நீட் தேர்வில் 460 மதிப்பெண் பெற்ற லாரி ஓட்டுநர் மகள்: நனவான மருத்துவப் படிப்பு கனவு!
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகளுக்கு நீட் தேர்வு மூலமாக மருத்துவம் படிக்க சீட் கிடைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகளுக்கு நீட் தேர்வு மூலமாக மருத்துவம் படிக்க சீட் கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளியில் படித்து மாவட்ட அளவில் இரண்டாம் பிடித்த லாரி ஓட்டுநரின் மகள் ஒருவர், தனது கடின உழைப்பால் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வென்று அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார். மாணவி ஹரிதாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
7.5 சதவீத உள் ஒதுக்கீடு என்றால் என்ன?
மருத்துவப் படிப்புகளில் சேர தகுதித்தேர்வாக தேசிய அளவில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. இச்சட்டம் அப்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டது.
இச்சட்டத்தின் படி பஞ்சாயத்து பள்ளிகள், ஆரம்பப் பள்ளி, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி, முனிசிபல், மாநகராட்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் ஆகியவற்றில் படித்த மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்து வருகிறது.
மேற்கூறிய பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு சலுகையால் அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமான தமிழக மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
மருத்துவராகும் லாரி ஓட்டுநரின் மகள்:
திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி ஒன்றியத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வரதன் - சாந்தி தம்பதியின் மகள் ஹரிதா. நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் 530 மதிப்பெண்கள் எடுத்த ஹரிதா, மாவட்டத்திலேயே 2வது மாணவியாக தேர்வானார். மருத்துவ கனவுடன் நீட் பயிற்சி பெற்று, நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்ற ஹரிதா, 720க்கு 460 மதிப்பெண்கள் பெற்றார்.
லாரி ஓட்டுநரின் மகளான ஹரிதா அரசுப் பள்ளியில் படித்ததாலும், நீட் தேர்வில் 460 மதிப்பெண்கள் வரை எடுத்து தேர்ச்சி பெற்றதாலும் தனது முதல் முயற்சியிலேயே மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார். ஹரிதாவிற்கு மருத்துவ சேர்க்கைக்கான இடம் கிடைத்துள்ள பெற்றோர்கள், உறவினர்கள் மட்டுமின்றி கிராமத்தினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரிதாவின் செயலால் பல மாணவர்கள் மருத்துவம் படிக்க ஊக்கம் பெறுவார்கள் என ஊர் மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.
இந்த செய்தி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தீயாய் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாணவி ஹரிதாவை நேரில் அழைத்து, பொன்னாடை போற்றி பாராட்டினார். சிறந்த மருத்துவராக வந்து, ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென வாழ்த்தியுள்ளார்.
‘பெரிதினும் பெரிது கேள்’ என்றார் பாரதியார். அந்த வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் 12ம் வகுப்பில் மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்ததோடு நின்றுவிடாமல், முதல் முயற்சியிலேயே நீட் தேர்விலும் வென்று, ஏழைகளுக்கு எட்டாக்கனியக மாறி வரும் மருத்துவ படிப்பை நனவாக்கிய ஹரிதாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.