வறுமைச் சூழல்; நடைபாதையில் தேர்வு - வியக்க வைக்கும் கூலித்தொழிலாளியின் மகன்!
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து பி.ஏ தமிழ் மூன்று வருட பட்ட படிப்பை முடித்துள்ளார்.
படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், பல்வேறு தடைகளைத்தாண்டி எப்படியாவது டாக்டரேட் பட்டம் பெற வேண்டும் என்று உழைத்துக்கொண்டிருக்கிறார் ரமேஷ். பொருளாதாரத் தடைகளை தகர்த்தெறியும் அவர் குறித்து பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதிக்கு அருகே இருக்கிறது விழுந்தயம்பலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரிசந்திரன் - தங்கம்மாள் தம்பதி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு, 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகன்கள் இருவருக்கும், மகள்களுக்கும் திருமணமான நிலையில், கடைக்குட்டியான ரமேஷை வறுமை காரணமாக 12ம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை.
பெற்றோர்கள் வயதானவர்கள் வேறு. 12வகுப்பு தேர்ச்சி பெற்ற ரமேஷூக்கு தமிழ்மொழி மீது தீராக்காதல். எப்படியாவது பி.ஏ. தமிழ் பட்டபடிப்பை படிக்க வேண்டும், என்று தனது பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் உதவி கேட்டுள்ளார். யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இதன்காரணமாக, அவரே சிறு சிறு வேலைகள் செய்தும், நண்பர்களிடம் பண உதவி பெற்றும். நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து பி.ஏ தமிழ் மூன்று வருட பட்ட படிப்பை முடித்துள்ளார். அடுத்ததாக எம்.ஏ படிக்க விரும்பிய அவரிடம் போதிய பொருளாதார வசதி இல்லை. அதனால் மீண்டும் வேலைக்கேச் சென்றுள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் கண்டுகொள்ளவில்லை. கடின உழைப்பால், கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக்கொண்டு, எம்.ஏ படிப்பை அதே கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் முதலாமாண்டு எம்.ஏ முதல் செமஸ்டரில் கவிதை மற்றும் நாடகம் என்ற பாடப் பிரிவில் தோல்வி அடைந்துள்ளார்.
எப்படியாவது அந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்ட ரமேஷூக்கு கொரோனா முட்டைக்கட்டை போட்டது. இப்படியான சூழலில் தற்போது அரியர் தேர்வுகளை ஆன்லைனில் எழுதலாம் என கல்லூரிகள் அறிவித்தது.
அதற்கான தேதிகள் வெளியான நிலையில், ரமேஷ் தேர்வுக் கட்டணத்தை செலுத்தி தேர்வுக்கு ஆயத்தமாகியுள்ளார். தொடர்ந்து பொருளாதாரம் வாட்ட, ஆன்லைன் தேர்வுக்கு ஸ்மார்ட்போன் இல்லாமல் அவதியடைந்துள்ளார். ஆன்லைன் தேர்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தக்கலைக்கு வந்த ரமேஷ், மதியம் முட்டைக்காடு பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன், கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்ததோடு, தக்கலை பேருந்த நிலைய நடைபாதையில் அமர்ந்து நண்பர் செல்போன் உதவியுடன் ஆன்லைன் தேர்வை பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்தார்.
அவரைப்பார்த்த பொதுமக்கள், அவரிடம் கேட்டபோது,
“ஏழ்மையான குடும்பத்தில் இளைய மகனாக பிறந்த தன்னை படிக்கவைக்க யாருமில்லை. தமிழில் டாக்டரேட் பட்டம் பெறுவதே தனது நோக்கம்,” எனத் தெரிவித்தார்.
வறுமை வாட்டியபோதும், பேருந்து நிலையமாக இருந்தாலும், கல்விக்காக தொடர்ந்து உழைத்து வரும் ரமேஷை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
தொகுப்பு: மலையரசு