நாசா வெளியிட்ட புகைப்படம்: விக்ரம் லேண்டர் தெரியுதா பாருங்க?
நிலவின் தென்துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் ஹார்ட் லேண்டிங் செய்திருப்பதாக நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. எல்ஆர் ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்டு நாசா இதனை கூறியுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான தேசிய ஏரோநாடிகல் மற்றும் விண்வெளி நிறுவனம் (NASA) சந்திரயான் 2ன் லேண்டர் விக்ரம் நிலவின் தென்துருவப் பகுதியில் ஹார்ட் லேண்டிங் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 17ம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்க திட்டமிட்டிருந்த பகுதியில் தங்களது ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்கள் தெளிவானதாக இல்லாததால் விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்கியதா என்பதை கண்டறியமுடியவில்லை என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.46 மணியளவில் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறக்க திட்டமிடப்பட்ட விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டது. லேண்டருக்கு என்ன ஆனது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாசா கடந்த வியாழனன்று தென்துருவப்பகுதியில் லூனார் ரெனய்சன்ஸ் ஆர்பிட்டரில் உள்ள உயர்தர கேமிரா எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. எனினும் அந்தப் புகைப்படத்தில் பல இடங்களில் நிழல் சூழ்ந்திருப்பதால் லேண்டர் குறித்து சரியாக கணிக்க முடியவில்லை.
நிலவின் தென்துருவப்பகுதியில் 150 கிலோமீட்டர் அகலப்பரப்பிலான இடங்களை எல்ஆர் ஆர்பிட்டர் படமெடுத்துள்ளது. நாசாவின் ஆர்பிட்டர் அந்தப் பகுதியைக் கடக்கும் போது அங்கு சூரிய அஸ்தமனம் என்பதால் வெளிச்சம் குறைவாக இருந்துள்ளது. இதனால் அந்தப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை துள்ளியமாக கணிக்கமுடியவில்லை.
‘நிலவின் நிலப்பரப்பில் மறைந்துகிடக்கிறதா?’ என்ற தலைப்பில் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்களின் எல்ஆர்ஓசி குழுவால் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. லேண்டர் நிழலில் மறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த முறை லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் அக்டோபர் மாதத்தில் இந்தப் பகுதியை மீண்டும் எல்ஆர் ஆர்பிட்டர் கடக்கும் போது எடுக்கும் புகைப்படத்தில் அதனை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறோம். அந்த சமயத்தில் சூரியவெளிச்சம் புகைப்படம் எடுக்க சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக,” நாசா குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எந்த நாடும் சென்று ஆராய்ந்து பார்த்திடாத நிலவின் தென்துருவப் பகுதியில் இந்தியா சரியான திட்டமிடல்களுடன் சந்திரயான் 2ஐ நிலவுக்கு அனுப்பியது. 95 சதவிகிதம் இந்தப் பயணம் வெற்றியடைந்த நிலையில் விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்காததால் 5 சதவிகித பின்னடைவை சந்தித்தது இஸ்ரோ. லேண்டரில் இருந்து ஏன் தகவல் துண்டிக்கப்பட்டது, சந்திரயான் 2 பின்னடைவிற்கான காரணம் என்ன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தரவுகள் அடிப்படையில் காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
நாசாவின் எல்ஆர்ஓ ஆர்பிட்டர் 2009 செப்டம்பர் முதல் நிலவை சுற்றி வந்து படம்பிடித்துக் கொண்டிருக்கிறது. இதில் 50 செ.மீ அதிநவீன உயர் ரக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் ஆர்பிட்டரில் 30 செ.மீ resolution கேமரா பொருத்தப்பட்டுள்ளது. லேண்டர் தரையிரங்கியதாகக் கூறப்படும் பகுதியில்100 கிலோமீட்டர் தூரத்தில் ஆர்பிட்டர் ஏற்கனவே புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் ஈக்வெட்டாரில் இரண்டு கிரேட்டர்களுக்கு மத்தியில் 70டிகிரியில் கிடக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இது தென்துருவப்பகுதியில் இருந்து 600கிலோமீட்டர் நிழல்படிந்திருக்கும் இடமாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சந்திரயான் 2 ஆர்பிட்டரும், நாசாவின் எல்ஆர் ஆர்பிட்டரும் அடுத்த முறை அந்தப் பகுதியை கடக்கும் போது எடுக்கும் புகைப்படங்களை வைத்தே இஸ்ரோ லேண்டர் குறித்த முடிவிற்கு வர முடியும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் செப்டம்பர் 21ம் தேதியுடனே முடிந்துவிட்ட நிலையில் அடுத்தடுத்த சோதனைகளுக்கு இதில் என்ன தவறு நடந்திருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை சரிசெய்யலாம் என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தொடர்ந்து பின்னடைவிற்கான காரணம் என்பதை கண்டறிய பணியாற்றி வருகின்றனர்.
லேண்டருடன் இனி தொடர்பை ஏற்படுத்த முடியாது எனினும் ஆர்பிட்டர் சரியாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி