்களுக்கு பிரதான பிரச்னைகளாக இருந்தது. ஆனால், இப்போது இந்த குழந்தைகளுக்கு நான் பொறுப்பு, என்று பேரக் குழந்தைகளின் வழி மகனை காணும் சந்தோஷத்தில் கூறினார் ராஜஸ்ரீ.

‘‘நாங்கள் முதலில் ராஜஸ்ரீயை பரிசோதித்தோம். ஆனால், அவர் கருத்தரிக்க முடியாது என்பதை கண்டறிந்தோம். அதிர்ஷ்டவசமாக, ராஜஸ்ரீயின் முடிவிற்கு அவரது பெற்றோர்கள் முழு ஆதரவை வழங்கியதால், அவர்களது உறவினர்களில் ஒருவர், வாடகைத் தாயாக ஒப்புக்கொண்டார். முதல் முயற்சியிலே நாங்கள் வெற்றி பெற்றோம். 2017ம் ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பெண் கருத்தரித்தார். பின், பிப்ரவரி 12, 2018 அன்று அவர், ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரட்டையர்களை பெற்றெடுத்தார்,'' என்று சஹாயத்ரி மருத்துவமனையின் ஐவிஎஃப் துறைத் தலைவர் டாக்டர் சுப்ரியா புராணிக் கூறினார்.

‘‘அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் மூலம் மக்கள் தங்கள் மகிழ்ச்சியான தருணங்களை புதுப்பித்துக் கொள்ள நாங்கள் உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மருத்துவமனையில் ஒரு பெண் ஒரு குழந்தையை பிரசவிக்கும் போதெல்லாம் நாங்கள் நிறைய உணர்ச்சியான தருணங்களையும், மகிழ்ச்சியையும் காண்கிறோம். அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களில் பங்கெடுத்துள்ளோம். ஆனால்,

இந்த விஷயத்தில் அபாயகரமான நோயுடன் போராடி இறந்த மகனின் தாயார் உடன் பயணித்தோம். இந்த செயல்முறை முழுவதும் அவர் வெளிப்படுத்திய நேர்மறையான எண்ணங்கள் பாராட்டக்கூடியது. ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளின் வடிவத்தில் தனது மகனைத் திரும்பப் பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள்,'' என்றார் டாக்டர் சுப்ரியா.


தகவல் மற்றும் பட உதவி : புனே மிரர் |கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