நக்சல் பாதித்த பகுதியில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் நம்ரதா
நம்ரதா ஜெயின் இரண்டாவது முயற்சியில் சிவில் சர்வீச் தேர்வில் வெற்றி பெற்றாலும், முன்னிலை இடம் பிடித்து ஐபிஎஸ் பணியில் சேர மூன்றாவது முறை மீண்டும் முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார்.
சத்திஸ்கரின் தண்டவடா பகுதி மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக அறியப்படுகிறது. இந்த பகுதியில் 5.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நக்ஸல்கள் வன்முறை தவிர, மதுபோதை வன்முறை, வேலையின்மை ஆகிய பிரச்சனைகள் இதன் வளர்ச்சியை பாதித்துள்ளன. இந்த மாவட்டத்தின் கல்வி விகிதம் 30.2 சதவீதமாக மிக குறைவாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் எளிதில் அணுக முடியாமல் தொலைதூரத்திக்ல் இருப்பது குறைந்த கல்வி விகிதத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது.
இந்த பின்னணியில் மாவட்டத்திற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, தண்டவடாவை சேர்ந்த நம்ரதா ஜெயின் இந்த பகுதியில் இருந்து யு.பி.எஸ்.சி தேர்வி வெற்றி பெற்ற முதல் பெண்ணாக இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது. அகில இந்திய அளவில் இவர் 12வது இடம் பிடித்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக போதிய வசதிகள் இல்லை என்ற போதிலும், நம்ரதா விடாமுயற்சியோடு, ஆன்லைன் பயிர்சியை நாடி, தனது சிவில் சர்வீஸ் கனவை நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.
“எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இது பெருமிதமான தருணம். நான் பணி அமர்த்தப்படும் எந்த ஒரு இடத்திலும் கடமை செய்ய தயாராக உள்ளேன். சதிஸ்கரின் மேலும் பல இளைஞர்கள் சாதிக்க தூண்டுகோளாக இருப்பேன்,” என 25 வயதான நம்ரதா கூறுகிறார்.
வன்முறைக்கு தீர்வு
இவரது குடும்பம் ராஜஸ்தானைச் சேர்ந்தது என்றாலும், நம்ரதாவின் தாத்தா 50 ஆண்டுகளுக்கு முன், பாஸ்டரில் இருந்து குடிபெயர்ந்து தண்டவாடாவில் வசித்து வருகின்றனர். அவரது அப்பா ஜன்வர்லால் ஜெயின் பிஸ்னஸ்மேனாக இருக்கிறார். தாய் கிரண் ஜெயின் இல்லத்தலைவியாக இருக்கிறார்.
தண்டவடாவில் பெற்ற அனுபவம் காரணமாக, நம்ரதா இந்திய காவல் துறையில் (ஐ.பி.எஸ்) சேர விரும்புகிறார். 10 வயது முதல் அவர் வன்முறை சம்பவங்களை பார்த்து வந்துள்ளார். வன்முறை சம்பவங்கள் பெருகுவதைக் கண்டு, தனது பகுதிக்கு ஏதேனும் செய்ய விரும்பினார்.
எட்டாவது படித்துக்கொண்டிருந்த போது, பள்ளிக்கு வந்த மாவட்ட கலெக்டரிடம் அவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தனது தந்தையிடம் கலெட்கர் பதவி பற்றி கேட்டறிந்தார்.
“தந்தை என்னிடம் சிவில் சர்வீஸ் தேர்வு பற்றியும் கலெட்கர்கள் சமூகத்தின் மன்னர்கள் என்றும் தெரிவித்தார். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் படைத்த, மக்கள் நலனுக்காக செயல்படக்கூடிய அதிகாரம் பெற்றவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள்,” என தெரிவித்தார்.
இதனால் ஊக்கம் பெற்ற நம்ரதா, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அரசு அதிகாரியாக வேண்டும் என உறுதி கொண்டார்.
மூன்றாம் முறை
பள்ளிப் படிப்பை முடித்து, பிலாய் தொழில்நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு அவர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராக தில்லி சென்றார்.
