‘தைரோகேர்’ நிறுவன 66% பங்குகளை PharmEasy வாங்குவதாக அறிவிப்பு!
ஃபார்ம்ஈஸி நிறுவனத்தின் தாய் நிறுவனமான, API Holdings, தைரோகேர் நிறுவனத்தில் 66.1 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
PharmEasy தாய் நிறுவனமானம் API Holdings Limited தைரோகேர் நிறுவனத்திடம் இருந்து 66.1 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதற்காக, டாக்டர்.ஏ.வேலுமணி ஆண்ட் அபிலியேட்சிடம் இருந்து பங்கு ஒன்று ரூ.1,300 விலையில் மொத்தம் ரூ.4546 கோடிக்கு செலுத்துகிறது.
இந்த பரிவர்த்தனை கட்டுப்பாடு மற்றும் இதர பொருந்தக்கூடிய அனுமதிகளுக்கு உட்பட்டது. ஏ.பி.ஐ நிறுவனத்தின் துணை நிறுவனமான Docon Technologies Pvt Ltd, கையகப்படுத்தும் நிறுவனமாக இருந்து, கூடுதல் 26 சதவீத பங்குகளுக்கு கோரிகை வைக்கும்.
டாக்டர்.ஏ.வேலுமணி, ஐந்து சதவீதத்திற்கும் குறைவான கட்டுப்பாடு பங்குகளை ஏபிஐ நிறுவனத்தில் வாங்குவார். ஏபிஐ நிறுவனத்தின் தற்போதைய மற்றும் புதிய முதலீட்டாளர்கள் மேற்கொள்ள உள்ள சமபங்கு முதலீடுகளில் ஒரு பகுதியாக இது அமையும்.
ஃபார்ம்ஈஸி நிறுவனம், தர்மில் சேத், தவல் ஷா, ஷர்ஷ் பரேக், ஷர்திக் தேதியா மற்றும் சித்தார்த் ஷாவால் நிறுவப்பட்டது.
“தைரோகேருடன் கூட்டு சேர்வதில் உற்சாகம் கொள்கிறோம். நோய்க்கூறு கண்டறிதலில் உலகத்தரமான அனுபவத்தை அளிப்போம். தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஃபார்ம் ஈஸி அனுபவத்தை தைரோகேரின் இந்திய அளவிலான இருப்புடன் இணைத்து செயல்படுவோம். ஒவ்வொரு இந்தியருக்கும் 24 மணி நேரமும், அனைத்து புறநோயாளிகள் மருத்துவச் சேவை பொருட்களை அளிப்பது எங்கள் நோக்கம்,” என்று ஏபிஐ ஹோல்டிங்ஸ் சி.இ.ஓ சித்தார்த் ஷா செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
ஃபார்ம்ஈஸி, ஆன்லைன் மருந்தகம் மற்றும் நோய்க்கூறு கண்டறிதல் பிராண்ட் RetailIO, ஆலோசனை மேடையான DocOn ஆகியவற்றை கொண்டுள்ளது. 12 மில்லியன் வாடிக்கையாளர்கள் நிறுவனம் கொண்டுள்ளது. 6,000 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆலோசனை கிளினிக் மற்றும் 90,000 பங்குதாரர் ரீடைலர்களை தனது வலைப்பின்னலில் பெற்றுள்ளது.
ஃபார்ம்ஈஸி மற்றும் நோய்க்கூறு கண்டறிதலில் ஒரு மில்லியன் பேருக்கு மேல் சேவை அளிக்கிறது. தைரோகேர் நிறுவனம், ஆண்டுக்கு 110 மில்லியன் சோதனைகளை மேற்கொள்கிறது.
தைரோகேர் நிறுவனம், இந்தியாவின் 2,000க்கும் மேற்பட்ட நகரங்களில் 3,300க்கும் மேற்பட்ட சேகரிப்பு மையங்கள் கொண்டுள்ளது. பல அடுக்கு ஆய்வக மாதிரியைக் கொண்டுள்ள நிறுவனம், மெகா மத்திய ஆய்வகம், இரண்டு மண்டல ஆய்வகம் மற்றும் 13 பிராந்திய ஆய்வகங்களை கொண்டுள்ளது.
"ஃபார்ம்ஈஸி மற்றும் தைரோகேர் இடையிலான இந்த கூட்டு, இந்திய சுகாதாரத்துறை, நுகர்வோர் மற்றும் சுகாதாரத் துறைக்கு மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் சுகாதார மேடை மற்றும் செலவு குறைந்த நோய்க்கூறு கண்டறிதல் சேவையை அளிக்கும் மிகப்பெரிய வலைப்பின்னல் இடையிலான ஒத்திசைவு உயர தரத்திலான நோய்க்கூறு கண்டறிதல் சேவையை அளிக்கும் மற்றும் 800 மில்லியன் இந்தியர்களுக்கு மேல் புறநோயாளி சேவைகளை அளிக்கும்,” என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
“இந்திய சுகாதாரத்துறையில் தனித்தன்மை வாய்ந்த இந்த கூட்டு உற்சாகம் அளிக்கிறது. நோய்க்கூறு கண்டறிதலில் தைரோகேரின் வீச்சு மற்றும் ஃபார்ம் ஈஸியில் துடிப்பான குழு, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சுகாதாரத் தீர்வுகளை கொண்டு வரும்,” என்று தைரோகேர் தலைவர் டாக்டர்.ஏ.வேலுமணி கூறினார்.
ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்