குறைந்த முதலீடு; விஸ்வரூப வளர்ச்சி: 2020ல் யுவர்ஸ்டோரி தமிழ் வெளியிட்ட வெற்றிக் கதைகள்!
2020ல் நாம் வெளியிட்ட, குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் தொடங்கி விஸ்வரூப வளர்ச்சி பெற்ற சில வெற்றிக் கதைகளின் தொகுப்பு.
ஒரு சிறிய விதையில் இருந்து தான் மாபெரும் விருட்சம் உண்டாகிறது. அதுபோலத்தான் சிறிய அளவில் தொடங்கப்பட்ட சில தொழில்கள் இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியமாக ஆலமரமாகி நிற்கிறது. அப்படியாக சாதித்தவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால், அவர்களது கடின உழைப்பே அந்த வெற்றிக்கு உரமாகப் போடப்பட்டிருப்பது தெரிய வரும்.
அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை முன்னேறத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு வழிகாட்டியாக, பாடமாக இருக்கும் என்றால் நிச்சயம் அது மிகையாகாது.
இதோ 2020ல் நாம் வெளியிட்ட, குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் தொடங்கி விஸ்வரூப வளர்ச்சி பெற்ற சில வெற்றிக் கதைகளின் தொகுப்பு:
3 வருடத்தில் சாதனை
சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், பேப்பர் போடுவது, பால் விநியோகம், காவலாளி, மாலையில் ஐஸ்கிரீம் கடையில் பார்ட்-டைம் வேலை என தன் தாய்க்கு உறுதுணையாக இருந்தவர் கிரிஸ்டோபர் ரிச்சர்ட். 12ம் வகுப்பிற்குப் பின் வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாத நிலை. அப்போது தான், 3 மாதம் கணினி பயிற்சி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அதேத் துறையில் தனது எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வது என முடிவெடுத்தார். சுமார் 12 வருடங்கள் பல நிறுவனங்களில் கணினி சார்ந்த பணி புரிந்தவர், 2009ம் ஆண்டு ரூ. 10 லட்சம் முதலீட்டில் ‘சிஆர் பி ஐ கன்சல்டன்சி’யை உருவாக்கினார். G7 ‘சிஆர் டெக்னாலஜீஸ்’யை வாங்கியவர், 2016 ஆம் ஆண்டு அதன் மேகக்கணினி துறையை துவங்கினார்.
சென்றவருடம் 56 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய G7 சிஆர், இவ்வருடம் 140 கோடிகள் வருமானமாக ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. க்ளவுட் கம்யூட்டிங் சேவை ஆரம்பித்து 3 வருடங்களில் 100 கோடி வருமானத்தை கடந்துவிட்ட கிரிஸ்டோபரின் வெற்றிக் கதையை முழுவதுமாக தெரிந்து கொள்ள..
ரூ. 2 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பம்
அப்பாவின் மசாலா வணிகம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க, கடனை அடைக்கத் கார், வீடு, தொழிற்சாலை என அனைத்தையும் விற்றது ஆனந்தின் குடும்பம். அடுத்தவேளை சாப்பாட்டிற்காக தனது 16 வயதில் பேப்பர் போடுவது, ஓட்டுநர் போன்ற வேலைகளைச் செய்தார் ஆனந்த்.
நண்பர்களுடனான ஒரு உரையாடலில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சி மேலாண்மைக்கு உள்ள எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டார். முறைப்படி கல்வி கற்க வறுமை இடம் கொடுக்காததால், அதே துறையில் அனுபவப் பாடங்களைப் பெற்றார்.
2012-ம் ஆண்டு தனது 20 வயதில் ‘இண்டியன் வெட்டிங் பிளானர்ஸ்’ (Indian Wedding Planners IWP) தொடங்கினார். டீக்கடையில் கையில் இருந்த ரூ. 2 ஆயிரத்தை முதலீட்டாகக் கொண்டு ஆனந்த் தொடங்கிய இந்த நிறுவனம், கடந்த ஆண்டு டெஸ்டினேஷன் வெட்டிங் மூலம் 7.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
பிடித்த தொழிலில் வெற்றி
வெளிநாட்டில் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் முதுகலைப் படிப்பை முடித்தவர் கௌரவ் மேத்தா. நடத்தி வந்த காப்பீட்டு தரகு நிறுவனப் பணியில் திருப்தி இல்லாததால், தனக்கு பிடித்தமான வேலையைச் செய்ய முடிவெடுத்தார். அதனைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு ‘ஜெய்ப்பூர் வாட்ச் கம்பெனி’ தொடங்கினார்.
தன்னுடைய காரை ரூ. 30 லட்சத்திற்கு விற்றும், நண்பர்களிடம் கடன் பெற்றும் இந்த கம்பெனியை அவர் தொடங்கினார். பிரிட்டிஷ் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்டு நாணயங்களைக் கொண்டு இந்த கைக்கடிகாரங்கள் வடிவமைக்கப்படுகிறது.