“யூ.பி.எஸ்.சி தேர்வு தொடர்பான வசதிகள் தண்டவாடாவில் இல்லை. எங்களுக்கு அதிக தகவல்கள் தெரியவில்லை, உயர்கல்வி என்றால், பொறியியல் அல்லது எம்பிஏ படிப்பது என நினைத்துக் கொண்டிருந்தோம்,” என்கிறார் நம்ரதா.
தில்லியில் படித்துக்கொண்டிருந்த போது தான் நம்ரதாவுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு முறை குறித்து புரிந்தது. 2015ல் அவரால் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் தண்டவடா திரும்பியவர் தனது தயாரிப்பை தொடர்ந்தார்.
மாவட்ட நிர்வாகம் நடத்திய பயிற்சி மையத்தில் அவர் பயிற்சி பெற்றார். 2016 ல் அவர் 2வது முயற்சியில், 1099 வெற்றியாளர்களில் 99 வது இடம் பெற்றார். எனினும் அவர் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியாக விரும்பி மேலும் முன்னிலையில் தேர்வாக விரும்பினார். மூன்றாவது முயற்சிக்கு அவர் ஆன்லைன் கல்வி தளங்கள் உதவியுடன் முயற்சி செய்தார்.
”கடின முயற்சி காரணமாக, ரேங்க் பெற முடியாத நிலையில் இருந்து 99வது இடத்திற்கு வந்தேன். என் தோல்விகளில் இருந்து நிறைய கற்றுக்கொண்டு, கடின உழைப்பு மட்டும் பதில் அல்ல என புரிந்து கொண்டேன். இலக்கு குறித்து வியூகம் அமைத்து படிப்படியாக செயல்பட வேண்டும் என புரிந்தது,” என்கிறார் நம்ரதா.
ஆன்லைன் உதவி
பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவது என வரும் போது, ஒன்று தில்லிக்கு சென்று பயிற்சி பெற வேண்டும் அல்லது உள்ளூரிலேயே தயாராக வேண்டும். எனினும் தற்போதும் பல மாணவர்கள் ஆன்லைன் கல்வி மூலம் தயாராகின்றனர். நம்ரதா, NeoStencil கல்வி தளத்தில் சேர்ந்தார்.
“கடந்த 2 ஆண்டுகளாக அன்லைன் பயிற்சி மூலம் தயார் செய்து வந்தேன். என் வெற்றியில் நியோ ஸ்டென்சிலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தொலைதூரத்தில் உள்ள மாணவர்கள் தேசிய அளவில் போட்டியிட ஆன்லைன் பாடத்திடங்கள் உதவுகின்றன,” என்கிறார் அவர்.
“மாணவர்கள் யூ.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராக உதவுவது மற்றும் அவர்கள் கனவு நினைவாக உதவி செய்வது ஊக்கம் அளிப்பதாக,” நியோ ஸ்டென்சில் சி.இ.ஓ குஷ் பீஜல் கூறுகிறார்.
இந்திய அளவில் 5வது இடம் பிடித்த ஸ்ருஸ்டி ஜெயந்தும் நியோ ஸ்டென்சில் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகத்திற்கு சேவை
தொழில்நுட்பம் வரம்புகளை உடைத்து, கல்வியை அனைவருக்கும் சாத்தியமாக்கி உள்ளதாக கருதுகிறார் நம்ரதா.
“இதற்கு முன்னர் எங்கள் ஊர் பெயரைச் சொன்னால் மக்கள் உடனே வன்முறையை தான் நினைவில் கொள்வார்கள். எங்கள் நகரம் வளர்ச்சி அடையவில்லை. 2ஜி இணைப்பே பெரிய விஷயமாக உள்ளது. இன்று பல வசதிகள் உள்ளன. நக்சல் இயக்கம் தவிர பல விஷயங்கள் இருப்பதை உணர்த்த முடிகிறது,” என்கிறார் நம்ரதா.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருதி கேடியா | தமிழில் : சைபர்சிம்மன்