அலுவலக அரசியலை சமாளிப்பது எப்படி? - ஊழியர்களை நிர்வகிக்க ‘புது’ மேலாளர்களுக்கு டிப்ஸ்!
பதவி உயர்வு மூலம் சக ஊழியர்களுக்கு மேலதிகாரி ஆவோருக்கும், ஒரு நிறுவனத்தில் முதல் முறையாக பணியாட்களை நிர்வகிக்கும் வாய்ப்பு கிடைத்தோருக்கும் வெற்றிகரமாக இயங்க உதவும் வழிகாட்டுதல்கள் இவை.
ஊதிய உயர்வு என்றால் நம் அனைவருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால், ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு என்றால்? நம்மில் பலருக்கும் மகிழ்ச்சி என்றாலும், சிலருக்கு கலக்கம் பீறிடலாம். ஏனெனில், இதுவரை சக ஊழியராக பணிபுரிந்துவிட்டு, இனி சக ஊழியர்களிடம் வேலை வாங்கும் உயரதிகாரியாக நமக்கு சாத்தியமா என்ற சந்தேகம் காரணமாக இருக்கலாம்.
நம் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த உயர் பதவிகள் என்பது நமக்கு நிறுவனம் தரும் பெரிய அங்கீகாரம். அதில் எவ்வித தயக்கமும் காட்டக் கூடாது. சக ஊழியர்களை நம்மால் வழிநடத்த முடியும் என்று நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.
நிர்வாகம் சாராத பணிகளில் வலுவான செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இதுபோல் பதவி உயர்வுகள் வழங்கப்படுவது சற்றே முரண்பாடானதுதான். அதாவது, நிர்வாகமல்லாத பணிகளில் திறமையை நிரூபித்ததற்குப் பரிசாக பெறும் பதவி உயர்வு, ஆட்களை நிர்வகிக்கும் பொறுப்பாக அமையும் என்பது எல்லா நிறுவனங்களிலும் பணியிடங்களிலும் நிகழும் முரண்பாடான ஒரு விஷயமே.
உங்கள் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத் திறன்களில் நீங்கள் இதுவரை வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்களை நிர்வகிப்பது என்பது வேறுபட்ட திறன்களை உங்களிடமிருந்து எதிர்நோக்குவதாகும்.
திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். உங்கள் டீமின் செயல்திறனைக் கண்காணிக்க வேண்டும். நீங்கள் மேற்பார்வையிடும் பணியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். பணியாளர்களிடையே மோதலை தவிர்ப்பதில் உங்கள் மூளையைப் பயன்படுத்த வேண்டும். இதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்கவும் நேரம் ஒதுக்கவும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தனிநபர்களுக்கு இடையேயான உங்களது உறவு என்பது தவறாக சாஃப்ட் ஸ்கில்ஸ் என்று சொல்லக் கூடிய ‘மென்மையான’ திறன்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. ஆனால், அவை வளர்தெடுக்கக் கடினமான திறமைகளே. எனவே, இது தொடர்பாக சிலவற்றை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அவை:
1. அதிகாரமும் அலுவலக அரசியலும்
நேற்று வரை உங்களின் சகாவாக இருந்தவர்கள் உங்கள் பதவி உயர்வுக்குப் பின்னர் உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களாக ஆகும்போது நிர்வாகம் எதிர்பாராத கடினப்பாடுகளை அளிக்கும். உங்கள் நண்பர்களாக இருக்கும் அல்லது உங்களை விட மிகவும் வயதான பணியாளர்களை நிர்வகிப்பது குறிப்பாக சவாலாக இருக்கலாம்.
மற்றவர்களை மேற்பார்வை செய்து ஒழுங்கமைக்கும்போது கூட அவர்களுடன் சுமுகமான வேலை உறவுகளைக் கொண்டிருப்பது சாத்தியமாகும். ஆனால், நீங்கள் உங்கள் முன்னுரிமைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். மோதலைச் சமாளிக்க வேண்டும். அவர்களுடன் கடினமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டிவரும்.
ஆரம்ப கால மேலாளர்களிடையே ஒரு பொதுவான தவறு நிகழும். அதாவது, தனக்குக் கிடைத்த முறையான அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்றவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகும். ஆனால், ஒரு பழைய பணியாளராக, புதிய மேல் பதவிப் பொறுப்பில் அமர்ந்து மற்றவர்களை கையாள வேண்டும் என்பது பதவி கொடுக்கும் அதிகாரத்தினால் மட்டுமே மற்றவர்களை நம் இலக்கு, குறிக்கோள் நோக்கி கொண்டு சேர்க்க உதவாது.
திறமையான மேலாளர்கள் ‘அலுவலக அரசியல்’ என்பதை உருவாக்கிக் காக்கும் அதிகாரத்தின் முறைசாரா அம்சங்களை அலசி ஆராய்ந்து அலுவலகத்தில் முரண்பட்ட நலன்கள் மற்றும் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதையும், எப்படி சிலர் அதை பாதுகாத்துத் தக்கவைத்துக் கொள்கின்றனர் என்பதையும் கச்சிதமாக அறிந்து கொள்வார்கள்.
