உங்கள் மதிப்பை புரியவைப்பீர்! - சம்பள உயர்வுக்காக ‘பேச’ பெண்களுக்கு 5 முக்கிய டிப்ஸ்!
பெண்கள் எப்படி தங்கள் ஊதியத்தை தாங்களே நிர்ணயித்து, அதை நிர்வாகத்திடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்க முடியும்? - இதோ ஆய்வுபூர்வமாக நிபுணர்கள் பரிந்துரைக்கும் 5 டிப்ஸ்.
மார்ச் 14-ம் தேதி ‘சரிசம சம்பள நாள்’ ஆக அனுசரிக்கப்படும் தினம். இதன் முக்கியத்துவம் யாதெனில், பெண்கள் பல துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முன்னேறிக் கொண்டிருக்கின்றனர், முன்னேற்றம் அடைந்துவிட்டனர் என்று வெளித் தோற்றத்திற்கு தெரிந்தாலும், உண்மையில் பாலின ரீதியாக பாகுபாடு இன்னும் இருந்து வருகின்றது. குறிப்பாக, ஆண் ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் பெண் ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை.
இது ஏதோ இந்தியாவில் மட்டும் இருக்கும் பாகுபாடு, வேறுபாடு அல்ல. அமெரிக்காவிலும் இதே நிலைதான், உலகெங்கிலும் இதே நிலைதான். ஒரே துறையில் பணியாற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சம்பளப் பாகுபாடு உள்ளது. அதேபோல் அனைத்துத் துறைகளிலுமே ஆண்/பெண் சம்பளப் பாகுபாடு பெரிய அளவில் இருந்து வருவதாக இது தொடர்பான ஆய்வுகள் பல வெளியாகியுள்ளன.
சமீபத்தில் வெளியான ‘மெர்சர்’ ஆய்வுகளின்படி 2023 பிப்ரவரி மாதம் வரை இந்தியாவில் ஊதியங்களில் ஆண்/பெண் பாலின வேறுபாடு 1.8%. தொழில் துறை மட்டத்தில் இடைவெளி 1.4% என்றும் உயர் பதவிகளில், உதாரணமாக எக்ஸிகியூட்டிவ் மட்டத்தில் ஆண்/பெண் ஊதிய வேறுபாடு 2.5% ஆக அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சம்பளத்தில் பாலின வேறுபாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தாலும், இன்னும் சில தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
இருப்பதிலேயே அதிக பணம் புழங்கும் சினிமா துறையை எடுத்துக் கொள்வோம். சம்பள நிர்ணயத்தில் ஆண்/பெண் பாகுபாடு வேறு துறைகளை விட சினிமா துறையில் அதிகம். நடிகர்கள் சம்பளத்திற்கும் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்கள் சம்பளத்திற்கும் சம்பந்தமே இருக்காது என்பது கண்கூடு. இத்தனைக்கும் நடிகைகள் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படும் சமரசங்கள் ஒரு தனி சப்ஜெக்ட், இதுபற்றி பலரும் பேசியும் எழுதியும் வந்தாலும் இன்னும் மாறியபாடில்லை. சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் இப்படி கூறுகிறார்:
“என்னுடைய 22 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக ஆண் நடிகருக்கு இணையான சம்பளத்தை பெற்றிருக்கிறேன்.”
திரைத்துறையில் நடிகைகளின் நிலையை சம்பளத்தைப் பொறுத்தவரை என்னவென்பதை போட்டு உடைத்துள்ள அவர், மேலும் அந்தப் பேட்டியில் கூறும்போது, “நான் இதே அளவிலான உழைப்பையும் நேரத்தையும் மற்ற படங்களுக்கு கொடுக்கிறேன். ஆனால், குறைவான ஊதியமே கிடைக்கிறது.” என்கிறார். இவர் மட்டுமல்ல எல்லா நடிகைகளின் நிலைமையும் இதுதான்.
நடிகைகளிடன் அதிக சமரசம் கோரும் சினிமா துறையிலேயே சம்பள வித்தியாசத்தில் பாலினப் பாகுபாடு இருக்கின்றது எனும்போது பிற துறைகளை கேட்கவே வேண்டாம்.
இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு உரிய, தங்கள் உழைப்புக்கும், திறமைக்கும் தகுதியுடைய சம்பளத்தை எப்படிக் கேட்டுப் பெறுவது, எப்படி உரிமை கோருவது என்பது பற்றி சில பல ஆலோசனைகள் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஏதோ ஆண்கள் தங்கள் திறமைகளைப் பறைசாற்றி தங்களுக்கான அதிக ஊதியத்தை கேட்டுப் பெறுகின்றனர் என்றும், பெண்கள் யாரும் கொடுத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள் என்று அர்த்தமல்ல. பெண்களும் தங்கள் சம்பள உயர்வை, சம்பளத்தை உயர்த்தும் கோரிக்கையை பேச்சு வார்த்தை மூலம் கோரிக்கையாக முன்வைத்தும் வரத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், ஆய்வுகள் என்ன கூறுகின்றன என்றால், பெண்களது சம்பள உயர்வு அல்லது அதிக சம்பள கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவிமடுக்கின்றதா என்றால், ‘இல்லை’ என்பதுதான் கசப்பான உண்மை. நிர்வாகங்களோ ‘பெண்கள் அடிக்கடி வேலையை ராஜினாமா செய்வதுதான் காரணம்’ என்கின்றனர். சில இடங்களில் தங்களை விட அதிக சம்பளம் வாங்கும் பெண்களுடன் சில ஆண்கள் வேலை செய்யப் பிடிக்காமல் வெளியேறுவதும் நடக்கின்றது.
சரி! பெண்கள் எப்படி தங்கள் ஊதியத்தை தாங்களே நிர்ணயித்து, அதை நிர்வாகத்திடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்க முடியும்? - இதோ ஆய்வுபூர்வமாக நிபுணர்கள் தரும் 5 டிப்ஸ்:
1. சம்பள உயர்வு, அதிக சம்பளம் கேட்கும் முன் சிந்திக்க!
உங்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள் - சற்றே நிதானித்து ஓர் அடி பின்வாங்கி யோசியுங்கள். நீங்கள் கேட்கும் தொகை, நீங்கள் பார்க்கும் பெரிய வேலை அல்லது உங்களது வாழ்க்கை விருப்பங்களுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை சிந்தியுங்கள். நீங்கள் சம்பள அதிகரிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் தொடங்கலாம். ஆனால், நீங்கள் உண்மையில் விரும்புவது விரைவான பதவி உயர்வு பாதையாக இருந்தால், அதற்கேற்ப பேச்சு வார்த்தையை வடிவமையுங்கள்.
நீங்கள் தற்போது சம்பாதிப்பதை விட, அதிக சம்பளம் பெற வேண்டும் என்பதை விட தொழில்முறையில் வேறு முன்னேற்ற வாய்ப்புகள் செய்து கொண்டிருக்கும் வேலையில் உங்கள் பங்கு ஆகியவை சம்பள இடைவெளியை குறைக்க உதவலாம். எனவே, உங்கள் இலக்குகளை ஆராய்ந்து, சரியான பிரச்சினைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதில் கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. உங்கள் மதிப்பை சரியாகப் புரிய வையுங்கள்!
உங்கள் நோக்கமும் குறிக்கோளும் தெளிவாக இருக்கின்றது எனும்போது உங்கள் மதிப்பை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை ஆராயுங்கள். நீங்கள் கேட்பது அல்லது உங்கள் கோரிக்கையை நீங்கள் விளக்கும்போது ‘ஏன் இது உங்களுக்கு அவசியம்’ என்பதாக மட்டுமே அல்லாமல், ஏன் இது பணிக்கான அவசியம், வளர்ச்சிக்கான அவசியம் என்பதையும் விளக்கினால் நிர்வாக மேலாளர்களின் பார்வையில் நீங்கள் கேட்பது, அல்லது கோருவது அவருக்கு அவசியம் இதை உங்களுக்குச் செய்ய வேண்டும் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
உதாரணமாக, ஐடி துறையை ‘டெஸ்ட்டிங்’ பிரிவில் இருக்கிறீர்கள் என்றால், உங்களது திறமைகள் எப்படி அடுத்த கிளையன்ட் மீட்டிங்கில் உங்கள் அணி திறம்பட பேசுவதற்கு உதவுகிறது என்பதை நீங்கள் அறிவுறுத்துவதாக இருக்க வேண்டும். விற்பனைத் துறையில் இருந்தால், நீங்கள் எப்படி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளீர்கள் என்பது குறித்து இருக்க வேண்டும்.
அடுத்தவரின் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு பெண்கள் தங்கள் மதிப்பை வெளிப்படுத்தும்போது, அவர்களின் பேச்சுவார்த்தை நடத்தை சமூக ரீதியாக மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக கருதப்படுகிறது, மேலும், பெண்கள் இதில் வெற்றி பெற சிறந்த நிலையிலேயே உள்ளனர்.
