10வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த ஓ.பி.எஸ்: நிதி ஒதுக்கீட்டில் முக்கிய அறிவிப்புகள் என்ன?

By malaiarasu ece|23rd Feb 2021
தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.


தொடர்ந்து, 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரை திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது. இந்தநிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

சட்டசபை

தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தது இது 10வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,

அடுத்த ஓராண்டில் தமிழக அரசின் கடன்சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் தற்போது அரசின் கடன்சுமை ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ளது என்றார்.

மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என்று மதிப்பீடுப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும். 2021-22-ல் நிதிப்பற்றாக்குறை மாநில ஜிடிபியில் 3.94%, ரூ.84,202.39 கோடியாக கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.


கொரோனா தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி அரசு செலவிட்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பல்வேறு நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்றார்.


அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 2,000 மின்சார பேருந்துகள் என மொத்தம் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.


முன்னதாக, சட்டப்பேரவை கூட்டத்தொடர் எந்த நாள்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

TN budget

பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகள்!


6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம்.


* சென்னை போல் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்.


* வரும் ஆண்டுகளில் புதிதாக 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல். இதில் 2,500 பேருந்துகள் மின்சார பேருந்துகள் மட்டுமே.


* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்புத் திட்டம். மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்ட இந்த திட்டம் தற்போது உலக வங்கியின் பரிசீலனையில் இருக்கிறது.


* ஒரு குடும்பத்தின் தலைவர் விபத்து மூலம் மரணம் அடைந்தால் ‘அம்மா விபத்து காப்பீடு’ திட்டத்தின் மூலம் 4 லட்சம் காப்பீடு வழங்க ஏற்பாடு. அதேபோல் இயற்கை மரணம் என்றால் 2 லட்சம் வழங்கப்படும். நிரந்தர இயலாமைக்கும் 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.


* கனடாவின் டொரண்டோ பல்கலைகழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்க உதவித்தொகை ஒதுக்கீடு.


* ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறைக்கு ரூ.13,967 கோடி நிதி ஒதுக்கீடு.


* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.2,634 கோடி ஒதுக்கீடு.


* சத்துணவு திட்டத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,953.98 கோடி நிதி ஒதுக்கீடு.


* உயர்கல்வி உதவித்தொகை திட்டத்துக்காக ரூ.1,932.19 கோடி நிதி ஒதுக்கீடு.


* ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.


* தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022 மார்ச் 31-க்குள் முடிக்கப்படும்.


* நகர்ப்புற வடிகால் திட்டத்திற்கு ரூ.1450 கோடி ஒதுக்கீடு.


* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு.


* பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.


பட்ஜெட் தாக்கலில் நடந்த சுவாரஸ்யம்!


வரிசையாக ஒவ்வொரு துறை வாரியாக பட்ஜெட் வாசித்து வந்த அமைச்சர் ஓ.பி.எஸ் வனத்துறை தொடர்பான அறிவிப்புகளை வாசித்துக்கொண்டிருந்தார்.

“சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க மரம் நடும் திட்டம் 2011-2012 ஆம் ஆண்டில் இருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசின் நிலங்கள், தனியார் நிலங்கள் மற்றும் தரம் குன்றிய வனப்பகுதிகளில் 6.12 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன," என்று ஓபிஎஸ் கூறிய போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கைதட்டினார். இதை கவனித்த ஓபிஎஸ், “எல்லோரும் கைத்தட்டுங்களேன்... பாவம் அண்ணன் மட்டும் கை தட்டிக்கொண்டிருக்கிறார்," எனச் சொல்ல அவையில் சிரிப்பலை எழுந்தது.