அலுவலக அரசியல் ஒரு மோசமான செல்வாக்கையும் தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகும். ஆனால், பணியாளர்களை நிர்வகிக்கும்போது வலைப்பின்னலான தொடர்புகளை உருவாக்குதல், உறவுகளை வளர்த்தல் மற்றும் மற்றவர்கள் மீது தாக்கம் செலுத்தும் திறன் முக்கியமானது என்பதை உணர வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு பெரிய முடிவை முறையாக அறிவிப்பதற்கு முன், பாதிக்கப்பட்ட அல்லது அந்த முடிவை பாதிக்கக் கூடியவர்களுடன் சாதாரணமாக, சகஜமாக உரையாடல்களை நடத்துவது முக்கியம் என்பதை பெரும்பாலான மேலாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். இது கொள்கையற்ற சூழ்ச்சி அல்ல, மாறாக இது ஒரு ஹோம்வொர்க் ஆகும்.
முதல்முறையாக மேலாளராகிறீர்கள் என்றால், உங்களுக்குக் கீழ் உள்ளவர்களையும், உங்களை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்தோர்களையும் நிர்வகிக்க வேண்டி வரும். எடுத்துக்காட்டாக, உங்கள் குழுவை உத்வேகத்துடன் வைத்திருக்கும்போது, மேலிருந்து வரும் கடினமான செய்திகளையும் அவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டியிருக்கும்போது அல்லது வடிகட்ட வேண்டியிருக்கும்போது அரசியல் ரீதியாக பதற்றமான சூழ்நிலைகள் ஏற்படலாம்.
அரசியல் செய்வது சில வேளைகளில் உங்களுக்கு வெறுப்பூட்டுவதாக தோன்றினாலும், நல்ல செய்தி என்னவென்றால், மேலாளர்கள் காலப்போக்கில் அனுபவம் பெற்று அரசியல் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதுதான்.
2. அணியின் மீது கவனம்!
ஒரு மேலாளராக இருப்பது என்பது உங்கள் ஈகோவை பாதுகாக்கும் விஷயம் அல்ல. இது முடிவுகளை வழங்குவதற்கும் தொழில் ரீதியாக மேம்படுத்துவதற்கும் மற்றவர்களுக்கு சேவை செய்வது மற்றும் அதிகாரமளிப்பது பற்றியதாகும். உங்கள் டீம் எத்தனை திறமையுடன் பணியாற்றி தரமான பணியை செய்யும்போதுதான் உங்கள் செயல்திறன் என்னவென்பது வெளிப்படும். உங்கள் டீமில் உள்ளவர்களின் தற்போதைய அறிவுநிலையையும் தாண்டும் பணியை நீங்கள் அளிக்கும்போது உங்களால் அவர்களை நம்பி அந்தப் பணியை ஒப்படைக்க முடிவதாக இருக்க வேண்டும்.
பணியாளர்களுக்கும் உங்களுக்குமிடையேயான ‘நம்பகம்’ என்பது வெளிப்படைத் தன்மையிலும் வழக்கமான உரையாடல்களில் அந்தக் குறிப்பிட்ட மற்றும் செயல்படக்கூடிய இருவழி ஃபீட்பேக் (feedback) ஆகியவற்றினால் மட்டுமே சாத்தியமாகும். மாறாக, முறையான பணி மதிப்பீடுகளின் மூலம் சாத்தியமாகாது. அதாவது, முறையான அப்ரைசல்கள் மூலம் சாத்தியமாகாது.
நீங்கள் ஒரு அணியை நிர்வகிக்கிறீர்கள் என்றால், அணி என்பது அவற்றின் பகுதிகளின் தொகுப்பு கிடையாது. இதைவிட கூடுதலான விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஏனெனில், அணி உறுப்பினர்களுக்கிடையே பகிரப்பட்ட இலக்குகள், மதிப்புகள், அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகள் இருக்கின்றன. அதுபோலவே, சில பல நிறுவனங்களில் பணியாற்று நெறிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றை நாம் சில நேரங்களில் கேள்வியின்றி ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவற்றையும் சில வேளைகளில் கேள்விக் கேட்க நேரிடும்.
ஒருவர் தன் திறமைக்கேற்ப பணியாற்றுவதில்லை; குறைவாகவே பணியாற்றுகிறார் என்றால், அது ஒரு தனிநபரின் குறையாகக் காண வேண்டியதில்லை. அதாவது, ‘கடினமாக உழைப்பதில்லை’ என்றோ, ‘அந்தப் பணிக்குத் தேவையானது அவரிடம் இல்லை’ என்றோ முடிவு எடுக்கக் கூடாது.
ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் முடிவெடுப்பார்கள். இந்த அணுகுமுறையை விட பயனுள்ளது என்னவெனில், ஒரு பரந்துபட்ட சூழ்நிலையில் மேலாளராக அந்த நிறுவனத்தில் நீங்கள் என்ன பங்காற்றுகிறீர்கள், நிறுவனத்திற்கென்ற பண்பாட்டில், நிகழ்முறையில் உங்களது பங்கென்ன என்பது குறித்த கேள்விகளை கேட்பதாகும்.
