இனி ஹைதராபாத் பிரியாணியை சென்னையில் இருந்து ஆர்டர் செய்யலாம் - Zomato-வின் புதிய திட்டம்!
வாடிக்கையாளர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தங்களுக்கு பிடித்த உனவை வாங்கிக் சாப்பிடக்கூடிய அசத்தலான டெலிவரி திட்டத்தை ஜோமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தங்களுக்கு பிடித்த உனவை வாங்கிக் சாப்பிடக்கூடிய அசத்தலான டெலிவரி திட்டத்தை ஜோமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
குடும்பத்துடன் கார், பைக், ஆட்டோவில் கிளப்பிப் போய் வாய்க்கும், பட்ஜெட்க்கும் வசதியான ஓட்டலில் சாப்பிட்டு வந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் இருந்த இடத்தில் இருந்து கையில் இருக்கும் ஸ்மார்ட் போனை தட்டினாலே போதும், சைனிஸ், இத்தாலியன், நார்த் இந்தியன், சவுத் இந்தியன் என அனைத்து வகையான மெனுவும் வீட்டு வாசல் வரை வந்து டெலிவரி கிடைக்கிறது.
அதுமட்டுமல்ல அதிகாலை முதல் நள்ளிரவு வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பிடித்த உணவை உட்கார்ந்த இடத்திலேயே ஆர்டர் செய்து சாப்பிடலாம்.
Zomato-வின் இன்டெர்-சிட்டி ஆர்டர் திட்டம்
தற்போது இந்தியாவின் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோ அடுத்தக்கட்ட அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இனி இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள உணவு வகைகளை எங்கிருந்து வேண்டுமானாலும் ஆர்டர் செய்து, நாம் இருக்கும் இடத்திற்கு டெலிவரி பெற்று என்ஜாய் செய்ய முடியும். அதாவது,
இனி பஞ்சாப்பில் தயாரான அம்சாரி குல்சா ரொட்டியை, காஷ்மீரில் தயார் செய்யப்பட ரோகன் ஜோஷ் மட்டன் உடன் கலந்து ஒரு கட்டு கட்டலாம். கொல்கத்தா ரசகொல்லா, ஹைதராபாத் பிரியாணியை அங்கிருந்தே பெற்று சுவைக்கலாம்.
இதற்காக ஜோமேட்டோ நிறுவனம் 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' (Intercity Legends) என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவை மூலமாக ஜோமேட்டோ வாடிக்கையாளர்கள் வெவ்வேறு மாநில உணவுகளை வீட்டிலிருந்த படியே ருசிக்க உதவுகிறது. இதன் மூலம் மாநிலங்களுக்கிடையிலான உணவு டெலிவரியை ஜோமேட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து ஜோமேட்டோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல்,
'Intercity Legends' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அது எவ்வாறு வேலை செய்யும் என்பதையும் விரிவாக விளக்கியுள்ளார்.
புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை 'மறுபயன்பாட்டு மற்றும் சேதமடையாத கொள்கலன்களில் பாதுகாப்பாக வைக்க ஜோமேட்டோ திட்டமிட்டுள்ளது. பேக் செய்யப்பட்ட உணவுகள் அதிநவீன மொபைல் குளிர்பதன தொழில்நுட்பத்தில் பதப்படுத்தப்படுவதால், உணவு உறைந்திருக்காது என்றும், எந்தவிதமான பிரசர்வேட்டிவ் கலக்க வேண்டிய தேவை ஏற்படாது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய உணவு விநியோக முறை டெலிவரி செய்ய குறைந்தது ஒரு நாளாவது ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆர்டரைப் பெறும்போது, சாதாரண குளிரூட்டப்பட்ட உணவைப் போலவே மைக்ரோவேவ், பான்-ஃப்ரை அல்லது ஏர்-ஃப்ரை மூலமாக அதனை எளிதாக சூடுபடுத்திக்கொள்ள முடியும்.
முதற்கட்டமாக இந்த சேவையான குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே உணவு டெலிவரி விமானம் மூலம் பெறப்பட்டு டெலிவரி பார்ட்னர்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்குச் சென்றடைய உள்ளது.
இதுவரை 7 முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு மட்டுமே உணவை டெலிவரி செய்து வரும் ஜோமேட்டோ நிறுவனம் இனி சென்னையில் இருக்கும் வாடிக்கையாளருக்கு ஐதராபாத் பிரியாணியையும், கொல்கத்தா ரசகுல்லாவை மைசூரில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் டெலிவரி செய்ய முடியும்.