தண்ணீருக்குத் தவிக்கும் சென்னைவாசிகளே, தரமான நீரை இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்!
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் குடிநீருக்காக அல்லாடி வரும் நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அடுத்த நாளே தரமான குடிநீரை வீட்டிற்கே கொண்டு வந்த சேர்க்கிறது Trolley Fresh
கிஞ்சித்தும் கூட சென்னைப் பக்கம் எட்டிப் பார்க்காமல் போன பருவமழை, கிடைத்த இடத்தில் எல்லாம் உறிஞ்சு குழாய்களைப் போட்டு பூமித் தாயின் ஈரக்குலையையே காய வைத்துவிட்ட மனிதர்களால் சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
தமிழகத்தில் இருப்பவர்களின் தொலைபேசி உரையாடல்களில் உங்கள் ஊரில் தண்ணீர் பிரச்னை எப்படி இருக்கிறது என்ற கேள்வி இல்லாமல் இருப்பதில்லை. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கக் கூட பிறர் யோசிக்கும் அளவிற்கு தண்ணீர் பிரச்னை சென்னைவாசிகளை வாட்டி எடுக்கிறது.
சென்னைப் பெருநகர குடிநீர் வாரியத்தில் தண்ணீருக்காக பதிவு செய்தாலும் காத்திருப்பு நிலை, தட்டுப்பாடு அதிகரிக்க அதிகரிக்க எகிறிக்கொண்டே போகிறது. 20 லிட்டர் கேன் வாட்டர்களின் விலையும் காசைத் தண்ணீராக செலவு செய்தவர்களின் கையைக் கடிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது. வழக்கமாக தண்ணீர் கேன் கொண்டு வந்து போடும் மளிகைக்கடை பையனும் வரவில்லை என்றால், இனி அடுத்த கடையைத் தேடி ஓடவேண்டாம். இருந்த இடத்திலேயே ஆன்லைனிலேயே கேன் குடிநீரை புக் செய்துவிட்டு கவலை மறந்து இருக்கும் வசதியைத் தருகிறது சென்னை ஸ்டார்ட் அப் ’ட்ராலி ஃப்ரெஷ்’ Trolley Fresh.
பொறியியல் பட்டதாரி இளைஞர்களான பிரகாஷ், பிரபு மற்றும் சுதின் இணைந்து 2018ம் ஆண்டில் 'ட்ராலி ஃப்ரெஷ் ஆன்லைன் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அமைப்புசாரா தொழிலாக நடந்து வரும் வாட்டர் கேன் வணிகத்தை ஆன்லைன் வணிகமாக மாற்றுவதற்கான முயற்சியை கையில் எடுத்தனர்.
Trolley Fresh சிறப்பே தண்ணீர் கேன் தேவைப்படுபவர்கள் விநியோகிஸ்தரிடம் தகவல் தெரிவித்துவிட்டு எப்போது தண்ணீர் வரும்? மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமா? என்ற வாடிக்கையாளர்களின் அச்சத்தை போக்குவதே என்கின்றனர் நிறுவனர்கள்.
”முதன்முதலில் ட்ராலி ஃப்ரெஷ் அறிமுகம் செய்யப்பட்ட போது தொலைபேசி மூலமே ஆர்டர்களைப் பெற்று வாடிக்கையாளர்களுக்கு கேன் குடிநீர் விநியோகம் செய்தோம். தொடக்கத்தில் 20 லிட்டர் கேன் ரூ.20 என்ற விலையில் விற்பனை செய்தோம், விலை குறைவு என்பதால் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை,” என்கிறார் ட்ராலிஃப்ரெஷ் பங்குதாரர்களில் ஒருவரான பிரகாஷ்.
ட்ராலி ஃப்ரெஷ் தொடங்கிய முதல் மாதம் வெறும் 60 கேன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து ஆன்லைன் ஆர்டர் கொடுப்பதற்கு வசதியாக www.trolleyfresh.com என்ற இணையதள பக்கத்தில் ஆர்டர் கொடுக்கும் வசதி மற்றும் ஆன்லைனிலேயே கட்டணத்தை செலுத்தும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தோம்.
அதன் பின்னர் செயலியாக இருந்தால் எளிமையாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கருதியதால் கூகுள் ப்ளே ஸ்டோரில் Trolley Fresh செயலியை அறிமுகம் செய்தோம்.
இதனைத் தொடர்ந்து IVR முறையில் தொலைபேசியில் +91 75501 04879 என்ற எண்ணை தொடர்பு கொண்டு எளிய முறையில் கேன் வாட்டருக்கு ஆர்டர் கொடுக்கும் வசதியையும் உருவாக்கினோம் என்கிறார் பிரகாஷ்.
விநியோகிஸ்தர்களுடன் கைகோர்த்து வாடிக்கையாளர்களுக்கு கேன் குடிநீரை விநியோகம் செய்கிறது ட்ராலி ஃப்ரெஷ். விநியோகிஸ்தர் டூ வாடிக்கையாளர் என்றாலும் அந்த விநியோகிஸ்தரை தேர்வு செய்வதில் பல விஷயங்களைக் கடை பிடிக்கிறது இந்த நிறுவனம்.
எந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறதோ அந்த சுத்திகரிப்பு நிலையம் முறையான லைசென்ஸ் பெற்று இயங்குகிறதா FSSI ன் விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா? கேன்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பவை கண்காணிக்கப்பட்டு அதன் பின்னரே விநியோகிஸ்தர்களுடன் கைகோர்க்கிறது ட்ராலிஃப்ரெஷ்.
வாடிக்கையாளர்களுக்கு கேன்களை டெலிவரி செய்வதோடு முடிந்தது வியாபாரம் என்று அடுத்த வாடிக்கையாளரைத் தேடிப் போய்விடாமல் மாதந்தோறும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவ்வளவு குடிநீர் வாங்குகிறார்கள் அவர்கள் சரியான அளவு நீரை அருந்துகிறார்களை என்ற தகவல்களைத் திரட்டித் தந்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது இந்நிறுவனம்.
தொடக்கத்தில் இருந்தததை விட ட்ராலிஃப்ரெஷ் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. சென்னையில் 1 மில்லியன் கேன்கள் தேவைப்படும் நிலையில் ட்ராலிஃப்ரெஷ் படிப்படியாக வளர்ச்சி கண்டு கடந்த மாதத்தில் 35,000 இருபது லிட்டர் கேன்களை விநியோகம் செய்துள்ளது. ஒவ்வொரு மாதமுமே வாடிக்கையாளர்களின் வரவு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது என்கிறார் பிரகாஷ்.
சென்னையில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் கேன் குடிநீர் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது, இதனால் போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளதால் இந்த மாதம் முதல் 20 லிட்டர் கேன் வாட்டர் ரூ. 35 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று இதற்கு முன்பு வரை ஆர்டர் கொடுத்த 6 முதல் 8 மணி நேரத்தில் கேன் டெலிவரி கொடுக்கப்பட்ட நிலையில் நீர் தட்டுப்பாடு காரணமாக இன்றைக்கு ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால் அடுத்த நாளே டெலிவரி என்று முடிந்த அளவில் விரைவாக குடிநீரை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே இன்முகத்தோடு கொண்டு சேர்த்து வருகிறது ட்ராலிஃப்ரெஷ் என்கிறார் பிரகாஷ். சென்னை புறநகர் பகுதிகள், தாம்பரம், குரோம்பேட்டை, அடையாறு, பெசன்ட் நகர், அசோக் நகர், மாம்பலம், சைதாப்பேட்டை உள்ளிட்ட 40 பகுதிகளில் ட்ராலிஃப்ரெஷ் தன்னுடைய சேவையை வழங்கி வருகிறது. ஆன்லைன் வாசிகளுக்கும், அலுவலகம் செல்வோருக்கும் இந்த ஆன்லைனில் கேன் வாட்டர் ஆர்டர் கொடுக்கும் வசதி தினசரி தண்ணீரால் ஏற்படும் டென்ஷனுக்கு சற்றே ஆறுதலாக இருக்கும்.