3. வெறும் சம்பள உயர்வு மட்டுமே என்பதாக இல்லாதவாறு பேசுவது நலம்:
பேச்சுவார்த்தை பொருத்தமானதா என்பது தெளிவாகத் தெரியாதபோது பாலின வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. ஊதியங்கள் சமரசம் செய்யக்கூடியவை அல்ல என்பதாகவோ அல்லது சம்பள வரம்பு வெளிப்படுத்தப்படாத ஒரு வேலையாக இருக்கலாம். இந்த சந்தர்ப்பங்களில், பெண்களின் கோரிக்கைக்கு எதிர்வினை பின்னடைவாகப் போய் முடிய வாய்ப்புள்ளது. இந்த எச்சரிக்கை சம்பளம் அல்லது ஊதிய பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல், பதவி உயர்வு, வேலை ஒதுக்கீடுகள், வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளிட்ட பிற வாய்ப்புகளுக்கான பேச்சுவார்த்தைகளுக்கும் பொருந்தும்.
பேச்சுவார்த்தை பொருத்தமானதா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நம்பகமான ஆதாரங்களிலிருந்து தகவல்களைச் சேகரிக்கவும். உங்கள் தொடர்பு வலைப்பின்னலைப் பயன்படுத்தவும். ஆனால், உங்கள் வலைப்பின்னல் தொடர்புகளுக்கு அப்பாலில் இருந்தும் ஆலோசனைகளைப் பெறலாம். எடுத்துக்காட்டாக...
ஆண் ஆதிக்கம் செலுத்தும் வேலை அமைப்புகளில் உள்ள ஆண்களிடமிருந்து நீங்கள் ஆலோசனை பெற விரும்பலாம். அல்லது மூத்த பெண் ஊழியர்களிடமிருந்து விஷயங்களைக் கறக்கலாம். சரியான நபரைத் தேர்ந்தெடுத்து தகவல்களைச் சேகரிக்க வேண்டும், ஏனெனில், இதுவே பின்னடைவையும் ஏற்படுத்தலாம்; எனவே எச்சரிக்கை தேவை.
4. உங்கள் மனநிலையை சரிபார்த்துக் கொள்ளவும்:
சம்பள உயர்வு, பதவி உயர்வு பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வதற்கு முன் நீங்கள் எப்படிப்பட்ட பேச்சுவார்த்தையாளர் என்பதை முடிவு செய்து கொள்ளவும். உங்கள் திறமையையும் நீங்கள் செய்துவரும் பணியின் இன்றியமையாத் தன்மையையும் அதற்காகச் செலுத்தும் உழைப்பையும் நேரத்தையும் பற்றி தெளிவாகப் பேசினால் நல்லது. நேர்மறையான மனநிலை என்பது பேச்சுவார்த்தைகளை ஆர்வத்துடன் அணுகுவதாகும். இது ஏதோ சண்டையில் வெற்றி பெறுவது போல் அல்ல. மாறாக பிரச்சனையை எப்படி கையாள்கிறீர்கள் என்பதைப் பற்றியது.
மேலாண்மையோ, நிர்வாகமோ எடுத்த எடுப்பிலேயே உங்கள் கோரிக்கையை நிராகரிக்கலாம். இங்கு மனம் தளர்ந்து விடக்கூடாது, பேச்சுவார்த்தையின் தடத்தை மாற்றி விடக் கூடாது. நீங்கள் கேட்கும் சம்பள உயர்வைப் பெற முடியாவிட்டால், நீங்கள் ஒரு வளர்ச்சி வாய்ப்பை வெற்றிகரமாக பேரம் பேசலாம்; மீண்டும் ஆறு மாதங்களில் சம்பள உரையாடலை மறுபரிசீலனை செய்யலாம்.
5. சிறு உரையாடலின் முக்கியத்துவம்:
உங்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மேஜையில் எதிர்முனையில் இருப்பவரும் ஒரு மனிதர்தான். பிரதான பேச்சுவார்த்தைக்கு முன் சிறிய உரையாடலை அவருடன் நடத்துவது பயனளிக்கும். இது உங்களது கோரிக்கைப் பேச்சுவார்த்தையின் மீது தாக்கம் செலுத்தும். எனவே யாருடன் உரையாடுகிறீர்கள் என்ற விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள். அவரைப் பற்றிய விவரத்தை அவரிடமிருந்தே தெரிந்து கொள்ளலாம். இதற்கு சிறு உரையாடல் என்பது பயனளிக்கும்.
இது போன்று இன்னும் ஆலோசனைகளைப் பலரிடமிருந்து பெற்று பெண்கள் தங்கள் சம்பள உயர்வுக்காக பேச்சுவார்த்தை நடத்தினால் சம்பளத்தில் இருக்கும் பாலின வேறுபாடுகளை முற்றிலும் களைய முடியாவிட்டாலும் ஓரளவுக்குக் களைய முடியும்.
Edited by Induja Raghunathan