Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மழைநீர் சேகரிப்பில் ஜீரோவாக இருப்பவர்களை ஹீரோ ஆக்கும் ‘ரெயின்மேன்’ சக்திவேல்!

நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருந்தால் அடுத்த தலைமுறை தண்ணீரை கண்ணீரில் மட்டுமே பார்க்க முடியும். சரியான திட்டமிடலுடன் சின்னச் சின்ன மழைத்துளிகளையும் சேர்த்து வைக்க சிறப்பான நீர் மேலாண்மை திட்டத்தை வைத்துள்ளார் ‘ரெயின்மேன்’ சக்திவேல்.

மழைநீர் சேகரிப்பில் ஜீரோவாக இருப்பவர்களை ஹீரோ ஆக்கும் ‘ரெயின்மேன்’ சக்திவேல்!

Monday July 22, 2019 , 4 min Read

விவசாயம் செய்யப் போதுமான தண்ணீர் இல்லை, நிலங்கள் வறண்டு கிடக்கின்றன என்று காவிரி டெல்டா விவசாயிகள் கதறிய போது அதன் கொடூரம் என்ன என்பதை யாராலும் உணர முடியவில்லை. ஆனால் இப்போது குடிப்பதற்கும், குளிப்பதற்குமே தண்ணீர் கிடைக்கவில்லை என்கிற நிலை வந்த பிறகு தான் தமிழகம் எத்தகைய தண்ணீர் வறட்சியில் சிக்கி இருக்கிறது என்பது பலருக்கும் புரிய வந்திருக்கிறது.


நீர் நிலைகளை மீட்க மக்கள் தன்னெழுச்சியுடன் நிதித் திரட்டி ஏரி, குளங்களை சுத்தம் செய்து மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் சிறப்பான பணிகளை செய்து வருகின்றனர்.

Rainman

'ரெயின்மேன்’ சக்திவேல், மழைநீர் சேகரிப்பு பணிகள் (வலது)

நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது இயற்கை வரமாக தரும் மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது வறட்சி.


மழைநீர் சேமிப்பு குறித்து எதுவுமே தெரியவில்லை யாரை அணுகுவது என்று குழப்பமா?

கவலையை விடுங்க இளம் வயதிலேயே சமூக அக்கறையுடன் மழை நீர் சேகரிப்பு குறித்து கற்று ஆராய்ந்து, 4 ஆண்டு அனுபவத்துடன் சிறப்பான நீர் மேலாண்மை அமைத்துத் தருகிறார் மதுரையைச் சேர்ந்த சக்திவேல். சத்தமில்லாமல் எந்த விளம்பரமும் செய்யாமலே பிரபலமடைந்துள்ளார் ‘ரெயின்மேன்’ சக்திவேல்.

“தண்ணீர் பிரச்னையை தீர்க்க தற்போது செய்யப்படும் ஏற்பாடுகள் எல்லாமே தற்காலிகமானவை தான். முடிந்தவரை நிலத்தடி நீரை உறிந்தாயிற்று, நிலத்தடி நீரும் வறண்டு போனதால் தண்ணீர் லாரிக்கு போன் போட்டு எப்போது வரும் என காத்திருக்கிறார்கள். மக்கள் இப்போதாவது, இல்லாத போது கிடைக்காத நீரை மழையாகக் கிடைக்கும் போது சேமிக்க என்ன செய்திருக்கிறார்கள் என்று சிந்தித்தாலே போதும். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களுக்கு இந்த விழிப்புணர்வு வந்துள்ளது. சென்னை மக்களும் மெல்ல உணரத் தொடங்கியுள்ளனர்,” என்கிறார் சக்திவேல்.

600 சதுர அடி வீடோ, 2 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்போ, விவசாய நிலமோ எதுவாக இருந்தாலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமைத்துத் தருகிறார் சக்திவேல். மழைநீர் சேமிப்பு மட்டுமின்றி, நீர் மறுசுழற்சி, போர்வெல் ரீசார்ஜ் என நீர் மேலாண்மையில் A to Z அனைத்தையும் தானே முன்நின்று திட்டமிட்டு சிறப்பாக செய்து தருகிறார்.


மதுரையைச் சேர்ந்த சக்திவேல் தென்தமிழகத்தின் முதல் மழை இல்லத்தை உருவாக்கியவர். கல்லூரி காலத்திலேயே வைகை நதியை பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கிய சக்திவேல் நீர் மேலாண்மையில் தமிழகம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதை உணர்ந்தார்.

”ஊருக்கு உபதேசம் செய்யும் முன்னர் மாற்றத்தை என் வீட்டில் இருந்தே தொடங்கினேன். ‘மழை இல்லம்’ அல்லது ‘பசுமை இல்லத்தில்’ சுத்தமான மழை நீரை ஒரு தொட்டியில் சேமித்து காற்று, வெயில் படாமல் வைத்து வடிகட்டிகள் மூலம் அந்த நீரை குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்த வழிசெய்தேன்.”
rainwater

மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்பார்வையிடும் சக்திவேல்

நிலத்தடியில் நீரை சேமிக்கக் குழிகளை அமைத்தேன். கழிவு நீர் சேமிப்பு தொட்டியில் கல்வாழை செடிகளை நடுவதன் மூலம் அதன் நச்சுத்தன்மை நீங்கி மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை, வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம் என்பதையும் செய்து காட்டினேன்.

