இறுதிக் கட்டத்தில் விக்ரம் லேண்டரின் வாழ்நாள்: நாசா எடுத்த படத்தில் சிக்கியதா ஆதாரம்?
Chandrayaan 2-வின் விக்ரம் லேண்டரின் வாழ்நாள் நாளையுடன் முடிவடையும் நிலையில் நாசா எடுத்த புகைப்படத்தில் அதன் ஆதாரங்கள் சிக்கியதா என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரயான் 2’ல் விக்ரம் லேண்டரின் செயல்பாட்டுக்காக இஸ்ரோ விதித்த காலக்கெடு செப்டம்பர் 21ம் தேதிக்குள் முடிவடைகிறது. விக்ரம் லேண்டருடன் தகவல்தொடர்புகளை மீண்டும் நிறுவுவதற்கான காலக்கெடு நெருங்கியுள்ள நிலையில், நாசாவின் எல்ஆர் ஆர்பிட்டர் சந்திரப் பரப்பில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடப்பதாகக் கூறப்படும் பகுதியில் எடுத்த புகைப்படங்களும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
நாசாவின் லூனார் ரெனய்சன்ஸ் ஆர்பிட்டர் செப்டம்பர் 17 அன்று சந்திரனின் பெயரிடப்படாத தென் துருவத்திற்கு பயணிக்கும் போது விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்ளும் என்று தெரிவித்திருந்தது. இதன்படியே செப்டம்பர் 17 அன்று அந்தப் பகுதியில் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. ஆனால் அந்தப் புகைப்படங்களில் லேண்டரின் இருப்பிடம் சரியாக பிரதிபலிக்கவில்லை. நிழல் போன்று தெரியும் உருவங்கள் விக்ரம் லேண்டராக இருக்கக் கூடுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
எல்.ஆர்.ஓவின் துணை திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லர்
“எல்.ஆர்.ஓ சந்திர சுற்றுப்பாதையை கடந்து செல்லும் போது அங்கு அந்தி வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியின் பெரும்பகுதி நிழலில் இருந்தது எனினும் ஆர்பிட்டரில் இருக்கும் கேமரா படங்களை எடுத்துள்ளது. இந்தப் படங்களில் லேண்டரின் இருப்பிடம் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் செப்டம்பர் 7ம் தேதி லேண்டர் தரையிறங்குவதற்கு முன்னர் எடுத்த படங்கள் தற்போது எடுக்கப்பட்டுள்ள படங்களை ஒப்பிட்டு பார்த்து ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.
லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யன் ஆகியவை சந்திரனில் தரையிறங்கும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு மட்டுமே செயல்படும் வகையில் இஸ்ரோ வடிவமைத்திருந்தது. 14 நாட்களுக்குப் பிறகு சந்திரனின் தென்துருவப்பகுதி இரவுப் பொழுதிற்கு சென்று விடும். சந்திரனில் இரவுகள் மிகவும் குளிராக இருக்கும், குறிப்பாக விக்ரம் தரையிறக்கப்பட்டிருக்கும் தென் துருவ பகுதியில் சந்திர இரவில் வெப்பநிலை மைனஸ் 2000°C ஆகக் குறையக்கூடும். லேண்டரில் உள்ள கருவிகள் அந்த வகையான வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. எலக்ட்ரானிக்ஸ் வேலை செய்யாது மற்றும் நிரந்தரமாக சேதமடையும்.
இந்நிலையில் விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்ற ஆய்வில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறியதாக அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
“செப்டம்பர் 7ம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது ஆட்டோமேடிக் லேண்டிங் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் லேண்டிங் திட்டத்தின் தவறு காரணமாக லேண்டர் விழுந்து நொறுங்கிப் போயிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.”
1,471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டரில் 27 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவர் வைக்கப்பட்டிருந்தது. நிலவில் மணிக்கு 200கிலோமீட்டர் வேகத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் ரோவரின் மத்தியப் பகுதியில் சேதம் அடைந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.
எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக லேண்டரின் நிலை என்ன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. Failur analysis குழு அளிக்கும் அறிக்கையில் அடிப்படையில் லேண்டர் குறித்த தகவல்களை இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிடுவார் என்று தெரிகிறது.
இஸ்ரோவின் திட்டப்படி விக்ரம் லேண்டர் செயல்பட்டிருந்தால் அது சென்ற வேலை நாளையுடன் முடிவடைந்திருக்கும். ஆனால் கடைசி நேர ஏமாற்றம் விக்ரம் லேண்டரின் மர்மத்தை இன்னும் உடைக்க முடியாததாகவே இருக்கிறது. நாசாவின் ஆர்பிட்டரும் கைகொடுக்கவில்லை,இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சியும் கைகொடுக்காத நிலையில் இரண்டு நாட்களில் எந்த தொடர்பும் நிறுவப்படாவிட்டால், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் நம்பிக்கையை இஸ்ரோ கைவிட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.
சந்திரயான் -2 விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்த பின்னர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இஸ்ரோ தங்களுக்கு உறுதுணையாக நின்ற அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
இதனிடையே 18 மணி நேரம் முன்பு கொடுத்துள்ள அப்டேட்டில் சந்திரயான் 2ல் ஆர்பிட்டர் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு உதவுவதோடு சந்திரன் பற்றிய ஆய்வில் திருப்தியளிக்கும் விதமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் விக்ரம் லேண்டருடனான தொடர்பு ஏன் துண்டிக்கப்பட்டது என்று தேசியக் குழுவும் இஸ்ரோ விஞ்ஞானிகளும் ஆராய்ந்து வருவதாகவும் அந்த அப்டேட் கூறுகிறது.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி