'காற்றிலிருந்து தண்ணீர்’ - புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் செயல்படும் ‘உறவு லேப்ஸ்’
பெங்களூருவைச் சேர்ந்த `உறவு லேப்ஸ்’ ஸ்டார்ட் அப் சோலார், கழிவு வெப்பம், பயோமாஸ் என புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் காற்றில் இருந்து தண்ணீர் உருவாக்குகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் 'உறவு லேப்ஸ்’ (Uravu Labs). இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து நீர் உருவாக்கி வருகிறது.
“உறவு லேப்ஸ் முதல் முறையாக நூறு சதவீத புதுப்பிக்கத்தக்க தண்ணீர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதிக செலவில்லாத இந்தத் தொழில்நுட்பம் பல்வேறு பயன்பாடுகளுக்குப் பொருத்தமானது,” என்கிறார் உறவு லேப்ஸ் இணை நிறுவனர் பிரதீப் கார்க்.
பிரதீப், ஸ்வப்னில் ஸ்ரீவாஸ்தவ், வெங்கடேஷ் ஆர், கோவிந்த பாலாஜி ஆகியோர் இணைந்து 2019-ம் ஆண்டு 'உறவு லேப்ஸ்’ நிறுவியுள்ளனர்.
100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க இந்தத் தொழில்நுட்பம் வளிமண்டல ஈரப்பதத்தையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும் மட்டுமே பயன்படுத்தி குடிநீர் தயாரிக்கிறது.
“காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்க, புதுப்பிக்க ஆற்றலைப் பயன்படுத்தினால் மட்டுமே 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்கது என்று சொல்லமுடியும். உறவு லேப்ஸ் தொழில்நுட்பம் ஈரத்தை உறிஞ்சும்தன்மை கொண்ட டெசிகண்ட் பயன்படுத்துகிறது. உறிஞ்சுதல், வெளியேற்றுதல் ஆகிய இரண்டு நிலைகளை உள்ளடக்கி செயல்படுகிறது,” என பிரதீப் விவரிக்கிறார்.
இந்த இரண்டும் இணைந்து ஒரு சுழற்சியாக இயங்குகிறது. அதாவது,
- உறிஞ்சுதல் (Adsorption) – இதில் சுற்றுப்புற காற்றில் இருக்கும் ஈரப்பதம் சிஸ்டத்தின் உள்ளிழுக்கப்பட்டு உறிஞ்சுதன்மை கொண்ட பொருளின் வழியாக செல்லும். ஈரப்பதத்தை உறிஞ்சும் இந்த செயல்முறை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும்.
- வெளியேற்றப்படுதல் (Desorption) – ஏற்கெனவே உறிஞ்சப்பட்ட ஈரப்பதம் தெர்மல் வெப்பம் மூலம் வெளியேற்றப்படும். இந்த ஈரப்பதம் திரவமாக்கப்பட்டு சுத்தமான, 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க தண்ணீர் உருவாகிறது.
உறவு நிறுவனத்தின் இந்த சிஸ்டம் 24X7 சுயற்சி முறையில் இயங்கிக்கொண்டே இருக்கும்.
“ஈரப்பதம் வெறும் 30 சதவீதம் இருந்தாலும்கூட அவற்றை உறிஞ்சும் வகையில் இந்தத் தீர்வை வடிவமைத்திருக்கிறோம்,” என்கிறார் பிரதீப்.
வெவ்வேறு திறன்களில் தயாரிப்பை உருவாக்க உறவு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெவ்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ப ஒரு நாளைக்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு (Litre per day – LPD) 20 லிட்டர், 100 லிட்டர், 2000 லிட்டர் என தயாரிக்கப்படும்.
20 முதல் 100 லிட்டர் வரை திறன் கொண்டவை வீடுகளுக்கும் அலுவலகங்கள், பள்ளிகள், ஹோட்டல்கள் போன்ற வணிக ரீதியான இடங்களுக்கும் பயன்படும். 2000 லிட்டர் திறன் கொண்டவை பானங்கள் துறையில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நாட்கள்
ஸ்வப்னில், வெங்கடேஷ் இருவரும் காலிகட் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பட்டதாரி. தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையை சந்தித்த அனுபவம் இவர்களுக்கு இருந்தது. எனவே இதற்குத் தீர்வுகாண முடிவு செய்தனர்.
2016-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்ததும், காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் கான்செப்ட் குறித்து இருவரும் ஆய்வு செய்தனர். முதலில் மின்சாரம் சார்ந்த வாட்டர் ஜெனரேட்டரை உருவாக்கினார்கள். ஆனால், அது புதுப்பிக்கத்தக்கது அல்ல என்பதால் நூறு சதவீதம் புதுப்பிக்கத்தக்க தீர்விற்கு மாறத் தீர்மானித்தனர்.
பின்னர், 2019-ம் ஆண்டு ஸ்வப்னில் பிரதீப் கார்கை சந்தித்தார். பிரதீப் கார்க் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் பிஎச்டி பட்டதாரி. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ரிசர்ச் ஃபெலோவாக இருந்தார்.
புதிய தொழில்நுட்பங்களில் பிரதீப்பிற்கு இருந்த அனுபவம் ஆற்றல் பிரிவில் உதவியது. அனைவரும் ஒன்றிணைந்து புதுப்பிக்கத்தக்க தண்ணீர் தொழில்நுட்பம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பொறியியல் சார்ந்த பணிகள் முடிக்கப்படவேண்டியிருந்தது. இந்தக் குறையை பாலாஜி சரியாகத் தீர்த்துவைத்தார்.
தற்போது உறவு லேப்ஸ் வெவ்வேறு பின்னணி கொண்ட 15 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.
“ஆரம்பத்தில் நிதியுதவி தேவைப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது கிடைத்த நல்கை தொகை உதவியாக இருந்தது. அதுமட்டுமின்றி Water Abundance XPrize உலகளாவிய ஐந்து போட்டியாளர்கள் பட்டியலில் நாங்களும் இடம்பெற்றிருந்தோம்,” என்கிறார் பிரதீப்.
தனித்துவமான அம்சம்
உறவு லேப்ஸ் நூறு சதவீதம் புதுப்பிக்கத்தக்க தண்ணீர் உருவாக்குவது அதன் முக்கிய சிறப்பம்சம்.
எத்தனையோ நிறுவனங்கள் காற்றில் இருந்து தண்ணீர் தயாரித்தாலும், இவற்றில் பெரும்பாலானவை ஏர் கண்டிஷனிங் விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகின்றன.
“பானங்கள் துறை புதுப்பிக்கத்தக்க செயல்பாடுகளுக்கு மாற எந்த ஒரு நிறுவனமும் உதவுவதில்லை,” என்கிறார் பிரதீப்.
உறவு லேப்ஸ் சூரிய வெப்பம் தவிர கழிவு வெப்பம், பயோமாஸ் போன்ற வெப்ப ஆதாரங்கள் சார்ந்து செயல்படுகிறது. போட்டியாளர்கள் யாரும் இதில் கவனம் செலுத்தவில்லை.
நிதி மற்றும் வருவாய்
இந்த ஸ்டார்ட் அப் ப்ரீ-சீட் நிதி திரட்டியுள்ளது. மூன்று பைலட் ஆர்டர்களுக்கு ஏற்கெனவே கட்டணம் செலுத்தப்பட்டிருப்பதால் வருவாய் ஈட்டுவதற்கு முந்தைய நிலையில் இருக்கிறது எனலாம். இந்த நிதிச்சுற்று மூலம் திரட்டப்பட்ட நிதி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்வடிவத்திற்கும் பயன்படுத்தப்படும்.
இந்தத் தொழில்நுட்பத்தை வணிக ரீதியாகக் கொண்டு செல்ல கூடுதல் நிதி திரட்டப்படும்.
ஸ்டார்ட் அப் வருவாய் ஈட்டுவதற்காக இரண்டு சாத்தியங்களை நிறுவனர்கள் விவரித்தனர்:
- வாடிக்கையாளர் ’உறவு’ இயந்திரத்தை வாங்கி, கூடுதல் செலவின்றி தண்ணீர் பெறலாம், அல்லது,
- உறவு நிறுவனம் இயந்திரத்தை நிறுவி இறுதி வாடிக்கையாளருக்கு புதுப்பிக்கத்தக்க தண்ணீரை சேவை அடிப்படையில் வழங்கலாம்.
வருங்காலத் திட்டங்கள்
வரும் நாட்களில் சந்தை வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதீப் தெரிவிக்கிறார். பானங்கள் பிரிவில் செயல்படும் நிறுவனங்களின் குறிப்பிட்ட தேவைக்கேற்ப பிரத்யேகமாக சேவையளிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பிரதீப் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் அதேசமயம் பானங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவுகளில் சாத்தியமுள்ள வாடிக்கையர்களுடன் தொடர்பில் இருந்து, இந்தப் புதுமையான தொழில்நுட்பத்தை விளக்கவும் விரும்புகின்றனர்.
கிராமப்புறங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடுகளில் இணைந்திருக்கவும் ஜல் சக்தி, MNRE போன்ற அரசு ஏஜென்சிக்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: சுஜாதா சங்வன் | தமிழில்: ஸ்ரீவித்யா