- நான், என் எதிர்பார்ப்புகளைத் தெளிவாக தெரிவிக்கிறேனா?
- நான் மேற்பார்வையிடும் நபர்களுக்கு நல்ல கருத்துகளை வழங்குகிறேனா?
- ஏன் ஊக்கம் இல்லாமல் இருக்க நேரிட்டது?
- அவர் சோர்வடைவதற்கும் களைப்படைவதற்கும் மேலாளரான என் பங்களிப்பு என்ன?
இப்படிப்பட்ட கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.
3. பன்முகத்தன்மையும் ஊக்குவித்தலும்
நாம் நிர்வகிப்பது ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பணியாளர்களை மட்டுமல்ல, அந்த பணியாளர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். பாலின வேறுபாடுகள், சாதி, மத வேறுபாடுகள், ஏழ்மைப் பின்னணியிலிருந்து வந்தவர்கள், சற்றே செல்வப் பின்னணியில் வந்தவர்கள் போன்ற வர்க்க பேதங்கள், வயது போன்ற வித்தியாசங்கள் உள்ளன.
எனவே, இந்த வேறுபாடுகளின் நுணுக்கங்களையும் மனநிலைகளையும் சமூக நிலைகளையும் புரிந்து கொள்ளாமல், ‘நாங்கள் ஒவ்வொருவரையும் மதிப்புடையவராகக் கருதுகிறோம்’ என்று பொத்தாம் பொதுவாகக் கூறுவது எடுபடாமல் போகும். அமைப்பு ரீதியான சார்புநிலைகள் நம் பணியிடங்களின் கட்டமைப்பில் சிக்கலான முறையில் பின்னப்பட்டுள்ளதையும் பார்க்கலாம்.
ஆய்வுகள் தெரிவிப்பது என்னவெனில், ஒப்பிடத்தக்க செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த பெண்கள், சமூக படிநிலையில் கீழிருந்து வருபவர்கள், சிறுபான்மையினர் ஆகிய விளிம்பு நிலை ஊழியர்கள் மேலதிகமாக திறமையைக் காட்ட வேண்டியுள்ளதோடு, மற்றவர்களை விட அதிகமாகவும் உழைக்க வேண்டியுள்ளது என்பதுதான் நடைமுறையாக இருந்து வருகின்றது.
பல நிறுவனங்களில் பெண்கள், சிறுபான்மையினர், சமூகத்தின் படிநிலையில் கீழிருந்து வருபவர்கள் தங்கள் பணிக்கேற்ற உயர் மதிப்புகளைப் பெறுவதில்லை. டீமில் உள்ள உறுப்பினர்களை சம அளவில் நம்பவில்லை எனில், அவர்களிடமிருந்து சிறப்பான வேலையைப் பெறுவது கடினம். எனவே, அனைவரையும் நம்பி, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்கும் அதிகாரம் வழங்குதல் அவசியம்.
அதேவேளையில், பெண்கள், இன ரீதியான சிறுபான்மையினர், விளிம்பு நிலையிலிருந்து பணிக்கு வந்தவர்கள் மேலாளராகப் பொறுப்பு வகிக்கும்போது உங்கள் அடையாளம் ஒரு மேலாளராக உங்கள் அனுபவங்களை எப்படி வடிவமைக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், இன்னமும் கூட மேம்பட்ட சமூகங்களிலும் தலைமைக்கான பணியில் ஆண்களையே நம்புங்கள் என்ற நிலையே இருந்து வருகின்றது. மேனேஜர் என்றால் நம் எண்ணங்களை வடிவமைப்பதெல்லாம் ஆண் தன்மைக்குரியவனவாகவே உள்ளன. ஆகவே நிறுவனத்திலும் சமத்துவம் முக்கியம்.
4. தலைவலி பிடித்த வேலைதான்!
கூடுதல் பொறுப்புகளும் மற்றவர்களை நிர்வகிப்பதும் தலைவலி பிடித்த, மன அழுத்தம் தரும் வேலைதான். ஆகவே முறையான நிர்வாக பயிற்சி முறையும் தேவைப்படலாம். இதற்கு முன்னால் உங்கள் இடத்தில் மேலாளராக இருந்தவர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்பதைக் கேட்டறிவதும் உதவும். இந்த நிர்வாகப் பொறுப்பு எனும் சாலையில் யாரும் தனித்துப் பயணித்ததில்லை. நீங்களும் அப்படிப் பயணிக்க முடியாது. எனவே, மேலாளராக வெற்றி பெற வேண்டுமெனில் பரந்துபட்ட பலவகை மேம்பட்ட உறவுநிலைகளை வளர்த்தெடுத்துக் கொள்வது அவசியம்.
உங்கள் மதிப்பை புரியவைப்பீர்! - சம்பள உயர்வுக்காக ‘பேச’ பெண்களுக்கு 5 முக்கிய டிப்ஸ்!