Chandrayaan 3 - லேண்டர் தரையிறங்க உதவும் நாமக்கல் மண் - தேர்வானது முதல் சோதனை வரை நடந்தது என்ன?
சந்திரயான் 3 விண்கலம் திட்டத்திற்கு நாமக்கல் மாவட்டம் குன்னமலையில் உள்ள மண் பயன்படுத்தப்பட்டது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்...
சந்திரயான் 3 விண்கலம் திட்டத்திற்கு நாமக்கல் மாவட்டம் குன்னமலையில் உள்ள மண் பயன்படுத்தப்பட்டது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்...
அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளுக்கு போட்டியாக இந்தியாவின் இஸ்ரோ நிறுவனமும் விண்வெளி சோதனையில் தடம் பதித்து வருகிறது. உலக நாடுகளையே திரும்பி பார்க்க வகையில், 2008ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 1 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பினர்.
வடதுருவத்தில் தரையிறங்கிய அந்த விண்கலம், நிலவின் பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது. அதையடுத்து, 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது, ஆனால் அந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதால் அத்திட்டம் தோல்வியை தழுவியது.
நாமக்கல் மண்ணில் தடம் பதித்த சந்திரயான்:
தற்போது சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரையும், பிரக்யான் ரோவரையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சந்திரயானில் உள்ள லேண்டரும் ரோவரும் முதலில் சரியாக தரையிறங்குகிறதா? என்பதை சோதித்து பார்க்க நிலவில் உள்ளதைப் போன்ற மண் தேவைப்பட்டது.
சந்திரயான் 1 சோதனையின் போது, நாசாவிலிருந்து ஒரு கிலோ நிலவு மண் 15 ஆயிரம் ரூபாய்க்கு இஸ்ரோ வாங்கியது.
ஆனால், இந்த முறை அதற்கான பட்ஜெட் இல்லாததால், இதுபோன்ற மண் வேறு எங்காவது உள்ளதா என இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர தேடலில் ஈடுபட்டனர். அந்த வகையான ’அனார்தசட்’ மண் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி பகுதியில் கிடைப்பது தெரியவந்தது.
இங்கு இருக்கும் பாறைகளை வாங்கி, அதை சேலத்தில் உள்ள தொழிற்சாலையில் தூளாக நொறுக்கி உள்ளனர். அதன் மூலம் கிடைத்த மண் நிலவில் இருக்கும் மணலை போலவே இருந்துள்ளது. பின் அதை வைத்து வைத்து ஆராய்ச்சியை, சோதனையை செய்து பார்த்து இருக்கிறார்கள்.
அந்த மண்ணைக் கொண்டு சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர் சரியாக தரையிறங்குகிறதா? என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்தனர். சந்திரயான் 3 விண்கலத்தையும் அவ்வாறு விஞ்ஞானிகள் சோதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ஆராய்ச்சி கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை வைத்து, அங்கு இருக்கும் வாயுக்களை மட்டும் பயன்படுத்தி, விக்ரம் லேண்டர் சரியாக இறங்குகிறதா என்று சோதனை செய்தது. இதற்காக நிலவில் இருப்பது போல தரையும், மண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மண் பயன்படுத்தப்படக் காரணம் என்ன?
நிலவில் உள்ள கனிம மற்றும் வேதியியல் பண்புகள் ஒத்துப்போனதால் தான் நாமக்கல் குன்னமலை பகுதியில் இருந்து மண் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக புவி தகவல் கோளியல் மைய பேராசிரியர் அன்பழகன் கூறுகையில்,
“சந்திரயான் 1 திட்டத்தின் போது நடந்த பரிசோதனையில், நாமக்கல்லில் உள்ள அனோர்த்தோசைட் (anorthosite) மண்ணின் வேதியியல் பண்பும், நிலவின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய வேதியியல் பண்புகள், கனிம பண்புகள் அனைத்தும் ஒத்துப்போவதை கண்டறிந்தோம். அதனையடுத்து, சந்திரயான் 2, 3 விண்கலத்தை தரையிறங்கும் சோதனைக்காக நாமக்கல்லில் இருந்து மண்ணை சேகரித்துக் கொடுத்தோம்,” என்றார்.
இதனையடுத்து, நாமக்கல்லில் இருந்து சுமார் 50 டன் அளவிற்கு மண் மற்றும் பாறைகள் எடுக்கப்பட்டு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Chandrayaan 3-இன் மாஸ்டர் மைண்ட் - இந்திய நிலவுப்பயண வரலாற்றில் மீண்டும் ஒரு தமிழர்!