கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திர ஓவியங்கள் vs PS நடிகர்கள்!
நிஜத்தில் நடந்த வரலாற்றோடு தனது கற்பனையும் சேர்த்துதான் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார் கல்கி. நாவலில் அவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பு ஓவியங்களும், தற்போது பொன்னியின் செல்வனில் மணிரத்னம் தேர்வு செய்து செதுக்கி இருக்கும் கதாபாத்திரங்களும் எந்தளவிற்கு ஒத்துப் போகின்றன என ஒரு சின்ன அலசல்.
ஓவியங்கள் என்றாலே பெரும்பாலும் அதில் வரும் பெண் கதாபாத்திரங்களின் கண்கள் பெரியதாகத்தான் இருக்கும். பெரிய கண்கள், கூர்மையான மூக்கு, செதுக்கி வைத்தது போன்ற உதடுகள் என ஓவியத்திற்கு உயிர் கொடுப்பார்கள் ஓவியர்கள். ஆனால், நிஜத்தில் ஓவியத்தில் வருவது போன்றே பெண்களைப் பார்ப்பது என்பது அரிதிலும் அரிது.
சாதாரண ஓவியங்களுக்கே இப்படி என்றால், நம்மை கற்பனை உலத்திலேயே வாழ வைக்கும் நாவலில் வரும் ஓவியங்கள் எப்படி இருக்கும். அதிலும் தலைமுறைகளைக் கடந்து இன்றளவும் கொண்டாடப்படும் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில் வரும் கதாபாத்திரங்களின் ஓவியங்கள், அதைப் படிப்பவர்கள் மனதில் நிஜமாகவே உயிர் கொண்டு உலா வந்தவை. நம் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த கதாபாத்திரங்களுக்கு, தன் தூரிகையால் உயிர் கொடுத்தவர் ஓவியர் மணியம்.
நாவலைப் படித்தவர்கள், அந்த ஓவியங்களையே சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களாக மனதில் இருத்திக் கொண்டே, கதையில் பயணப்பட்டார்கள். அந்தளவிற்கு உயிரோட்டமான அந்த ஓவியங்களுக்கு, நிஜமாகவே திரையில் உயிர் தருவதென்பது நிச்சயம் சவாலான ஒன்றுதான்.
தமிழக ரசிகர்களின் அப்படிப்பட்ட நீண்டநாள் கனவைத்தான் தற்போது மணிரத்னம், தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டு தற்போது நிஜமாக்கி இருக்கிறார்.
அருள் மொழி வர்மன்தான் பொன்னியின் செல்வன் கதையின் நாயகன் என்றாலும், உண்மையில் குந்தவை மற்றும் நந்தினி என்ற இரு பெண் ஆளுமைகளுக்கு இடையேயான மோதல், வந்தியத்தேவனின் பயணங்கள், துரோகங்களும், சாகசங்கள் என சோழர் கால வரலாற்றையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் பொன்னியின் செல்வன்.
நிஜத்தில் நடந்த வரலாற்றோடு தனது கற்பனையும் சேர்த்துதான் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. வரலாற்றில் இல்லாத பல கதாபாத்திரங்கள் இந்த நாவலில் உண்டு. நாவலில் அவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பு ஓவியங்களும், தற்போது பொன்னியின் செல்வனில் மணிரத்னம் தேர்வு செய்து செதுக்கி இருக்கும் கதாபாத்திரங்களும் எந்தளவிற்கு ஒத்துப் போகின்றன.. எந்தெந்த இடத்தில் எல்லாம் வித்தியாசப்பட்டு நிற்கின்றன என ஒரு சின்ன அலசல்.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திர ஓவியங்கள் vs PS-1 நடிகர்கள்!
வந்தியத்தேவன் (கார்த்தி)
நாவலுக்கு வேண்டுமென்றால் பொன்னியின் செல்வன் என ’அருள்மொழி வர்மன்’ நாயகனாக இருந்தாலும், நிஜமாகவே நாவலின் நாயகன் ’வந்தியத்தேவன்’ தான். காரணம் அவரது கதாபாத்திரத்தின் வழியாகவே நாம் கதைக்குள் பயணப்படுவோம். மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரமான வந்தியத்தேவனுக்கு, நடிகர் கார்த்தி திரையில் உயிர் கொடுத்திருக்கிறார்.
