விபரீதமாகும் பப்ஜி (PUBG) விளையாட்டு: தொடரும் விபத்துகள் மற்றும் ஆபத்துகள்...
மத்திய பிரதேசத்தில் பப்ஜி விளையாட்டில் மூழ்கியிருந்த வாலிபர் ஒருவர் தண்ணீர் குடிப்பதாக நினைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக அமிலத்தை எடுத்துக் குடித்த சம்பவம் தான் அது. ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் அவர். ஆனால் அதையும் தாண்டி இந்த விளையாட்டின் விபரீதத்தை மக்கள் அறியாமல் அடிமையாவதே.
ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் ’பப்ஜி’ 'PUBG' விளையாட்டின் செல்வாக்கு மட்டும் அல்ல அதன் மீதான மோகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இச்செய்தி பப்ஜி மோகத்தால் ஏற்படும் விபரீதத்தை உணர்த்தி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பப்ஜி விளையாட்டு மீதான ஆர்வம் எல்லை மீறி, ஒரு மோகமாக மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கருதப்படும் நிலையில் இந்தச் செய்தி ஒரு ஆராய்ச்சிமணி என்றே சொல்லலாம். பப்ஜி மோகத்தால் ஏற்படும் விபரீத விளைவுகள் தொடர்பாக ஏற்கனவே பல செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றை பார்ப்பதற்கு முன் பப்ஜி விளையாட்டு பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
’பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்’ (Player Unknown's Battlegrounds) என்பதன் சுருக்கம் தான் பப்ஜி. இது ஒரு இணைய விளையாட்டு. இதை மொபைல் போன்களிலும் விளையாடலாம். பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தால் கடந்த ஆண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும், அதற்குள் அதிகம் விளையாடப்படும் வீடியோகேம்களில் ஒன்றாக பப்ஜி பிரபலமாகி இருக்கிறது.
ஆண்ட்ராய்டு, ஐபோன் என இரண்டு வகை போன்களிலும் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமாக இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பலரும் செல்போன் திரையை வெறித்தபடி இந்த விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.
இந்த விளையாட்டில் அப்படி என்ன இருக்கிறது? எனக்கேட்டால், இதுவும் ஒரு வகையான பாத்திரமேற்று விளையாடும் கேம் தான். மல்டிபிளேயர் ரோல் கேம் என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. அடிப்படையில் பார்த்தால், இதுவும் ஒரு சுட்டுத்தள்ளும் விளையாட்டு தான். ஆனால் சுவாரசியமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த விளையாட்டில், உறுப்பினர்கள் கேமுக்குள் குதித்து, ஆயுதங்களை சேகரித்துக்கொண்டு சுட்டுத்தள்ளியபடி முன்னேற வேண்டும். இறுதியாக ஒருவர் மட்டுமே மிஞ்சும் அளவுக்கு சுட்டு வீழ்த்தியிருந்தால் வெற்றி பெற்றதாக கருதப்படும். இதனிடையே ஆயுதம் சேகரிப்பது, ஒளிந்து கொள்வது, இணைந்து செயல்படுவது, போட்டியிடுவது என கேம் உள்ளங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் பல விஷயங்கள் இருப்பதாக சொல்கின்றனர்.
விளையாடுபவர்களை ஸ்மார்ட்போன் திரையிலேயே கட்டிப்போடும் அளவுக்கு மேலும் பல விஷயங்கள் இதில் இருப்பதாகவும் சொல்கின்றனர். பப்ஜி விளையாட்டு தொடர்பான புதிய அம்சங்களும், அப்டேட்களும் வெளியாகி மேலும் ஆர்வத்தைத் தூண்டி வருகின்றன.
ஆனால், விளையாடினோமா, வேறு வேலை பார்க்கச்சென்றோமா என்றில்லாமல், பலரும் இந்த விளையாட்டு பித்து பிடித்துவிடும் அளவுக்கு இதன் மேல் மோகம் கொண்டு விடுவதாகவும் கூறப்படுகிறது. சூழலையும், தன்னையும் மறந்து மணிக்கணக்கில் இந்த விளையாட்டில் மூழ்கிக் கிடப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.
இதனால் மாணவர்கள் படிப்பை கோட்டைவிடும் நிலை இருக்கிறது. பல கல்லூரி விடுதி வளாகங்களில் மாணவர்கள் ஸ்மார்ட்போனில் பப்ஜி விளையாட்டே கதி என இருப்பதை பார்த்து வார்டன்கள் திகைத்துப்போயிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு பெங்களூருவைச்சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர், பப்ஜி விளையாட்டு மோகத்தால் பாதிக்கப்பட்டு, இணைய மோகத்திற்கு சிகிச்சை அளிக்கப்படும் மனநல ஆலோசனை மையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
பப்ஜி; விளையாட்டை விட மோசமானது என ஜம்மு காஷ்மிர் மாணவர் சங்க, குற்றம் சாட்டியது. அதே போல கோவாவில் கணவர் ஒருவரின் பப்ஜி விளையாட்டு மோகத்தால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போடும் நிலை உண்டானதாகவும், பப்ஜி மோகத்தில் இருந்து விடுபட முடியாதவர் இறுதியில் குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டதாகவும் கடந்த ஆண்டு வெளியான மற்றொரு செய்தி திகைக்க வைக்கிறது.
குவைத் நாட்டில் பப்ஜி விளையாட்டு தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், 14 வயது சிறுவன் சக சிறுவனை கத்தியில் குத்தியதாகவும் அண்மையில் வெளியான மற்றொரு செய்தி தெரிவிக்கிறது. இந்நிலையில் தான் மத்தியபிரதேச வாலிபர் பப்ஜி மோகத்தால், தண்ணீருக்கு பதில் அமிலத்தை குடித்த செய்தி வெளியாகியுள்ளது.
வீடியோ கேம் விளையாட்டு மோகம் மிகையாவது, மதுப்பழக்கம் போலவே அடிமையாகும் தன்மை கொண்ட பாதிப்பு தான் என்று, உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள பின்னணியில் இந்தச் செய்திகளை பொருத்திப்பார்த்தால் இதன் விபரீதம் புரியும்.
பப்ஜி விளையாட்டு மோகம் காரணமாக மாணவர்களும் இளைஞர்களும், படிப்பிலும் வேலையிலும் முழு கவனம் செலுத்த முடியாமல் திண்டாடுவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் இந்த விளையாட்டின் உள்ளடக்கமும், அதில் கலந்திருக்கும் இரத்தமும் வன்முறையும் மனதளவில் பெரும் பாதிப்பை உண்டாகி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும் இந்த விளையாட்டு பழி வாங்கலையும், எதிர்மறை சிந்தனைகளையும் ஊக்குவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்தியாவைப்போலவே சீனாவிலும் பப்ஜி மோகம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஏற்கனவே, இணைய மோகமும், வீடியோகேம் மோகமும் அதிகமாக இருப்பதால், பப்ஜி மோகம் சீனாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக 13 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் பப்ஜி விளையாட முடியாத அளவுக்கு டிஜிட்டல் பூட்டு போடும் முறையை பப்ஜி நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
பப்ஜி விளையாட்டு அதன் பயனாளிகள் மத்தியில் ஆர்வத்தையும் ஈடுப்பாட்டையும் ஏற்படுத்தியிருப்பதைவிட அதிகமாக அதன் தாக்கம் காரணமாக சமூகத்தில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.