தன் தேர்தல் கணிப்பு மெய்யானதால் டிவி நேரலையில் கதறி அழுத தேர்தல் ஆய்வாளர்!
தன்னுடைய நியூஸ் ஏஜென்சி கணித்த விகிதத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது என்பதை அறிந்ததும், ஆக்ஸிஸ் மை இண்டியாவின் சேர்மன் ப்ரதீப் குப்தா, பெரிய நிம்மதியில் உடைந்து அழுதார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்ட ‘ஆக்ஸிஸ் மை இந்தியா’ நிறுவனத்தின் சேர்மேனும், மேனேஜிங் டைரக்டருமான ப்ரதீப் குப்தா டிவி நேரலையில் திடீரென்று மனமுடைந்து கதறி அழத்தொடங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், எதற்காக?
இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி நாட்டையே பரபரப்பாக்கி உள்ள நிலையில், தேர்தலுக்கு பின்பு பல நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளிலே பாஜக கூட்டணி வெற்றி பெறும் எனும் தங்கள் கணிப்பை வெளியிட்டிருந்தன.
சமூக வலைதளங்கள் முழுக்க ‘கருத்து கணிப்புகள்’ நடத்திய நிறுவனங்களை விமர்சிக்க தொடங்கினர் நெட்டிசன்கள். அதில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியது ஆக்ஸிஸ் மை இந்தியா ( Axis my India) ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கருத்துகணிப்பு.
இந்தியா டுடே ஆங்கில செய்தி சேனலுடன் இணைந்து ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் ‘பாஜக கூட்டணிக்கு 354 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 92 இடங்களும், பிறருக்கு 96 இடங்களுக்கு கிடைக்கும்’ என்று கணித்திருந்தது.
இந்த கணிப்பில் பிழை இருந்ததாகக்கூறி, ஆக்ஸிஸ் மை இந்தியாவை விமர்சித்தனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் விவாதப் போட்டியில் பங்கேற்றார் ஆக்ஸிஸ் மை இண்டியாவின் சேர்மேனும், மேனேஜிங் டைரக்டருமான ப்ரதீப் குப்தா.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது, தங்கள் கணிப்பின்படியே பாஜக முன்னிலை பெற்றிருக்கிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டதும், ப்ரதீப் குப்தா உடைந்து அழத் தொடங்கினார். விவாதத்தை நடத்திக் கொண்டிருந்த தொகுப்பாளர் ராஹுல் கன்வால்,
“கடந்த சில தினங்களில் எங்களை கருணையே இல்லாமல் விமர்சித்திருக்கிறார்கள், கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால், எங்கள் வேலைக்கு பலன் கிடைத்துவிட்டது” என்று கூறினார்.
தகவல் உதவி : scroll.in