கடும் வீழ்ச்சியில் பேடிஎம் பங்குகள்: சரிவுக்குக் காரணமான விஷயங்கள் என்னென்ன?
நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா கைது செய்யப்பட்டதையும், புதிய வாடிக்கையாளர்களுக்கு Paytm Payments வங்கியை ரிசர்வ் வங்கி தடை விதித்ததையும் அடுத்தது அந்நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளன.
நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா கைது செய்யப்பட்டதையும், புதிய வாடிக்கையாளர்களுக்கு Paytm Payments வங்கியை ரிசர்வ் வங்கி தடை விதித்ததையும் அடுத்தது அந்நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் செயலியான பேடிஎம்-இன் தாய் நிறுவனமான One 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலைகள் இன்று பிஎஸ்இ-யில் எப்போதும் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
இன்று காலை முதலே 672 ரூபாயாக இருந்த பங்கின் விலை, பங்குச்சந்தையின் இறுதி நிலவரப்படி, அதாவது மாலை 3.30 மணிக்கு 680.40 காசுகளுக்கு விற்பனையாகியுள்ளது. இதனால் 12.21 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரையில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்டு உள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-யில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதை ஐடி தணிக்கை அறிக்கையை மதிப்பாய்வு செய்த பிறகு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கும் என அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக ரிசவ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,
"இந்திய ரிசர்வ் வங்கி, அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A இன் கீழ், Paytm Payments Bank Ltd ஐ உடனடியாக அமலுக்கு வரும் வகையில், புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. வங்கியும் அதன் ஐடி அமைப்பின் விரிவான சிஸ்டம் தணிக்கையை நடத்த ஒரு ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது," எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், கடந்த பிப்ரவரி 22ம் தேதி, தெற்கு டெல்லியில் உள்ள அரவிந்தோ மார்க் அருகே தி மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி அருகே வந்தபோது, காவல்துறை டிசிபியின் கார் மீது பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓவுமான விஜய் சேகர் சர்மா கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வேகமாக கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், விஜய் சர்மாவை கைது செய்தனர். அதன் பின்னர், அவர் சொந்த ஜாமினில் வெளியே வந்தார். இருப்பினும் இச்சம்பவம் பேடிஎம் நிறுவனத்தின் மீதான நன்மதிப்பை பங்குதாரர்கள் இடையே சரித்தது.
இதுதொடர்பாக Paytm வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த சம்பவம் மிகைப்படுத்தப்பட்டது என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அறிக்கையின் படி,
சிறிய கார் விபத்து தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் யாருக்கும் அல்லது சொத்துக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புகாரைப் போலவே கைது செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
வாகனத்திற்கு எதிராக ஜாமீன் பெறக்கூடிய சட்டத்தின் கீழ் ஒரு சிறிய குற்றத்திற்காக மற்றும் தேவையான சட்ட சம்பிரதாயங்கள் அதே நாளில் முடிக்கப்பட்டன, என விளக்கம் அளிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி விதித்த தடையும், பேடிஎம் நிறுவனர் விஜய் சர்மா கைதும் சேர்ந்து வாரத்தின் முதல் நாளான இன்றைய பங்கு சந்தையில் பேடிஎம் பங்குகளின் மதிப்பு சரிய காரணமாக அமைந்ததாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தொகுப்பு: கனிமொழி