வீரம், கோவம், காதல், குறும்பு, புத்திசாலித்தனம் என அத்தனையையும் முகத்தில் காட்டி இருக்கிறார். ஓவியத்தில் பார்த்தது போலவே நீண்ட முடி, காதில் வளையம், களையான முகம், கட்டுமஸ்தான உடம்பு என வந்தியத்தேவனாகவே மாறி இருக்கிறார் கார்த்தி.
நந்தினி (ஐஸ்வர்யா ராய்)
பொன்னியின் செல்வன் படத்தில், நாவலில் வரும் கதாபாத்திரம் போலவே ஒத்துப் போகும் அடுத்த கதாபாத்திரம் நந்தினி. வரலாற்றில் அப்படி ஒரு கதாபாத்திரமே இல்லையென்றாலும், நாவலின் ஆதிக்க ராணி, அல்லி ராணி எல்லாமே இந்த நந்தினிதான்.
தன் அழகால் எதிரில் இருப்பவர்களை ஒரே நொடியில் அடிபணியச் செய்யும் சதிகாரி நந்தினி. அப்படிப்பட்ட பேரழகி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நிஜத்திலும் அழகுராணியாகத்தானே இருக்க வேண்டும். ‘சந்திரமுகியாக நின்றார்.. உணர்ந்தார்.. அவராகவே வாழ்ந்தார்..’ என சந்திரமுகி படத்தில் வரும் டயலாக் மாதிரி, நந்தினியாகவே நம் கண்முன் நிற்கிறார் ஐஸ்வர்யாராய் பச்சன்.
குந்தவை (த்ரிஷா)
சோழ சாம்ராஜ்ஜியத்தின் ராஜமாதாவாக நாவலில் முக்கியக் கதாபாத்திரம் குந்தவை. அழகு, அறிவு, சாமர்த்தியம், நிர்வாகத்திறன் என அனைத்தும் ஒருங்கே பெற்றவரான குந்தவையின் முகமே கம்பீரமானது. நாட்டின் நலத்தில் எந்தளவு அக்கறைக் கொண்டவரோ, அதே அளவு தன்னை அழகுப் படுத்திக் கொள்வதிலும் அவருக்கு நிகர் அவரே.
நாவலில் வரும் கதாபாத்திரத்தில் இருப்பதுபோல், வித்தியாசமான அதே கொண்டை போன்ற கூந்தல் அமைப்புடன், பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். நந்தினியிடம் வெறுப்பை உமிழும்போதும் ஆகட்டும், தன் குடும்பத்திற்காக அன்பைக் கொட்டும் போது ஆகட்டும், குந்தவையாகவே பார்ப்பவர்களை உணர வைக்கிறார் த்ரிஷா.
அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி)
‘தன்னை வெறுப்பவர்களைக்கூட நேரில் பார்க்கும் போது கவரும் வகையில்’ வசீகரிக்கக்கூடிய முகக்கட்டுடன் இருப்பவர் அருள்மொழி வர்மன் என நாவலில் குறிப்பிடுகிறார் கல்கி. அதோடு கதையின் நாயகனுக்கே உரிய உடற்கட்டும், இளவரசனுக்கு உரிய வீரமும் மிக்கவர்.
பொன்னியின் செல்வன் படத்தில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் ஜெயம்ரவி. கல்கி வர்ணித்த வார்த்தைகள் ஒன்றுகூட தப்பிவிடாத படி, கச்சிதமாக இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் பொருந்தியிருக்கிறார்.
ஆதித்த கரிகால சோழன் (விக்ரம்)
ஆக்ரோசமான வீரனாக நிஜ வரலாற்றிலும், பொன்னியின் செல்வன் நாயகனிலும் குறிப்பிடப்படுபவர் ஆதித்த கரிகால சோழன். நிஜ வரலாற்றில் இவருக்கு நந்தினி என்ற காதலி இருப்பதாக ஆதாரம் இல்லை. பொன்னியின் செல்வனில் கற்பனைக் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்ட நந்தினியை, இவர் உருகி உருகி காதலிப்பதாகக் காட்டப்படுகிறது.