2018-19 ஆண்டு 1,200 கைக்கடிகாரங்கள் விற்பனை செய்த கௌரவ்வின் நிறுவனம், 2019-20 ஆண்டுகளில் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஒரே வருடத்தில் குல்பியில் லாபம்
நான்கு பொறியாளர்கள் இணைந்து, 80சதுர அடியில் ஒரு குல்ஃபீ தயாரிப்பு நிறுவனம் துவங்கி, ஒரே வருடத்தில் 24 லட்சம் வருமானம் ஈட்டினர் என்றால் நம்ப முடிகிறதா. ஆம், 2017ம் ஆண்டு நவீன்குமார், கார்த்திக் சுகுமாரன், கார்த்திகேயன் மற்றும் மிதிலேஷ் குமார் ஆகிய நான்கு நண்பர்கள் சேர்ந்து ‘க்ரீன் கேசில் புட் அன்ட் பெவரேஜஸ்’ என்ற பெயரில் நிறுவனத்தைத் துவக்கி, அதன் அங்கமாக ‘பூசோ குல்ஃபீ’ ‘Boozo Kulfi' என்ற பெயரில் விளம்பரப்படுத்தினர்.
ஒரே ஆண்டில் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பைப் பெற, ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனம், ரூ.24 லட்சத்தை வருமானமாக ஈட்டித் தந்தது.
தொழில்முனைவர் ஆன ஆடிட்டர்
டெல்லியைச் சேர்ந்த இளம் பட்டயக் கணக்காளரான ராகுல் கோயல், ஆடிட்டராக தொடராமல், வியாபாரம் செய்ய வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார். தனது சொந்த பேஷன் லிஸ்டிங் பிராண்டான ‘TrendyFrog' எனும் நிறுவனத்தை 2017ல் அவர் தொடங்கினார்.
ரூ.3 ஆயிரம் முதலீட்டில் அவர் தொடங்கிய இந்த நிறுவனம் 2018 நிதியாண்டில் ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டியது. இது 2019 நிதியாண்டில் ரூ.2.78 கோடியாக உயர்ந்தது. 2 ஆண்டு காலப்பகுதியில் 450% உயர்வை பெற்றது. 2020 நிதியாண்டில், இந்த பிராண்டின் வருவாய் ரூ.4.78 கோடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கின்றனர்.
தோல்விகள் தந்த பாடம்
பத்தாவது மட்டுமே படித்தவர் SLR Metaliks நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் கோயல். 1980களில் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டு ஹரியானாவில் உள்ள தனது சொந்த ஊரான ஜஜ்ஹாரில் பிளாஸ்டிக் ரீபிராசஸ் செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினார்.
தன் அப்பாவிடம் 4.5 லட்ச ரூபாய் கடனாகப் பெற்று ராஜ்குமார் தொடங்கிய அந்த தொழில் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே தனது தொழில் பாதையை மாற்ற முடிவெடுத்தார்.
டெல்லியில் உள்ள பால் பிராண்டுகளுக்கு பவுச் வழங்கத் தொடங்கினார். இந்த வணிகமும் அவரது தொழில்முனைவு ஆர்வத்திற்கு ஈடு கொடுக்கவில்லை. எனவே 1990ம் ஆண்டு சிமெண்ட் பைகள் தயாரிப்பில் இறங்கினார். அந்தத் தொழிலிலும் வெற்றியை ருசிக்க விடாமல் தீவிபத்து ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது. எனவே அதனையும் கைவிட்டார்.
பின்னர் 2005-ம் ஆண்டு தனது சகோதரருடன் சேர்ந்து SLR Metaliks Pvt Ltd என்ற ஸ்டீல் தொழிற்சாலையைத் தொடங்கினார் ராஜ்குமார். தோல்விகளில் இருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்கள் மூலம் 15 ஆண்டுகளில் SLR Metaliks-ன் வருடாந்திர டர்ன்ஓவரை 1,216 கோடி ரூபாயாக்கினார்.
எப்படி இந்த வெற்றி அவருக்கு சாத்தியமானது? முழுவதுமாக தெரிந்து கொள்ள...
மூன்றாம் தலைமுறை வெற்றி
வடோராவைச் சேர்ந்த அம்பாலால் தன்னிடம் இருந்த வெறும் 51 ரூபாய் பணத்தைக் கொண்டு 1932ம் ஆண்டு நகைகளுக்கான மொத்த வணிகத்தைத் தனது பெயரில் தொடங்கினார். 1940ம் ஆண்டு நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக சில்லறை வணிக மாதிரிக்கு மாறினார்.
அம்பாலால் உருவாக்கிய ஜுவல்லரி நிறுவனமான நாராயண் ஜுவல்லரியை தற்போது மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த கேத்தன் சோக்ஷி நிர்வகித்து வருகிறார். கிட்டத்தட்ட ஏழாண்டுகளாக ஆஸ்கார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு நகை வடிவமைக்க Forevermark உடன் இணைந்து நாராயண் ஜுவல்லரி செயல்படுகிறது.
