திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி: குவியும் பாராட்டுக்கள்!
சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி திருமலை திருப்பதி தேவதஸ்தானத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி திருமலை திருப்பதி தேவதஸ்தானத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
நாகூர் தர்காவிற்கும், வேளாங்கண்ணி தேவலாயத்திற்கும் இந்துக்கள் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது போல், ஐயப்பன் மலைக்கும், திருப்பதிக்கும் பிற மதத்தினர் செல்வதும் நன்கொடை அளிப்பதும் இந்திய மக்களின் மதசார்பற்ற தன்மையை பறைசாற்றுகிறது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி செய்த செயல் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது.
இஸ்லாமிய தம்பதி கொடுத்த நன்கொடை:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதிக்கு, சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த சுபீனா பானு மற்றும் அப்துல் கனி ஆகியோர் திருப்பதி தேவதாஸ்தானத்திடம் ஒரு கோடி மதிப்புள்ள நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.
திருப்பதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி ஓய்வு இல்லத்திற்கு ரூ.87 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை வழங்கியுள்ளனர். அதேபோல், திருப்பதி வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் அளிக்கும் வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சத்திற்கான டிமாண்ட் டிராப்ட்டையும் வழங்கியுள்ளனர். திருமலை கோவிலில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி (EO) AV தர்ம ரெட்டியிடம் ஒப்படைத்தனர்.
இது முதல் முறை அல்ல:
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அப்துல் கனி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடை அளிப்பது இது முதல் முறையல்ல.
2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கோயில் வளாகங்களில் கிருமிநாசினிகளை தெளிக்க பல பரிமாண டிராக்டர் பொருத்தப்பட்ட தெளிப்பானை நன்கொடையாக வழங்கியுள்ளார். அதற்கு முன்னதாக கோயிலுக்கு காய்கறிகள் கொண்டு செல்வதற்காக ரூ.35 லட்சம் மதிப்பிலான குளிர்சாதன வசதி கொண்ட டிரக்கை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக செப்டம்பர் 17 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி 1.5 கோடி ரூபாயை திருப்பதி தேவதஸ்தானத்திற்கு வழங்கியுள்ளார். அம்பானியுடன் அவரது மகன் அனந்தின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் இயக்குநர் மனோஜ் மோடி ஆகியோர் தரிசனம் செய்தனர்.