விவசாய நிலங்களில் நீரை சேமிக்க பசுமைக் குட்டைகளை அமைத்தேன் என்று தான் ஏற்படுத்திய நீர் சேமிப்புத் திட்டங்களை பட்டியலிடுகிறார் ரெயின்மேன்.

தனிவீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள் ஏன் ஒரு தெருவுக்கே கூட மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்தித் தரும் ‘கம்யூனிட்டி பேக்கேஜ்களை’ செய்து தருகிறார் சக்திவேல். மழைநீர் சேகரிப்பை குறைந்த விலையில் செய்து முடித்துவிடலாம் என்று சொல்பவர்கள் செம்மையான நீர் மேலாண்மையை அமைத்துத் தருவதில்லை.

அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், நீரியல் மற்றும் கட்டுமான அறிவு உள்ளவர்கள் மட்டுமே மழைநீர் சேகரிப்பை சிறப்பாகச் செய்கின்றனர். அவர்களும் கூட தங்கள் வீட்டிற்காக மட்டுமே என தங்களது வட்டத்தைச் சுருக்கிக் கொள்கின்றனர்.


2015ம் ஆண்டு முதலே மழை நீர் சேகரிப்பில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சக்திவேல் தமிழகம் முழுவதும் சுற்றி நீர் மேலாண்மை பற்றி கற்று ஆராய்ந்து பலரின் அனுபவங்களை திரட்டி எந்த மண்ணிற்கு என்ன மாதிரியான நீர் சேகரிப்பு கை கொடுக்கும், மொசைக் மற்றும் டைல்களாலேயே மூடிக்கிடக்கும் தரையிலும் எப்படி நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்ய முடியும் என துள்ளியமான திட்டமிடல்களைச் செய்யும் கெட்டிக்காரராகத் திகழ்கிறார்.


குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதலே மழைநீர் சேகரிப்பை அமைத்துவிடலாம். வீடுகளுக்கு ஏற்ப மழைநீர் சேகரிப்பு அமைப்பதற்கான கட்டணமும் வேறுபடும். திட்டமிடல்களுக்கு செலவில்லை என்றாலும் புதிய நீர் மேலாண்மையை ஏற்படுத்த தேவையான பைப்கள், கட்டுமானப் பொருட்கள், கட்டுமான பணிகளை செய்யும் ஆட்களுக்கான கூலி என இவற்றையெல்லாம் உள்ளடக்கியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிறார் சக்திவேல்.

water


மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை ஏற்படுத்தித் தருவதோடு இல்லாமல் இது பற்றிய ஆலோசனைகளையும் தொலைபேசி மூலம் வெளி மாநிலவாசிகளுக்கும் அளிக்கிறார் இவர்.

இயற்கைக்கு செய்த தீங்கால் மனமிறங்காமல் இருந்த வருண பகவான் இந்த ஆண்டு கருணைகாட்டத் தொடங்கி இருக்கிறார். “காலத்தே பயிர் செய்” என்பது போல தண்ணீருக்காக கண்ணீர் விட்டவர்களும், கஜானாவை காலி செய்ய வைத்த வறட்சி நிலை மீண்டும் உங்களுக்கு ஏற்படாமல் இருக்க இது அவசியம்.

மழைநீர் சேகரிப்புக்காக இன்று நீங்கள் செய்யும் செலவு எதிர்காலத்தில் நீங்கள் அறுவடை செய்யப் போகும் லாபம். அந்த லாப கணக்கிற்கு அடித்தளம் போட்டுத் தருகிறார் ரெயின்மேன் சக்திவேல். தென்மாவட்டங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை செய்து தந்து வந்த சக்திவேல் தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் நீர் மேலாண்மையை செய்து வருகிறார்.

4 ஆண்டுகளாக நீர் மேலாண்மைப் பாதையில் பயணித்து வந்தாலும் கடந்த ஓராண்டில் மட்டுமே 100 வீடுகளுக்கும் மேலாக நீர் மேலாண்மையை செய்து தந்திருக்கிறேன். மக்களுக்கு தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நம்மாழ்வார் கூறியது போல. “நீரை நிலத்துக்கடியில் தேடாதே வானத்தில் இருக்கும் கிடைக்கும் நீரை சேமித்துக் கொள்” என்ற பாதையில் இப்போது தான் மக்கள் பயணப்படத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிறார்.

agriland

இளம் வயதிலேயே நீர் மேலாண்மை துறையில் சமூக சேவை கலந்த தொழில் முனைவராக பயணித்து வரும் ரெயின்மேன் சக்திவேல் எந்த விளம்பரமும் செய்யாமலேயே, அவர் செய்து கொடுத்த மழை இல்லங்களே அவருக்கான விளம்பரங்களாக சமூக வலைதளங்களில் பரவி வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்துள்ளது.

மழை நீர் சேகரிப்பின் பிதாமகனாக வலம் வரும் ரெயின்மேன் சக்திவேலின் ஆலோசனைகளைப் பெற 9159158739 என்ற எண்ணில் அழையுங்கள்.

முகநூல் பக்கம் : Sakthi RainMan