அதானி குழுமத்திற்கு அடுத்த அடி - அமெரிக்க பங்குச்சந்தை அளித்த அதிர்ச்சி அறிவிப்பு!

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடுகளில் இருந்து நீக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதானி குழுமத்திற்கு அடுத்த அடி -  அமெரிக்க பங்குச்சந்தை அளித்த அதிர்ச்சி அறிவிப்பு!

Friday February 03, 2023,

2 min Read

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடுகளில் இருந்து நீக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, ஜனவரி 24ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆய்வறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பங்குச்சந்தை மற்றும் கணக்குகளை கையாள்வதில் மோசடி செய்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

இதனையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் தனது எஃப்.பி.ஓ.பங்குகள் வெளியிட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் ஏற்கனவே முதலீட்டாளர்கள் கடும் நஷ்டத்தில் உள்ள நிலையில், புதிய எஃப்.பி.ஓ. வெளியிட்டை கைவிட முடிவெடுத்தது அந்நிறுவன பங்குகளின் மதிப்பை கடுமையாக பாதித்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில் NSE-யில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் விலை ரூ.3,442ல் இருந்து ரூ.1,565 வரை சரிந்தது, இந்த நேரத்தில் 55 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

adani

ஏஎஸ்எம் பட்டியலில் அதானி நிறுவனம்:

அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் நஷ்டமடைந்து வருகின்றனர். இந்நிலையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் என மூன்று அதானி குழுமப் பங்குகள் நிஃப்டியில் குறுகிய காலத்திற்கு ஏஎஸ்எம் (கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏஎஸ்எம் ஆனது, பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்கள் மற்றும் பங்கு விலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களில் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் 2018ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையின் (NSE) இணையதளத்தின்படி,

“ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, செபி மற்றும் பங்குச்சந்தை, கூட்டுக் கண்காணிப்புக் கூட்டங்களில் நடந்த விவாதங்களின்படி, மேற்கூறிய நடவடிக்கைகளுடன் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளும் (ASM) இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளன.”

அதானி குழுமத்திற்கு அடுத்த அடி:

அதானி குழும நிறுவனங்கள் நெறிமுறையற்ற நடைமுறைகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடுகளில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் அதானியின் நற்பெருக்கு களக்கம் ஏற்பட்டுள்ளது.

"கணக்கியல் மோசடி குறித்து ஊடகங்கள் மற்றும் பங்குதாரர்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து, அதானி எண்டர்பிரைசஸ் டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கப்படும்."

டவ் ஜோன்ஸ் தனது அறிவிப்பில், பிப்ரவரி 7, 2023 அன்று சந்தை திறக்கப்படுவதற்கு முன்பு, டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டில் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

adani

இன்று காலை 10.50 மணியளவில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 32% சரிந்து ரூ.1,017.45 இன் இன்ட்ராடே குறைந்தபட்சத்தைத் தொட்டது. கடந்த 5 வர்த்தக நாட்களில் பங்கு 64% சரிந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் மட்டுமல்ல, அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் தற்போது வீழ்ச்சியில் உள்ளன.

டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடுகள் என்ன?

டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீடு (Dow Jones Sustainability Index) என்பது கார்ப்பரேட் சஸ்டைனபிலிட்டி அசெஸ்மென்ட் (CSA) மூலம் எஸ் அண்ட் பி குளோபல்-ஆல் (S&P Global) தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனை அளவிடும் ஒரு மூலதனமயமாக்கல் எடையுள்ள குறியீட்டாகும். சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை மற்றும் பொருளாதாரம் ஆகிய நான்கு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே, எஸ்&பி குளோபலால் குறியீட்டில் சேர்க்கப்படுகிறது.