வேளாண் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி; தமிழக கிராமங்களில் ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் விவசாயிகள்!
வளர்ந்த நாடுகளில் உணவு, மருந்து, காய்கறி ஆகியவற்றை பார்சலில் அனுப்பவும், திருவிழாக்களில் நகரங்களை ஒளி வெள்ளத்தில் திளைக்க வைக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவில் பட்டி, தொட்டி எல்லாம் ட்ரோன் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
வளர்ந்த நாடுகளில் உணவு, மருந்து, காய்கறி ஆகியவற்றை பார்சலில் அனுப்பவும், திருவிழாக்களில் நகரங்களை ஒளி வெள்ளத்தில் திளைக்க வைக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், இந்தியாவில் பட்டி, தொட்டி எல்லாம் ட்ரோன் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் புதிய வேளாண் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் ராணுவம் மற்றும் காவல்துறையில் பாதுகாப்பு, கண்காணிப்பு, பேரிடர் மீட்பு பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு உத்தரவை கண்காணிக்க நாடு முழுவதும் காவலர்களின் மூன்றாவது கண்ணாக ட்ரோன்கள் வேலை செய்தன.
மெல்ல, மெல்ல திருமணம், திருவிழாக்கள் போன்ற விசேஷங்களில் ட்ரோன்களை வைத்து வீடியோ எடுப்பது, வண்ண, வண்ண ஒளி வெளிச்சத்துடன் வேடிக்கை நிகழ்ச்சிகளை காட்டுவது என ட்ரோன்களின் பயன்பாடு சமானியர்களிடையே பிரபலமானது.
தற்போது ட்ரோன்கள் மூலம் தமிழக கிராமங்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆம், விவசாயிகள் தங்கள் வயல்களில் நானோ திரவ யூரியா மற்றும் உரங்களைத் தெளிக்கும் புதிய ட்ரோன் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
ட்ரோன் மட்டுமின்றி வேளாண் துறையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை உரத்தொழிற்சாலை நிறுவனம் (எம் எஃப் எல்) விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
வேளாண் தொழில்நுட்பத்தில் ட்ரோன்கள்:
தற்போது தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் ட்ரோன்களின் ஓசை ஒலிக்கத்தொடங்கியுள்ளது. வயல்வெளிகளில் பூச்சிக்கொல்லி மற்றும் உரம் தெளிப்பதில் பாரம்பரியமான முறைகளை விட நேரம் மற்றும் செயல்திறன் அதிகமாக இருப்பதாலும், முறையான பயிற்சி காரணமாகவும் விவசாயிகள் ட்ரோன்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
வழக்கமாக ஒரு வயல்வெளியில் உரங்களைத் தெளிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றால், ட்ரோன்கள் அந்த வேலையை செய்து முடிக்க 5 முதல் 7 நிமிடங்களை மட்டுமே ஆகிறது.
சென்னை உரத்தொழிற்சாலை நிறுவனத்தின் கூடுதல் மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்,
“ட்ரோனுக்கு ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. வழக்கமான முறையில் 100 லிட்டர் வரை தேவைப்படும். பயிர்களில் நேரடியாக இடுவதால் பயிரின் மகசூல் அதிகரிப்பதோடு, மண் வளம் இழக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பம் நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆபத்தான ரசாயனப் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதைக் குறைக்கிறது,” என்றார்.
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்:
வேளாண் பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், சென்னை உரத்தொழிற்சாலை நிறுவனம் (எம் எஃப் எல்) சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாமக்கல், சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விவசாயிகள் வேளாண் துறையில் ட்ரோன்களின் பங்களிப்பு குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் ஓலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி கூறுகையில்,
“திரவ யூரியா, உரங்களைத் தெளிக்கும் ட்ரோன் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும்,” என்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆதிகாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி பூங்கொடி,
“புதிய தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள உற்சாகமாக உள்ளேன். 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். இத்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை, ஊதிய அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உள்ள நிலையில், ட்ரோன்கள் ஒரு மாற்றுக் காரணியாக இருக்கும்” என்கிறார்.
மத்திய அரசு நிதியுதவி:
ஊரகப் பகுதிகளின் வோளாண் பணிகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை அதிகரிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பிரதமர் திரு நரேந்திர மோடி 2023, நவம்பர் 30 அன்று நமோ மகளிர் ட்ரோன் திட்டத்தை அறிவித்தார்.
15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்கி விவசாயிகளுக்கு வாடகை வடிவில் சேவை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தப் பன்முகத் திட்டம் வேளாண் நடைமுறைகளை நவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், அதிநவீன தொழில்நுட்பத்தை கிராமப்புறப் பெண்களுக்கு அளிக்கிறது.
வேளாண் புரட்சியில் அவர்களை முக்கியப் பங்கேற்பாளர்களாகவும் உறுதிப்படுத்துகிறது. மேலும், ட்ரோன் ஏரோநாட்டிக்ஸ் பயன்படுத்தப்படாத திறனை ஆராய புத்தொழில் நிறுவனங்களுக்கு இது வழிகளை உருவாக்குகிறது.
- வேளாண் ட்ரோன்களை ஊக்குவிக்க, மத்திய அரசு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. விவசாயிகள் கூட்டுறவு சங்கம், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் கிராமப்புற தொழில்முனைவோர் 40 சதவீத மானியத்துடன் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி பெறமுடியும்.
- வேளாண் பணிகளுக்கான வாடகை மையங்களை நிறுவும் வேளாண் பட்டதாரிகள் 50% மானியத்துடன் ஒரு ட்ரோனுக்கு 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி பெறலாம்.
- தனிநபர், சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் / பழங்குடியின உறுப்பினர்கள், பெண்கள், வடகிழக்கு மாநில விவசாயிகளுக்கு 50% மானியத்துடன், ரூ.5 லட்சம் வரையும், மற்ற விவசாயிகளுக்கு 40% மானியத்துடன், ரூ.4 லட்சம் வரையும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.