60 நிமிடங்களில் பேமெண்ட் கேட்வே ரெடி: நிறுவனங்களுக்கு டெக் சேவை புரியும் ‘இணை டெக்னாலஜீஸ்’
தற்போது சர்வதேச அளவில் எங்கிருந்து வேண்டுமானாலும் தொழில் செய்யலாம். ஆனால் அவர்களிடம் இருந்து பணத்தை வசூலுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. கரன்ஸி, பேமெண்ட் கேட்வே என பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சிக்கலுக்கான தீர்வை வழங்க உருவாக்கப்பட்டதுதான் சென்னை ’இணை டெக்னாலஜீஸ்’.
சில காலத்துக்கு முன்பு தொழில்களுக்கு எல்லை இருந்தது. ஆனால், தற்போது சர்வதேச அளவில் எங்கிருந்து வேண்டுமானாலும் தொழில் செய்யமுடியும் என்ற நிலை வந்து விட்டது. அதேபோல், ஒரு நிறுவனத்துக்கு உலகின் எந்த பகுதியில் இருந்தும் வாடிக்கையாளர்களும் கிடைக்கலாம்.
சேவை நன்றாக இருந்தால் வாடிக்கையாளரை எளிதாகப் பெற முடியும். ஆனால், அவர்களிடம் இருந்து பணத்தை வசூலுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. கரன்ஸி, பேமெண்ட் கேட்வே என பல நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த சிக்கலுக்கான தீர்வினை வழங்குகிறது சென்னையைச் சேர்ந்க்த ‘இணை டெக்னாலஜீஸ்’ (
)'இணை டெக்னாலஜீஸ்' கார்த்திக் நாராயணன் மற்றும் அனந்த பட்டாபிராமன் ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்த்திக் நாராயணன் தொடங்கி இருக்கும் இரண்டாவது நிறுவனம் இது. அவரின் முதல் நிறுவனம், ’இணை டெக்னாலஜீஸ்’ YCombinator நிதி பெற்றது உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து கார்த்திக் நாராயணன் பகிர்ந்து கொண்டார்.
கொத்தமங்கலம் சுப்புவின் மகன் வழிபேரன் நான். பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். டிஏவி பள்ளியில் படித்தேன். சென்னையில் இன்ஜினீயரிங் படித்தேன். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் எம்.எஸ்.படித்தேன். அங்கேயே பிஹெச்டிக்கு விண்ணப்பித்தேன்.
ஆனால், பாதியில் பிஹெச்டியை நிறுத்திவிட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அதனைத் தொடர்ந்து குவால்காம் நிறுவனத்திலும், சாம்சங் நிறுவனத்திலும் பனியாற்றினேன். இங்கு சர்வதேச அனுபவம் கிடைத்தது. இந்த சமயத்தில் என்னுடைய பள்ளிகால நண்பர் அனந்த பட்டாபிராமனை சந்தித்து விவாதிக்கும்போது புதிய தொழிலுக்கான ஐடியா பிறந்தது.
அவர் ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தவர். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். நான் டெக்னாலஜி நபர், அவர் பைனான்ஸ் நபர். இருவரும் இணையும்போது நிறுவனத்துக்கு பலமாக இருக்கும் எனக் கருதினோம்.
நண்பர் இங்கிலாந்தில் இருந்ததால் ஐரோப்பாவை மையமாகக் கொண்டு, 2017ம் ஆண்டு ஒரு டெக்னாலஜியை அடிப்படையாகக் கொண்டு ஃபிட்னஸ் நிறுவனத்தை தொடங்கினோம். இந்த நிறுவனத்தின் பெயர் ’ஆரோ’ (Auro). உடற்பயிற்சி செய்யும்போது தேவையான அறிவுறைகள்/ கருத்துகள், இசை உள்ளிட்டவை கிடைக்கும். இதற்கு அமெரிக்காவிலும் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். இந்த ஸ்டார்ட் அப் சிறப்பாக செயல்பட்டது.
‘இணை’ பிறந்த கதை
ஆரோ நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தபோது பேமெண்ட் சிஸ்டத்தில் உள்ள பிரச்சினை எங்களுக்குப் புரிந்தது. ஒரு நாட்டுக்கு வெளியில் இருந்து பேமெண்ட் வாங்குவது அவ்வளவு எளிதாக இல்லை.
உதாரணத்துக்கு இங்கிலாந்தில் சிவிவி நம்பர் என்பது முக்கியமான விஷயம். ஆனால் அமெரிக்காவில் பேமெண்ட் செய்யும்போது வாடிக்கையாளர்களின் முகவரி அவசியம். இதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு விதிமுறைகள் இருந்தது.
“அப்போதுதான் எங்களுக்கு பேமெண்ட் தொடர்பான நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அந்த சமயத்தில் எங்களுடைய முதல் நிறுவனத்தை ஐரோப்பாவைச் சேர்ந்த வேறு ஒரு நிறுவனம் வாங்குவதற்கு ஆர்வம் காண்பித்தது. நிறுவனத்தை விற்றுவிட்டு இணை டெக்னாலஜீஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்,” என கார்த்திக் கூறினார்.
