Chandrayaan2: ’விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை’- அடுத்த இலக்கு என்ன?
செப்டம்பர் 7ம் தேதி நிலவில் ஹார்டு லேண்டிங் செய்த விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. இஸ்ரோ அடுத்த இலக்கான ககன்யான் திட்டத்தை நோக்கி இனி செயல்படும் முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நிலவின் மேற்பரப்பில் சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதனுடனான தொடர்பு இழக்கப்பட்டது. அப்போதிலிருந்து இன்று வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. நிலவில் தென்துருவப்பகுதியில் சூரிய ஒளி குறைந்த இரவு நேரம் வரத்தொடங்கியுள்ளது.
செப்டம்பர் 21ம் தேதியுடன் சந்திர நாள் முடிவதால் அதற்கு பின்னர் அங்கு மைனஸ் 200 டிகிரிக்கு வெப்பநிலை மாறும். இந்த வெப்பநிலையில் லேண்டரில் உள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் செயல்படாது. மேலும் லேண்டரின் மேல்புறம் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் மூலமே அதற்கு சக்தி கிடைக்கும். கிடந்த 14 நாட்களாக முயன்றும் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பரப்பில் எந்த இடத்தில் கிடக்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை. மேலும் லேண்டர் ஹார்ட் லேண்டிங் செய்த போது உடைந்து நொறுங்கியதா அல்லது சாய்வலாக கிடக்கிறதா என்று எந்தத் தகவலையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
நாசாவின் எல்ஆர்ஓ ஆர்பிட்டர் மற்றும் சந்திராயன் 2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களை வைத்தே விக்ரம் லேண்டரில் என்ன தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பது கண்டறியப்பட உள்ளது. இதனிடையே விக்ரம் லேண்டரின் வாழ்நாளில் இன்று கடைசி நாளாக இருக்கும் நிலையில் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருந்தனர்.
“சந்திராயன் 2 ஆர்பிட்டர் நன்றாக செயல்பட்டு வருகிறது. ஆர்பிட்டரில் மட்டும் 8 சாதனங்கள் உள்ளன. அவை அனைத்தும் சரியாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், லேண்டருடன் எங்களால் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. எங்களின் அடுத்த குறிக்கோள் ககன்யான் திட்டம்தான்,” என்று இஸ்ரோ தலைவர், கே.சிவன் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அதேநாளில் புவி வட்டப்பாதையிலும் விண்கலம், நிலைநிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கப்பட்டு நிலவின் சுற்று வட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், செப்டம்பர் 7 ஆம் தேதி, அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.
எனினும், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் அறிவித்தார். என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விக்ரம் லேண்டர் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கியிருந்தால், உலகில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்குப் பிறகு அதை சாதித்துக் காட்டும் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும். இந்தியா முயன்றது போல, தென் துருவத்தில் எந்த நாடும் லேண்டரை தரையிறக்க முயன்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வரலாற்றுச் சாதனையைப் புரிய நினைத்தது இஸ்ரோ. இருப்பினும் சந்திராயன் 2, தனது இலக்கில் 95 சதவிகிதத்தை அடைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ககன்யான் திட்டம் என்றால் என்ன?
இந்தியர்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ எடுத்துள்ள தீவிர முயற்சி தான் ககன்யான் திட்டம். இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது.
2022-ல் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முன்பு இரண்டு முறை ஆளில்லா விண்கலம் மூலம் சோதனை நடத்தப்படும். இதில் 30 மாதங்களுக்குள் முதல் சோதனை விண்கலமும் 36 மாதங்களுக்குள் இரண்டாவது சோதனை விண்கலமும் ஏவப்படும். இறுதியாக 40 மாதங்களுக்குள் வீரர்களை கொண்ட முதல் விண்கலம் ஏவப்படும்.
பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் விண்கலத்துடன் 3 விண்வெளி வீரர்களுக்கான பகுதியும் மற்றொரு ஆய்வுப் பகுதியும் இணைக்கப்பட உள்ளது. இந்த மூன்றும் அதிநவீன ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட்டில் ஒருங்கிணைக்கப்படும். இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டவுடன் பூமியிலிருந்து 300-400 கி.மீ தொலைவில் உள்ள பூமியின் குறைந்த தூர சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடையும். இந்திய விண்வெளி வீரர்கள் 5 முதல் 7 நாட்கள் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்வார்கள்.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி