தினமும் ஒரு மணி நேரம் வேலை; ஆண்டிற்கு சம்பளம் ரூ.1.2 கோடி - வைரலாகும் கூகுள் ஊழியரின் கதை!
தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை பார்த்து ஆண்டிற்கு ரூ. 1.2 கோடி சம்பாதிக்கும் கூகுள் ஊழியர்தான் இப்போது சோஷியல் மீடியாவில் டாக் ஆப் தி டவுணே.
கடவுள் எல்லோருக்குமே ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என சமமாகத்தான் கொடுத்துள்ளார். ஆனால், அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் விதத்தை வைத்துதான் அவர்களது வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார நிலை உள்ளது.
சிலர் 24 மணி நேரமும் உடல் நோக உழைத்தாலும் கையில் பார்க்க முடியாத வருமானத்தை, சிலர் ஸ்மார்ட்டாக ஒரு மணி நேரம் உழைத்தே சம்பாதித்து விடுகின்றனர். இதற்கு நல்லதொரு உதாரணம்தான் 'டெவோன் எனும் இளைஞர்.
கூகுளின் Gen Z மென்பொருள் பொறியாளரான இந்த இளைஞரின் சொந்தப் பெயர் 'டெவோன்’ அல்ல. கூகுளில் வேலை செய்பவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஃபார்ச்சூன் இதழ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில்தான் டெவோன் என்ற புனைப்பெயரில் அந்த இளைஞர் இந்தத் தகவல்களைக் கூறியுள்ளார்.
“நான் என்னுடைய 20வது வயதில் கூகுளில் வேலைக்குச் சேர்ந்தேன். வழக்கமாக காலை 9 மணிக்கு எழுகிறேன். அதன் பின்னர், 11 மணி வரை குளித்து முடித்து எனக்கான உணவை தயாரிக்கும் வேலைகளைப் பார்க்கிறேன். அதன் பின்னர்,
அலுவலக வேலையில் அமர்கிறேன். பொதுவாக மதியம் வரை வேலை செய்வேன். ஓரு வாரத்திற்கு மொத்தமாக 5 மணி நேரம்தான் வேலை பார்ப்பேன். மீதமுள்ள நேரங்களில் என்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காக உழைக்கிறேன்," என தன்னுடைய பணிச் சூழல் குறித்து அவர் கூறியிருப்பது, நெட்டிசன்களை ஆச்சர்யத்தில்... இல்லையில்லை பொறாமைப்பட வைத்திருக்கிறது.
டெவோன் கூற்றுப்படி ஒரு வாரத்திற்கு 5 மணி நேரம் என்றால், நாளொன்றுக்கு அவர் ஒரு மணி நேரம் மட்டுமே அவர் அலுவலக வேலை பார்க்கிறார். ஆனால், அதற்காக அவர் வாங்கும் சம்பளம்தான் நெட்டிசன்களை அவர் மீது பொறாமைப்பட வைத்திருக்கிறது. ஏனென்றால்,
அவர் ஆண்டிற்கு இந்திய மதிப்பில் ரூ.1.2 கோடி சம்பளமாகப் பெற்று வருகிறார்.
அதோடு, இவர் தொழில்நுட்பப் பொறியாளருக்கான அறிமுக போனஸையும் கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளார், அத்துடன் ஆண்டு இறுதி போனஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்.
இவர் சொல்வது சரியா? இல்லை ஆய்வுக்காக டெவோன் பொய் கூறினாரா என்பதை கண்டுபிடிக்க ஃபார்ச்சூன், இவரது கூகுள் ஆஃபர் லெட்டரையும், இவரது சம்பளத்தையும் செக் செய்து பார்த்திருக்கிறது. அதில் டெவோன் சொன்னது எல்லாம் சரியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்திற்காக கணினி குறியீடு (கோடிங்) எழுதும் பணியைச் செய்து வரும் டெவோன்,
கோடியில் சம்பளம் வாங்கி வரும் நிலையிலும், கூடுதல் வருமானத்திற்காக, சக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், தன்னுடைய ஆர்வத்தை தூண்டும் செயல்களில் தன்னுடைய மூளையை உபயோகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறைந்த நேரம் வேலை செய்து அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்று நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெவோனின் இந்த பேட்டி, அதனை உறுதி செய்துள்ளது. டெவோன் மட்டுமின்றி, கூகுளில் வேலை பார்ப்பவர்களில் சுமார் 97 சதவீதம் பேர் கூகுள் நிறுவனம் வேலை பார்ப்பதற்கு மிகவும் உகந்த இடம் எனத் தெரிவித்துள்ளதாக ஃபார்ச்சூன் இதழ் ஆய்வு கூறுகிறது.
சம்பளம், உணவு, மருத்துவம், விடுமுறை என பல்வேறு சலுகைகள் சிறப்பானதாகக் கிடைக்கும் என்பதால், எப்படியும் கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு சாப்ட்வேர் இன்ஜினியரின் கனவாக இருக்கும்.
தற்போது, டெவோனின் இந்தப் பேட்டி வைரலாகியுள்ள நிலையில், கூகுளில் எப்படி வேலைக்குச் சேர்வது என இந்நேரம் பலர் கூகுளிலேயே ஐடியா தேடிக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆண்டுக்கு ரூ.1.6 கோடி சம்பளம்; ஐஐடி, ஐஐஎம் மாணவர்களையே மிரளவைத்த அதிதி திவாரி!