நீங்கள் ஏற்கெனவே ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி, வெற்றிகரமாக விற்றுவிட்டீர்கள். இருந்தாலும் எதற்காக YCombinator மையத்தை அணுகவேண்டும்? அவர்கள் உங்களுக்கு எவ்வாறு பயன்பட்டார்கள் என்னும் கேள்விக்கு விரிவாக பதில் அளித்தார் கார்த்திக்.
நாங்கள் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி இருந்தாலும் YCombinator உதவி கிடைப்பது என்பது அரிது. மிக சில நிறுவனங்களுக்கு மட்டுமே அவர்களின் ஆலோசனை கிடைக்கிறது. நமக்குத் தெரியாதது பல விஷயங்கள் உள்ளன. பலரிடமும் உரையாடுவதால் நிறைய கற்றுக்கொண்டோம். அதைவிட எவ்வளவு விரைவாக ஒரு புராஜக்டை கொண்டுவர வேண்டும். அதற்கு என்ன தேவை என்பது கற்றுக்கொண்டோம். இதுதவிர YCombinator நிதி பெற்ற நிறுவனம் என்பது நமக்கு முக்கியமான அடையாளம். பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் உரையாட முடியும், என்றார்.
60 நிமிடங்களில் 6 கண்டகளின் பேமண்ட்
சரியாகக் கடந்த ஆண்டு மே மாதம் 1-ம் தேதிதான் ’இணை டெக்னாலஜீஸ்’ நிறுவனத்தை தொடங்கினோம். நீங்கள் எந்தத் தொழிலிலும் இருக்கலாம், உங்களுக்கான பேமெண்ட் கேட்வேவை எங்கள் மூலம் எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.
“60 நிமிடங்களில் 6 கண்டங்களில் உள்ள நாடுகளில் இருந்து பேமெண்ட் பெற்றுக்கொள்ள முடியும். தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் பல பேமெனெட் முறைகள் இருக்கும். இவற்றில் பெரும்பாலானவற்றை நாங்கள் ஒருங்கிணைத்திருக்கிறோம். ஒரே குடையின் கீழ் அனைத்துவிதமான பேமேண்ட் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்,” என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் 4 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டி இருக்கிறோம். பவா வென்ச்சர்ஸ், 9 யுனிகார்ஸ், பெட்டர் கேபிடல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன. இதுதவிர க்ரெட் நிறுவனர் குனால் ஷா, ஏஞ்சல் முதலீட்டாளர் ஸ்ரீராம் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் முதலீடு செய்திருக்கின்றனர்.
ஒரு மணிநேரத்தில் பேமெண்ட் கேட்வேவை ஒருங்கிணைக்க முடியும். 99 டாலர் / மாதம் என கட்டணம் வசூலிக்கிறோம். இதுதவிர பரிவர்த்தனையில் 0.5 சதவீதம் செலுத்த வேண்டும். அதோடு, மாதம் 500 டாலர் (+0.2% பரிவர்த்தனை கட்டணம்) என நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தற்போது டெக்னாலஜிதான் முக்கியம். ஒவ்வொரு நிறுவனமும் டெக்னாலஜிக்கு பெரிய தொகையை முதலீடு செய்கின்றன. அப்படி இருக்கும்போது பேமேண்ட் கேட்வே ஒருங்கிணைப்பு வேலையை அந்த குழுவே செய்ய முடியாதா? ஏன் உங்களிடம் வர வேண்டும் ஒருவேளை நிறுவனங்கள் வருவதாக இருந்தாலும் சிறிய நிறுவனங்கள் மட்டுமே உங்களிடம் வருவார்களே என்றதற்கு,
”டெக்னாலஜி என்பது பொதுவான வார்த்தை. பேமெண்ட் புரிதல் இருக்கும் டெக்னாலஜி குழு தேவை. தவிர அந்த குழுவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது என்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஆனால் எங்களிடம் வரும்போது அனைத்து மாற்றங்களை நாங்கள் கண்காணித்துவருகிறோம். மேலும் டெக்னாலஜி நபர்களுக்கு சம்பளம் கொடுப்பதை விட எங்களுடைய சேவை கட்டணம் மிக மிக குறைவு,” என்றார்.
இரண்டாவதாக, பெரிய நிறுவனங்களும் எங்களிடம் வாடிக்கையாளர்களாக உள்ளனர். உதாரணத்துக்கு ஒரு நாட்டில் செயல்பட்டுவரும் நிறுவனம் அடுத்த நாட்டுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என நினைத்தால் ஒரு மணி நேரத்தில் அடுத்த நாட்டுக்கு விரிவாக்கம் செய்ய முடியும். ஜூம் கார்ஸ் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களும் எங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 30 மடங்கு அளவுக்கு எங்களின் வருமானம் உயர்ந்திருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகள் குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இப்போதைக்கு சென்னையில் 30 நபர்கள் கொண்ட குழு இருக்கிறது. பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறோம், எனத் தெரிவித்தார்.
அது என்ன ’இணை டெக்னாலஜீஸ்’ என்று கேட்டதற்கு, சிறிதாக இருக்க வேண்டும், தமிழில் இருக்க வேண்டும் என நினைத்தோம். அதனால் ’இணை’ என பெயர் வைத்தோம். Inai – இதில் ஏஐ artificial intelligence-யை குறிப்பதாகவும் வைத்துக்கொள்ளலாம் என கார்த்திக் கூறினார்.
இது low code no code platform-களின் காலம் போல…