ஈவென்ட் மேனேஜ்மென்ட் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கும் தாய்!
சில பெண்கள் திருமணம் முடிந்து அம்மா ஆன பின்னர் எடுக்கும் இடைவெளியை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி தொழில் முனைவர்களாகி சாதிக்கின்றனர். அந்த வகையில் சாப்ட்வேட் எஞ்சினியரான செல்வாம்பிகா இன்று ஈவென்ட் மேலாண்மை நிறுவனம் தொடங்கி வெற்றிநடை போடுகிறார்.
பெண்கள் நன்கு படித்து, நல்ல சம்பளம் என நல்ல நிலையில் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு தாய்மை அடையும்பொழுது வேலையில் இருந்து இடைவெளி தேவைப்படுகிறது. சிலருக்கு தற்கால இடைவெளியாக இருக்கிறது ஆனால் பல பெண்களுக்கு நிரந்தரமாக அலுவலக வாழ்க்கை முடிவைடைகிறது.
ஆனால் ஒரு சில அம்மாக்கள் பிரசவத்திற்கு எடுக்கும் இடைவெளியை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி தொழில்முனைவர்களாக உதிக்கின்றனர். அந்த வகையில் மென்பொருள் பொறியாளராக இருந்து இன்று ’ஈவென்ட் ஜங்ஷன்’ ‘Event Junction' என்னும் ஈவென்ட் மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனராகியுள்ளார் செல்வாம்பிகா.
பட்டபடிப்பை முடித்துவிட்டு பொறியாளராக பணிப்புரிந்த செல்வாம்பிகா தன் பிரசவத்தின்போது வேலையில் இருந்து விடைப்பெற்று இன்று தன் நிறுவனம் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கிறார்.
“குழந்தைக்கு பிறகு வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய நிலைமை, 9 டு 5 வேலையை என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. நான் பொறியாளராய் இருந்தாலும் கூட மார்கெடிங் மற்றும் மேலாண்மை மீது ஆர்வம் இருந்தது,” என தன் ஸ்டார்ட் அப்பிற்கு ஆரம்பமாக இருந்த காரணத்தை விளக்குகிறார் செல்வாம்பிகா.
அப்பொழுது பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி நேச்சுரல்ஸ் நிறுவனர் சி கே குமரவேல் அவர்களின் நேர்காணலை கண்டு அவரது பிராண்டிற்கு தன்னால் முடிந்ததை ஏதேனும் செய்ய முடியுமா என்பதை தெரிந்துகொள்ள அவரை அணுகினார். அவரின் நேர்காணலில் தேர்ச்சிபெற்ற செல்வாம்பிகா, பொறியியல் தொழிலை விட்டுவிட்டு ப்ரைடல் மேக் அப் பிரிவுக்கு மார்கெடிங் ஹெட் ஆக பணிக்கு அமர்ந்தார்.
நல்ல வேலை நல்ல சம்பளம் இருந்தது ஐடி துறையில் இருந்தும் தனக்கு ஏற்றார்போல் பணி மாற்றம் செய்து தருவதாக தெரிவித்தாலும் மீண்டும் அதை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மேலும் தன் கணவரும் நல்ல நிதி நிலையில் இருந்ததால் ரிஸ்க் எடுக்கலாம் என முடிவு செய்தார் செல்வாம்பிகா.
“இது 9 டு 5 வேலை இல்லை மேலும் எனக்கு அத்துறையின் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது, மார்கெடிங் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன், எந்த தொழிலாயினும் சந்தைப்படுத்துதலில் தான் தொழிலின் முன்னேற்றம் இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டேன்,” என்கிறார்.
தன் வேலையின் போதும் ஒரு ப்ரைடல் ஃபாஷன் ஷோவை தன் நிறுவனம் சார்பாக செய்துள்ளார் இவர். அந்த ஈவன்ட் பெரும் வெற்றி அடைய அதில் நல்ல லாபம் ஈட்ட முடியும் என அறிந்து சுயமாக ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை துவங்க முடிவு செய்தார்.
“நான் இந்தத் துறையை தேர்ந்தெடுக்கக் காரணம் மற்ற துறைகளில் மூலப்பொருளும் முதலீடும் அதிகம் தேவை ஆனால் இதில் நெட்வொர்க் மற்றும் யோசனை இருந்தால் மட்டுமே போதுமானது.”
எடுத்ததும் தன்னை நம்பி பெரிய ஈவென்ட்களை கொடுக்க மாட்டார்கள் என எண்ணி முதலில் பிறந்தநாள் விழாவில் இருந்து தொடங்க முடிவு செய்தார். ஆனால் இங்கு ஈவென்ட் மேனேஜ்மென்ட்டும் முதல் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்வதற்கென சந்தையில் அதிக நிறுவனங்கள் இருந்தது கடும் போட்டியாக இருந்தது.
“சந்தையில் இருக்கும் நிறுவனங்களைத் தாண்டி தன் நிறுவனம் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்று ’நோ லாஸ் நோ ப்ராஃபிட்’ என்று அறிவித்து சந்தைப்படுத்தியுள்ளார்.”
இதன் மூலம் செய்த முதல் விழா பெரும் வெற்றியடைய தொடர்ந்து பல பிறந்தநாள் ஈவென்ட்டுகளை நோ லாஸ் நோ ப்ராஃபிட் மூலம் செய்து வந்தார். வலைபக்கங்களில் அதிகமாக சந்தைப்படுத்த நல்ல முனேற்றத்தை அடைந்தார் இவர். சிரியதாக 5000 ரூபாயில் விழாக்களை ஏற்பாடு செய்யத் துவங்கி இன்று லட்சங்கள் மதிப்புள்ள விழாக்களை எடுத்து நடத்துகிறார். ஸ்டார் ஹோட்டல்கள் பலருடன் இணைந்து அந்த ஹோட்டல்களில் நடக்கும் ஈவென்ட்களையும் செய்கிறார் இவர்.
நிறுவனம் துவங்கி ஒரு வருடம் ஆன நிலையில் பிறந்தநாள் பார்டிகளை தாண்டி புத்தாண்டி பார்ட்டி, கல்லூரி விழா, சில பிராண்ட்களுக்கு மார்கெடிங் போன்ற பல நிகழ்வுகளை செய்கின்றனர் செல்வாம்பிகாவின் ‘ஈவெண்ட் ஜன்க்ஷன்’ குழுவினர். அக்டோபர் 2017ல் துவங்கி ஒரு வருடத்திற்குள் இன்று மாதம் 3 லட்சம் வரை லாபம் ஈட்டுகிறார் இவர்.
“ஒரே பணியில் குறிப்பிட்ட நேரத்துக்கு வேறு ஒருவருக்கு வேலை செய்வதற்கு பதில் நமக்காக உழைத்தால் லாபமும் நேரமும் அதிகமாகக் கிடைக்கும்,” என முடிக்கிறார் செல்வாம்பிகா.