விடாமல் விரட்டிய வறுமை; 2 முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு மருத்துவம் படிக்க உதவிய அரசு!
மதுரை அருகே அரசு பள்ளியில் படித்து இரண்டு முறை நீட் தேர்வில் வெற்றி பெற்றும், மருத்துவம் பயில முடியாமல் வறுமையில் வாடிய மாணவிக்கு அரசின் உதவியால் கனவு நனவாகியுள்ளது.
மதுரை அருகே அரசுப் பள்ளியில் படித்து இரண்டு முறை நீட் தேர்வில் வெற்றி பெற்றும், மருத்துவம் பயில முடியாமல் வறுமையில் வாடிய மாணவிக்கு அரசின் உதவியால் கனவு நனவாகியுள்ளது.
ஆயிரங்களை அல்ல, லட்சங்களை செலவு செய்தாவது நம் பிள்ளைகள் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் ஏராளம். ஆனால், அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்விலும் ஒன்றல்ல, இரண்டு முறை வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர், வறுமையின் கோரப்பிடியால் கல்லூரியில் சேர முடியாத நிலையும் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் பானா மூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கபேச்சி. விவசாய கூலித்தொழில் செய்யும் தங்கபேச்சியின் பெற்றோர்களுக்கு அவரோடு சேர்த்து மேலும் 3 சகோதரிகள் உள்ளனர். கடந்த ஆண்டு விக்கிரமங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த தங்கபேச்சி, வறுமை ஒருபுறம் வாட்டினாலும் நீட் தேர்விற்கு தானே தயார் ஆனார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற தங்கபேச்சிக்கு தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிப்பதற்கான சீட் கிடைத்துள்ளது. ஆனால், தனது வறுமை காரணமாக கல்லூரி கட்டணம் செலுத்த வசதியின்றி கடந்த ஆண்டு மருத்துவம் படிக்கச் செல்ல முடியாமல் போனது.
குடும்பத்தின் வறுமை காரணமாக கடந்த ஓராண்டாகவே பெற்றோர் உடன் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்த தங்கபேச்சி, தனியார் நிறுவனத்தின் உதவியுடன் நீட் தேர்வு பயிற்சியும் பெற்று வந்துள்ளார்.
இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதிய அவர் வெற்றி பெற்று 256 மதிப்பெண்கள் எடுத்த தங்கபேச்சிக்கு, தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ள நிலையில், மீண்டும் கல்லூரி செலவுக்கு பணமில்லாததால் தங்கபேச்சியின் மருத்துவக் கனவு கைநழுவும் நிலை ஏற்பட்டது.
“பாழடைந்த வீட்டில் 4 பெண் பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் பெற்றோரால் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாது என்பதை நன்கு அறிந்த தங்கபேச்சி, மீண்டும் விவசாயக் கூலி வேலைக்கே செல்ல தயாரானார்.”
இருப்பினும் தனக்கு இரண்டாவது முறையாக மருத்துவப் படிப்பிற்கான சீட் கிடைத்தும் கல்லூரி கட்டணம், விடுதிக்கட்டணம், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு குடும்ப சூழ்நிலையால் எப்படி பணம் கட்ட போகிறோம் என்று தவித்து வருகிறேன். இதற்கு அரசு, சமூக நல ஆர்வலர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
தங்கபேச்சியின் இந்த கோரிக்கை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக அரசுக்கு எட்டியதை அடுத்து, அவரது பிற கட்டணங்களையும் ஏற்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தங்கபேச்சி கூறுகையில்,
“கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்வாகி கவுன்சிலிங் வரை சென்றேன். ஆனால், எனக்கு தனியார் கல்லூரியில் சீட் கிடைத்ததால் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாது என்பதால் படிக்கமுடியவில்லை. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 256 மதிப்பெண்கள் எடுத்தேன். ஆனால், இந்த ஆண்டும் பணம் இல்லாததால் என்னால் மருத்துவம் படிக்கமுடியாது என அஞ்சினேன். ஆனால் கல்லூரி கட்டணத்தோடு, விடுதி, சாப்பாடு போன்ற பிற கட்டணங்களையும் அரசு ஏற்பதாக கூறியுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
தங்கபேச்சி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க செல்வதால் அந்த ஊருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார். கடந்த ஆண்டு பானா மூப்பன்பட்டியில் இருந்து இவர் மட்டுமே நீட் தேர்வெழுதிய நிலையில், இந்த ஆண்டு அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட 3 மாணவிகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று, அதில் வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - ட்விட்டர்