போரில் வீரத்தையும், நந்தினியிடம் காதலையும் என இருவெவ்வேறு பரிணாமங்களில் அசர வைக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். படத்திற்குப் படம் வித்தியாசம் காட்டும் விக்ரம், இப்படத்திலும் ஆதித்த கரிகால சோழனை அப்படியே உருவகப்படுத்தியிருக்கிறார்.
பூங்குழலி (ஐஸ்வரிய லட்சுமி)
தைரியத்திற்குப் பேர் போன பெண்ணாக நாவலில் வருபவர் பூங்குழலி. நாவலில் இவருக்கு மட்டுமே அறிமுகப் பாடலைக் கொடுத்திருப்பார் கல்கி. பூங்குழலியின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிப்பது போல், அமைந்திருக்கும் அந்தப் பாடல் இப்படத்திலும் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்ய லட்சுமி நடித்திருக்கிறார். ஏக்கத்தையும், மனதை உருக்கும் பாடலையும், வீரத்தையும் ஒருசேரக் காட்டி அசத்தி இருக்கிறார் பூங்குழலி.
பழவேட்டரயர் சகோதரர்கள் (சரத்குமார், பார்த்திபன்)
வயோதிக்கத்தை தனது உடலில் காட்டாத அளவிற்கு கச்சிதமான உடலைப் பெற்ற வீரர்கள் சின்ன பழவேட்டரயரும், பெரிய பழவேட்டரயரும். படத்தில் இந்தக் கதாபாத்திரங்களில் முறையே பார்த்திபனும், சரத்குமாரும் நடித்துள்ளனர். அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகுடன், நடிப்பில் முதிர்ச்சியையும் காட்டி, தங்களுக்கு கொடுத்த வேடத்தை சிறப்பாகச் செய்துள்ளனர் இருவரும்.
வானதி (ஷோபிதா)
பயந்தாங்கொள்ளி கதாபாத்திரத்தில் இருந்து, மெல்ல மெல்ல தன் கதாபாத்திரத்தில் வீரத்தை வெளிக்காட்டுவது வானதியின் கதாபாத்திரம். குந்தவையின் தோழியாக, இறுதியில் அருள்மொழி வர்மனின் மனைவியாக என ஒவ்வொரு கட்டத்திலும் தன் கதாபாத்திரத்தில் வேறுபாட்டைக் கொண்டிருப்பவர் வானதி. இந்தக் கதாபாத்திரத்தில் ஷோபிதா நடித்துள்ளார். பயம், வீரம் என நடிப்பில் முதிர்ச்சியை வெளிக்காட்டி இருக்கிறார்.
ஆழ்வார்க்கடியான் நம்பி (ஜெயராம்)
வந்தியத்தேவனுக்கு இணையாக நாவல் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரம் தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. தலையில் குடுமி, கையில் கம்பு என நாவலில் கல்கி சித்தரித்தது மாதிரியே, அதே தோற்றத்தில் ஜெயராமை படத்தில் உருவகப்படுத்தியிருக்கிறார் மணிரத்னம். சுவாரஸ்யமான கதாபாத்திரம்
பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களில் மேற்கூறியவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரிதான். இவர்களைத் தவிர செம்பியன்மாதேவி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், சுந்தர சோழ சக்கரவர்த்தி, ராக்கம்மாள், ஊமைராணி, கந்தமாறன், பார்த்திபேந்திர பல்லவன், மணிமேகலை, சம்புவரயர், பெரியவேளார்பூதி விக்கிரமகேசரி, மலையமான் மிளாடுடையார், ரவிதாசன் என ஏகப்பட்ட முக்கியமான கதாபாத்திரங்கள் நாவலில் உண்டு. அவை ஒவ்வொன்றிற்கும் ஏற்றார் போல் உடற்கட்டிலும் சரி, முகச்சாயலிலும் சரி ஏறக்குறைய சரியான கதாபாத்திரங்களையே தேர்வு செய்திருக்கிறார் மணிரத்னம்.
எனவே, நாவலைப் படித்த போது, கதை நடந்த காலத்திற்கே வாசகர்களை கல்கி அழைத்துச் சென்றதுபோல், மணிரத்னமும் தனது கதாபாத்திரத் தேர்வாலும், காட்சிகளாலும் அதே உணர்வை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
PS-1 Review: 'பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘பாகுபலி’ -யை எதிர்ப்பார்க்காதீர்கள்!