பொறியாளர் க்ருத்திகா ரூ.15 கோடி மதிப்பு ஆட்டுப் பால் சருமப் பராபரிப்பு ப்ராண்ட் உருவாக்கிய கதை!
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோயமுத்தூரைச் சேர்ந்த இந்த நிறுவனம், ரசாயனங்கள் இல்லாத இயற்கையான காஸ்மெடிக் தயாரிப்புகளை ஆட்டுப் பால் கொண்டு தயாரிக்கிறது.
பொறியாளரான 32 வயதான கிருத்திகா அனைத்து வகையான சருமங்களுக்கும் ஏற்றவாறான ரசாயனங்கள் இல்லாத தயாரிப்புகளின் அவசியத்தை உணர்ந்தார். இவரது அம்மா சரும வியாதி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
”என்னுடைய அம்மாவிற்கு சென்சிடிவ் சருமம். பத்தாண்டுகளுக்கும் மேலாக சரும பிரச்சனையால் அவதிப்பட்டார். சருமத்திற்கு அவர் பயன்படுத்திய தயாரிப்புகள் அவரது நிலையை மேலும் மோசமாக்கியது. அவர் உயிரிழந்ததால் சொந்தமாக இயற்கை சோப்பு தயாரிக்கத் தொடங்கினேன். சருமத்திற்கு பாதுகாப்பான தயாரிப்புகளை நான் பயன்படுத்தவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. இதுவே எனக்கு உந்துதலாக இருந்து இன்றைய நிலையை எட்ட உதவியது,” என்றார் கிருத்திகா.
கிருத்திகா முதலில் இயற்கை காஸ்மெடாலஜி பிரிவில் ஆன்லைன் டிப்ளமோ முடித்தார். சோப்புகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். இதுவே கோயமுத்தூரில் ’வில்வா ஸ்டோர்’ (Vilvah Store) என்கிற ஆன்லைன் ஆர்கானிக் சருமப் பராமரிப்பு பிராண்ட் உருவாக வழிவகுத்தது.
சுயநிதியில் இயங்கும் இந்த ஸ்டார்ட் அப் 10,000 ரூபாய் முதலீட்டுடன் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்நிறுவனத்தின் விற்றுமுதல் 15 கோடி ரூபாய். இதன் தயாரிப்புகள் அமேசான், ஃப்ளிப்கார்ட், நைகா போன்ற பிரபல மின்வணிக தளங்களில் கிடைக்கிறது.
கிருத்திகாவின் சமையலறையில் தொடங்கப்பட்ட முயற்சி
கிருத்திகா ஆரம்பத்தில் தனது சமையலறையிலேயே குளிர் அழுத்த சோப்புகள் தயாரித்து சோதனை செய்யத் தொடங்கினார். பின்னர் கிருத்திகாவின் கணவரும் வில்வா நிறுவனத்தின் இணை நிறுவனருமான குமரன் அவருடன் இணைந்துகொண்டார். குமரன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் எம்பிஏ முடித்துள்ளார்.
கோயமுத்தூர் அருகே காசிபாளையம் என்கிற கிராமத்தில் கிருத்திகாவின் குடும்பத்திற்கு சொந்தமாக பண்ணை (வில்வா பண்ணை) உள்ளது. ஆட்டுப் பால் கொண்டு சோதனை முயற்சியைத் தொடங்கினார்.
”பல ஆய்வுகள் நடத்திய பின்னர் எங்களது குடும்பத்திற்கென ஒரு பிரத்யேக ரெசிபியை உருவாக்கினோம். இதைத் தான் எங்களது வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகிறோம். எங்களது பண்ணையில் இரண்டு, மூன்று ஆடுகளுடன் தொடங்கினோம். இன்று பண்ணையில் ஒரு மந்தையே உள்ளது. ஃப்ரெஷ்ஷான பாலைக் கறந்த பிறகு அவற்றைக் கொண்டு வெவ்வேறு ஆட்டுப் பால் தயாரிப்புகளை உருவாக்குகிறோம்,” என்றார் கிருத்திகா.
வில்வா பிராண்ட் மூலம் வேளாண் விளைப்பொருட்கள், கேரியர் எண்ணெய், நறுமண எண்ணெய் ஆகியவற்றின் சரியான கலவையை உருவாக்க விரும்புவதாக கிருத்திகா தெரிவித்தார். விளைப்பொருட்கள் கடினமான ரசாயனங்கள், சேர்க்கை பொருட்கள், செயற்கை எண்ணெய் அல்லது பெர்ஃப்யூம் போன்றவை சேர்க்கப்படாமல் சுத்தமாக பெறப்படுவதாக அவர் தெரிவித்தார். தயாரிப்பு செயல்முறைகள் வெளிப்புற உதவியின்றி நிறுவனத்திற்குள்ளேயே மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தயாரிப்பு அறிமுகமாவதற்கு முன்பு பல மாதங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
தயாரிப்புகள்
கூந்தல் பராமரிப்பு, சருமப் பராமரிப்பு மற்றும் இதர அழகு சாதனப் பொருட்கள் வில்வா தயாரிப்புகளில் அடங்கும். சிட்ரோநெல்லா, எலுமிச்சைப்புல் ஆகியவற்றைக் கொண்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பான கொசு விரட்டி எண்ணெயை உருவாக்கவும் இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
மஸ்காரா, லிப்ஸ்டிக் போன்றவற்றையும் வீட்டிலேயே தயாரித்த இந்த ஸ்டார்ட் அப் தற்போது இவற்றைத் தயாரிப்பதில்லை என்றார் கிருத்திகா. இந்நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகளில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. கண்களுக்கான க்ரீம், பாடி பாலிஷ் ஆகியவற்றில் மட்டும் பதப்படுத்தும் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறது. இவை பாதுகாப்பானவை. அத்துடன் குறைந்த காலத்திற்கு மட்டுமே கெடாமல் இருக்கும்.
நறுமண எண்ணெய் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பதாக கிருத்திகா தெரிவித்தார். முழுமையாக ஆர்கானிக்காக இருப்பது உறுதிசெய்யப்படுகிறது. ஈரோட்டில் இருந்து முருங்கை எண்ணெயும் காஷ்மீரில் இருந்து லாவண்டர் எண்ணெயும் கேரளாவில் இருந்து ஓமம், மிளகுக்கீரை, எலுமிச்சைப்புல் எண்ணெயும் பஞ்சாபில் இருந்து தேன்மெழுகும் பெறப்படுகிறது.
தற்சமயம் இந்நிறுவனத்தின் சிறிய தொழிற்சாலை கோயமுத்தூரில் உள்ளது. விரைவில் 40,000 சதுர அடி கொண்ட தொழிற்சாலைக்கு மாற உள்ளது.
விற்பனையாளர்கள்
“ஆரம்பத்தில் எங்களது தேவைகளை பூர்த்திசெய்யும் சரியான விற்பனையாளர்களைக் கண்டறிவதில் சிரமம் இருந்தது. ஆனால் தற்போது விற்பனையாளர்களே நேரடியாக எங்களை அணுகுகின்றனர். எங்களது தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் ஆர்கானிக் முறையில் உள்ளூர் விவசாயிகளால் தயாரிக்கப்படுபவை. எங்களது பண்ணையில் வளரும் மூலப்பொருட்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்றார் கிருத்திகா.
ஒரு சில பொருட்கள் அருகிலுள்ள பண்ணைகளில் பணிபுரியும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது. இதன் மூலம் விற்பனையாளர் பிரச்சனைக்கு தீர்வுகாண முடிந்தது.
இந்தத் தயாரிப்புகள் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இக்குழுவினர் முதலில் 2017-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் விற்பனையைத் தொடங்கினார்கள். அடுத்த இரண்டாண்டுகளில் இக்குழுவினர் வலைதளம் அமைத்தல், விநியோகம், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினர். இதற்காக முன்னணி டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க்களுடன் இந்நிறுவனம் இணைந்துகொண்டது.
அதிக வாடிக்கையாளர்களைப் பெறவும் தங்களது தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உள்ளூர் கோர்மெட் பஜாரில் ஒரு ஸ்டோரை அமைத்தார் கிருத்திகா. தற்போது இவர்களது முக்கிய ஸ்டோர் கோயமுத்தூரில் உள்ளது. ஆனால் வேறு ஆஃப்லைன் ஸ்டோர் திறக்க இந்நிறுவனம் தற்சமயம் திட்டமிடவில்லை. தற்போது இதன் 80 சதவீத வணிகம் ஆன்லைன் ஸ்டோர் மூலமாகவே பெறப்படுகிறது.
சந்தை மற்றும் எதிர்காலம்
ரசாயனங்களில்லாத ஆர்கானிக் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் அழகு சந்தை 7 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுவதாக ரெட்சீர் கன்சல்டன்ஸ் தெரிவிக்கிறது. இது இரட்டை இலக்க எண்ணாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்வா மட்டுமல்லாது மும்பையைச் சேர்ந்த Plum நிறுவனமும் 100 சதவீத வீகன் பிராண்ட் ஆகும். அதேபோல் Disguise இயற்கையான ரசாயனங்களற்ற வீகன் காஸ்மெடிக் பிராண்ட் ஆகும்.
சுயநிதியில் இயங்கும் இந்த ஸ்டார்ட் அப் இரண்டாம் ஆண்டில் 100 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. இந்த ஆண்டு 300 மடங்கு வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு 8,000 ஆர்டர்கள் பெறப்படுவதாகவும் சராசரியாக ஒரு பாஸ்கெட்டிற்கு 1,500 ரூபாய் வரை பெறப்படுவதாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
”அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றவாறு இருப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்தவாறான புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆட்டுப்பால் சார்ந்த சரும பராமரிப்பில் முன்னோடியாகத் திகழவேண்டும் என்று விரும்புகிறோம்,” என்றார் கிருத்திகா.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா