2021-ம் ஆண்டில் யுவர்ஸ்டோரி தமிழில் வெளியான ‘ஊக்கமிகு’ 10 கதைகள்!
2021-ம் ஆண்டில் வெளி வந்து வாசகர்களிடையே பரவலாக கவனத்தை ஈர்த்த, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்கமிகு 10 பதிவுகள் இங்கு தொகுப்பட்டுள்ளன.
ஒவ்வொரு திங்கள்கிழமையும் ‘Monday Motivation’ என்ற தலைப்பில் ஊக்கம் தரும் மனிதர்களின் கதைகளை யுவர்ஸ்டோரி தமிழ் வெளியிட்டு வருகிறது. அதில், 2021ம் ஆண்டில் வெளிவந்து வாசகர்களிடையே பரவலாக கவனத்தை ஈர்த்த, ஊக்கமிகு 10 கதைகள் இங்கு தொகுப்பட்டுள்ளன.
நம் ஒவ்வொருவரின் எண்ணங்களில் மட்டுமின்றி நம் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும் ஆற்றலை இக்கட்டுரைகள் பெற்றுள்ளன.
1. அருகி வரும் மாட்டினத்தைப் பாதுகாக்கும் ‘லவ் குரு’
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜவேல் நாகராஜன் அருகி வரும் உம்பளச்சேரி மாட்டினத்தை பாதுகாக்க ஆர்ஜே பணியை விட்டு விலகினார். இந்த மாட்டினங்களை வளர்ப்பதில் இருக்கும் சிரமங்களைப் பற்றி உள்ளூர் மக்களிடமிருந்து தெரிந்துகொண்டார். இவற்றை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்க விரும்பினார்.
இவர் சமூக வலைதளங்களிலும் ரேடியோ ஷோக்கள் மூலமாகவும் மக்களிடையே பிரபலமடைந்திருந்தால், அவற்றைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கும் விலங்குகளுக்கும் உதவ விரும்பினார்.
எனவே லாக்டவுன் சமயத்தில், ‘பேசு தமிழா பேசு’ என்கிற யூட்யூப் சேனலைத் தொடங்கி உம்பளச்சேரி மாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். அதுமட்டுமின்றி உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் இந்த மாடுகளைத் தத்தெடுக்க உதவும் வகையில் ஒரு தளத்தை உருவாக்கினார்.
மேலும், ராஜவேல் கதையை படிக்க கீழே கிளிக் செய்யலாம்.
2. வணிகம் தொடங்க வயது தடையல்ல – ஊதுபத்தி விற்பனை செய்யும் நளினி
51 வயது நளினி நாகப்பா ஷெட்டி பேப்பர் தட்டு, ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த நளினி தன் கணவர், குழந்தைகளுடன் உத்யமா நகரில் வசிக்கிறார். கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் குடும்ப செலவுகளை சமாளிக்க வேலை செய்ய ஆரம்பித்தார். பாக்கு அறுவடை செய்தவர் போதிய வருமானம் ஈட்ட முடியாமல் வருமானத்தைப் பெருக்க வழி தேடினார்.
’சுப்ரியா’ என்கிற மகளின் குழுவில் சேர்ந்தார். அதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்முனைவு திட்டத்தில் நளினி கலந்துகொண்டார். சுயதொழில் தொடங்க விரும்பி வங்கிக் கடன் பெற்றார். இதைக் கொண்டு பேப்பர் பிளேட் மற்றும் ஊதுபத்தி வணிகத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
முழு கட்டுரைக்கு கீழே கிளிக் செய்யலாம்.
3. குப்பை சேகரித்து கஷ்டப்பட்டவர் 500 குழந்தைகள் கல்வி கற்க உதவுகிறார்!
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தேவி பிரதாப் சிங் பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டதால் நிம்மதியை இழந்தார். 12 வயதில் 130 ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு புறப்பட்டு குவாலியர் சென்றுவிட்டார்.
ரயில் நிலையத்தில் வசித்தவர் குப்பை சேகரிப்பவர்களைக் கண்டு பணத்திற்காக குப்பை சேகரிக்க ஆரம்பித்தார். அங்கிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகி சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்.
பின்னர், தாபா ஒன்றில் வேலைக்கு சேர்ந்தபோது கோவா செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து டெல்லி சென்றவர் விற்பனையாளராக வேலை பார்த்தார். அவரைப் போன்றே கடினமான நாட்களைக் கடந்து வந்த சாந்தினி என்பவரை சந்தித்தார்.
தேவி பிரதாப் சிங், சாந்தினி கான் இருவரும் சேர்ந்து Voice of Slum என்கிற என்ஜிஓ தொடங்கி நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் படிக்க உதவி செய்கிறார்கள். பெருந்தொற்று சமயத்தில் உணவு விநியோகம் செய்தும் உதவியுள்ளனர்.