அனுபவமே பெரிய முதலீடு
ராஜஸ்தானின் ருதாவல் பகுதியைச் சேர்ந்தவர் துஷார் மிட்டல். பெற்றோர் நடத்தி வந்த சிறிய மளிகைக் கடை நஷ்டத்தைச் சந்தித்தது. இதனால் மேற்படிப்பைத் தொடர முடியாமல் கடையில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கட்டிடக்கலை தொடர்புடைய நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டே மேற்படிப்பைத் தொடந்த துஷார், உட்புற வடிவமைப்பு வணிகத்தில் அனுபவம் பெற்றார்.
பகுதி நேர வேலை மூலம் தான் சேமித்த 12,000 ரூபாயைக் கொண்டு 2009-ம் ஆண்டு குருகிராமில் Studiokon Ventures நிறுவனத்தைத் தொடங்கினார் துஷார் மிட்டல். தனது கடின உழைப்பு மூலம் 11 ஆண்டுகளில் 250 ஊழியர்களுடன் 200 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டுள்ள நிறுவனமாக தனது நிறுவனத்தை உயர்த்தினார்.
இதோ அவரின் வெற்றிக் கதையை முழுமையாகத் தெரிந்து கொள்ள...
சீஸ் பால்ஸ் ஐடியா
பத்தாண்டுகளுக்கும் மேலாக ஸ்நாக்ஸ் துறையில் இருந்த போதும், தனியாகத் தொழில் தொடங்க முயற்சித்த போது அமீத் குமாத் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை. எனவே கெமிக்கல் தயாரிப்பில் ஈடுபட முடிவெடுத்தார். ஆனால் ஓராண்டிற்குள்ளாகவே 6 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்தார்.
இந்த சூழ்நிலையில் தான் ஒருமுறை திடீரென்று பெப்பி சீஸ் பால்ஸ் மீது அவரது கவனம் திரும்பியது. இந்தூர் சந்தையில் ஸ்நாக்ஸ் பிரிவு அதிகம் செயல்படவில்லை என்பதை அமீத் உணர்ந்தார். எனவே சீஸ் பால்ஸ் போன்ற ஸ்நாக்ஸை வடக்கு மற்றும் மேற்கிந்தியப் பகுதிகளில் சில்லறை வர்த்தகம் செய்ய முடிவெடுத்தார்.
2003-ம் ஆண்டு இந்தூரின் நவ்லாகா பகுதியில் 100 சதுர அடி கொண்ட சிறிய அலுவலகம் ஒன்றில் தனது சகோதரர் மற்றும் நண்பருடன் சேர்ந்து ‘பிரகாஷ் ஸ்நாக்ஸ்’ என்ற பெயரில் சீஸ் பால்ஸ் சில்லறை விற்பனையைத் தொடங்கினார்.
முதலாமாண்டு 22 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. மூன்றாமாண்டில் வருவாய் 7 கோடி ரூபாயாக உயர்ந்தது. சிறிய கடையில் தொடங்கப்பட்ட இந்த வியாபாரம் இன்று ஒன்பது தொழிற்சாலைகளுடன் 240 ஊழியர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் 4,100 பேருடனும் பெரிய சாம்ராஜ்ஜியமாக உயர்ந்துள்ளது.
2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிரதாப் ஸ்நாக்ஸ் 1,079.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமீத்தின் வெற்றிக் கதையைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள...
டீ வணிகத்தில் ராஜா
கொல்கத்தாவைச் சேர்ந்த தேநீர் நிறுவனம் டீராஜா (Tearaja). இதன் நிறுவனர் 32 வயது மனீஷ் ஜெயின். பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் குழு உறுப்பினரான இவரது குடும்பத்தினர் தேநீர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 2014ம் ஆண்டு போட்டிகளில் இருந்து சற்றே விலகி இருக்க நேரம் கிடைத்த சமயத்தில் அப்பாவின் வணிகத்தில் தன்னை இணைத்துக்கொள்ளத் தீர்மானித்தார் மனீஷ்.
அப்போது தான் அப்பாவின் வியாபாரம் நஷ்டத்தில் நடந்து வருவது அவருக்குத் தெரிய வந்தது. எனவே அதனை மீண்டும் புதிய யுக்திகளுடன் தொடர முடிவெடுத்தார் மனீஷ். அதன் பலனாக 2016ம் ஆண்டு மனீஷ், டீராஜாவை நிறுவினார். மாமியார் வீட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி சுயநிதியில் இந்நிறுவனத்தை நிறுவினார்.
ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்க, இன்று டீராஜா ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் 200-க்கும் மேற்பட்ட தேநீர் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
டீ வியாபாரத்தில் ராஜாவாக மனீஷின் டீராஜா கடை வெற்றி நடை போடுவதன் முழு கதையையும் தெரிந்து கொள்ள...