4. ஏழைகளின் பசியைப் போக்கும் நெல்லை ஜான் பெஞ்சமின்
ஜான் பெஞ்சமினின் சொந்த ஊர் திருநெல்வேலி. தனது பெற்றோர் சமூக நலப் பணிகளில் ஈடுபடுவதைப் பார்த்து வளர்ந்ததால் நலப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்கிற எண்ணம் இவருக்கும் தோன்றியது. கொரோனா சமயத்தில் மும்பையில் என்ஜிஓ உடன் தன்னார்வலராக இணைந்து பலருக்கு உணவு கொடுத்து உதவியுள்ளார்.
Serving Humanity என்கிற முயற்சியைத் தொடங்கி கிட்டத்தட்ட 40,000 உணவுப் பொட்டலங்கள் வரை கொடுத்து உதவியுள்ளார். இவரது சேவை 3,500 குடும்பங்களைச் சென்றடைந்துள்ளது.
துபாயில் இருக்கும் நண்பர் ஜானின் முயற்சிக்கு உதவி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பலர் உதவியுள்ளனர். தேஜஸ் தக்கர் என்கிற பாலிவுட் இயக்குநர் இவருக்கு இணைந்து உதவியுள்ளார். இப்படி ஜானின் முயற்சியில் பலர் கைகோர்த்து நலப்பணிகளும் விரிவடைந்துள்ளது.
5. ஆணாதிக்கம் நிறைந்த பெயிண்டிங் துறையில் சாதிக்கும் பெண்கள்
காலம் காலமாக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்த பெயிண்டிங் துறையில் பெண்கள் கால் பதித்து சாதித்து வருகின்றனர். கரண்டி பிடித்த கைகளில் இன்று பெயிண்டிங் பிரஷ் பிடித்து வீட்டுச் சுவர்களைப் பெண்கள் புதுப்பித்து வருகின்றனர்.
nShakti திட்டம் மூலம் பெண்களுக்கு பெயிண்டிங் வேலை தொடர்பாக பயிற்சியளிக்கப்படுகிறது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த துர்கா, மரகாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயா என வீட்டின் நான்கு சுவர்களைத் தாண்டி வெளியில் சென்று பழக்கப்படாத எத்தனையோ பெண்கள் இன்று சுவர்களை வண்ணமயமாக்கும் கலையைக் கற்றுக்கொண்டு சம்பாதிக்கிறார்கள்.
6. மக்களால் ஒதுக்கப்பட்டவர் இன்று மக்கள் தொடர்பு துறை தொழில்முனைவர்
சுமீத் அகர்வால் குறைப் பிரசவமாக ஏழு மாதத்தில் பிறந்தார். இவருக்கு பெருமூளை வாதம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் உடல் தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டது.
பள்ளியில் சேர்ந்தபோது சக மாணவர்களும் ஆசிரியர்களும் கிண்டல் செய்தபோதும் அவர் மனதில் நம்பிக்கையை விதைத்து ஆதரவு இருந்துள்ளார் அவரது அம்மா.
படிப்பில் ஆர்வம் காட்டிய சுமீத் பிபிஏ, ICFAI வணிகப் பள்ளி, மக்கள் தொடர்பு பிரிவில் முதுநிலை டிப்ளமோ படிப்பு என பல பிரிவுகளி படித்து முடித்தார். ஆனால், பட்டங்கள் வாங்கிய சுமீத்தினால் வேலை வாங்க முடியாமல் போனது. இவரைப் பார்த்ததும் பணியமர்த்துபவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்கிற கொள்கையுடன் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசகராக செயல்பட்ட சுமீத் இன்று மக்கள் தொடர்பு பிரிவில் செயல்படும் பிரபல தொழில்முனைவர்; ஊக்கமளிக்கும் பேச்சாளர்; மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக குரல்கொடுக்கும் ஆர்வலர்; இப்படிப் பன்முகத்தன்மை கொண்டவராகத் திகழ்கிறார்.
7. எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை பராமரிக்கும் 68 வயது மங்கள் ஷா
கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவே பணியாற்றி வரும் மங்கள் ஷா நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாயாக மட்டுமின்றி தெய்வமாகவே காட்சியளிக்கிறார்.
மங்கள் ஷா தனது மகளுடன் பந்தர்பூர் பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்றிருந்தார். அப்போது இரண்டரை வயதிலும் ஒன்றரை வயதிலும் இரண்டு பெண் குழந்தைகளை அனாதையாக விடப்பட்டிருந்ததைக் கண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அந்தக் குழந்தைகளை பாதுகாப்பாக விடுவதற்காக, ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தங்குமிடத்தைத் தேடினார். அப்படிப்பட்ட இடம் இல்லை என்பதை அறிந்ததும் தானே ஒரு தங்குமிடத்தைக் கட்ட நினைத்து Palawi என்கிற பராமரிப்பு இல்லத்தைக் கட்டி நடத்தி வருகிறார். இதற்காக கூட்டுநிதி பிரச்சாரம் மூலம் நிதி திரட்டுகிறார்.
8. 15 ஆண்டுகளில் 65,000 விலங்குகளை மீட்டுள்ள கோவை மினி வாசுதேவன்
கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்த கோவையைச் சேர்ந்த மினி வாசுதேவன் கோவை திரும்பியதும் நாய்கள் பராமரிப்பின்றி சாலையில் திரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விலங்குகளைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவர்களைக் குழுவாக ஒன்றிணைத்து இவர் சிறியளவில் தொடங்கிய முயற்சி Humane Animal Society (HAS) என்கிற என்ஜிஓ-வாக உருவெடுத்தது.
மினி, மினியின் கணவர், 2 ட்ரஸ்டி ஆகியோருடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி இன்று முழு நேரமாக செயல்படும் 21 ஊழியர்களுடன் விரிவடைந்துள்ளது. இதில் கால்நடை மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள், விலங்குகளைக் கையாள்பவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போன்றோர் அடங்குவர்.
மினி மக்கள் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் அதேசமயம் மக்கள் விலங்குகளிடம் பரிவு காட்டினால் இதுபோன்ற பராமரிப்பு இல்லங்கள் செயல்படுவதற்கான அவசியமே ஏற்படாது என்கிறார்.
9. அறிவுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளி நடத்தும் திருச்சி வழக்கறிஞர்
திருச்சியைச் சேர்ந்த செல்வராணி ராஜரத்தினம் ஒரு வழக்கறிஞர். துபாயில் வசித்து வந்தார். மருத்துவராக இருந்த கணவரும் தந்தையும் இறந்துபோக மீளாத் துயரில் தவித்துள்ளார்.
கணவரின் விருப்பப்படி இந்தியா திரும்பிய செல்வராணி, அப்பா நடத்தி வந்த என்ஜிஓ-விற்கு ’ஸ்ரீ செல்லையா மெமோரியல் ட்ரஸ்ட்’ என அப்பாவின் பெயரை மாற்றினார்.
அறிவுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் அடிப்படை வேலைகளைக்கூட செய்துகொள்ள முடியாமல் தவிப்பதைக் கண்டார். இவர்களுக்கு உதுவதற்காக சிறப்புப் பள்ளியைத் தொடங்கினார்.
5 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டு இன்று 18 வயது வரை உள்ள 31 குழந்தைகள் பள்ளியில் பராமரிக்கப்படுகிறார்கள். சிறப்புப் பள்ளியில் மற்றவர்களை சார்ந்தில்லாமல் தாங்களே தங்கள் வேலைகளை செய்துகொள்ள மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.
இங்கு சிறப்புக் கல்வியில் நிபுணத்துவம் பெற்ற இரண்டு கல்வியாளர்கள், ஒரு பிசியோதெரபிஸ்ட், பயிற்சி பெற்ற இரண்டு ஆசிரியர்கள், புரோக்ராம் அதிகாரி, ஒருங்கிணைப்பாளர், பராமரிப்பாளர், இரண்டு ஆயாக்கள் போன்றோர் குழுவாக இணைந்து செயல்படுகிறார்கள்.
10. சீரியல் விளக்குகள் மூலம் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்திக்கொண்ட அரசகுளம் தனலட்சுமி
அரசகுளத்தைச் சேர்ந்த தனலட்சுமியின் கணவர் சீரியல் விளக்குகள் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆண்களுக்கான பிரிவாகக் கருதப்படும் சீரியல் விளக்குகள் வணிகத்தில் கணவருடன் களமிறங்கி வணிகம் விரிவடைய உதவியதுடன் மற்ற பெண்கள் இந்த வணிகத்தில் இணைந்து வெற்றியடையவும் தற்சார்புடன் திகழவும் உதவி வருகிறார்.
தனலட்சுமிக்கு சீரியல் விளக்குகள் பொருத்தும் வேலையில் ஆர்வம் இருந்ததால் இதில் ஈடுபட பலமுறை கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பரிச்சயமில்லாத வேலை என்பதால் கணவர் மறுத்துள்ளார்.
ஒருமுறை விழா ஒன்றிற்கு சீரியல் விளக்குகள் பொருத்துவதற்கான வேலை கிடைத்துள்ளது. குறைந்த நேரத்தில் வேலையை முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால் வேறு வழியின்றி தனலட்சுமியின் உதவியைப் பெற்றுள்ளார். உடனே ஆர்வமாகக் கைகொடுத்த தனலட்சுமி முழு ஆர்வத்துடனும் சுறுசுறுப்புடனும் சரியான நேரத்தில் சிறப்பாக வேலை முடிய உதவியுள்ளார்.
இன்று தனலட்சிமி 50 பெண்கள் அடங்கிய குழுவை நிர்வகித்து வருகிறார். கிட்டத்தட்ட 550-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளார். இவர்களில் பலர் சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொருவரும் 20-30 பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளனர்.